தமிழ்ச்சூழலில் தொண்ணூறுகளில் ஏற்பட்ட புதிய தலித் எழுச்சியின் விளைவாக்ப் பல ஆக்கபூர்வான நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன. ஏறத்தாழ அரை நூற்றாண்டாக அமுக்கப்பட்டுக் கிடந்த மாமேதை அம்பேத்காரின் எழுத்துக்கள் தொகுக்கப்பட்டு, அவரவர் தாய்மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுப் பரவலான வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இது மாபெரும் சாதனையாகக் கருதத்தக்கது ஆகும். அம்பேத்காரின் எழுத்துக் குறித்த வாசிப்பும் விவாதமும் படித்தவர்கள் மத்தியில் மாபெரும் அலைகளை எழுப்பியுள்ளன. தொடர்ந்து அயோத்திதான் பண்டிதரின் எழுத்துக்கள் தொகுக்கப்பட்டதை முக்கியமா நிகழ்வாகக் கருத வேண்டும். மேலும் பஞ்சமி நிலம் குறித்த ஆவணத் தொகுப்புக்களும் வழக்கு விவரங்களும் ஒடுக்கப்பட்ட மக்கள் நடுவில் புதிய விழிப்புணர்வு பெறுவதற்கான ஆதார சக்திகளாக அமைந்துள்ளன.