பதிற்றுப்பத்து எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதின்மலைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பு. இந்த நூலில் முதற்பத்தும், இறுதிப்பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன. இந்த எண்பது பாடல்கள் இரண்டு சேரர் மரபைச் சேர்ந்த எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன. உதியஞ்சேரல் வழித்தோன்றல்களான ஐந்து சேர மன்னர்களும் அந்துவஞ்சேரல் இரும்பொறை வழித்தோன்றல்கள் மூவரும் அந்த 8 பேர்.
இந்நூற்பாக்கள் அகவாழ்வோடு இணைந்த புறவாழ்க்கையோடு தொடர்புடைய புறப்பொருள் பற்றிவை ஆகின்றன. சேர மன்னர்களின் காதற்சிறப்பு, கல்வித் திறம், மனத் திண்மை, புகழ் நோக்கு, ஈகைத் திறம், கலைஞர் காக்கும் பெற்றி ஆகிய பண்புகளையும் படை வன்மை, போர்த்திறம், குடியோம்பல் முறை, பகையரசர் பால் பரிவு, கவிஞரை காக்கும் பண்பு பெண்களை மதிக்கும் மாண்பு ஆகிய ஆட்சி மற்றும் பல்வகை திறன்களையும் சித்தரிக்கின்றன.