நவீன காலத்திய இலக்கியமான நாவலுக்குப் பல்வேறு சிறப்புப் பண்புகள் உள்ளன. சமூக உறவுகளை நுட்பமாகவும், விளக்கமாகவும் முழுமையாகவும் நாவலில் விவரிக்க இயலும். சமகால வாழ்வியல் நிலைமைகளை ஸ்தூலமான ( Concrete ) தன்மையுடன் விளங்கி கொண்டு இலக்கியத்தின் இயக்க வியல் பண்புகளை உணர்ந்து கொள்ளும் படைப்பாளர்களால் சிறந்த நாவல்கள் உருவாக்கப்படுகின்றன. இவர்களால் சமூக உறவுகள் படிக்கத் தகுந்த கதை வடிவில், பாத்திரங்களின் திட்டமிட்ட கதை நகர்வில், ரசிக்கத் தகுந்த கலைப் படைப்பாய் நாவல்கள் படைக்கப்படுகின்றன. படைப்பாளனின் சமூக நோக்கும் வர்க்கச் சார்பும் நாவலில் நேரடிச் செல்வாக்கு செலுத்துபவை.