“வீரபத்திரப் பெருமானே! இங்கு சண்டை வேண்டாம். இது சத்திரம்” என்று
கூவிய சத்திரக்காரன் இரண்டு எட்டில் வீரபத்திரனை அடைந்து அவனைத் தடுக்க
முயன்றான். ஆனால் வீரபத்திரன் அவனை இடக் கையால் அனாயாசமாகத் தள்ளிவிட்டுத்
திரும்பித் துறவியை நோக்கினான்.
துறவி எழுந்து நின்று சிரித்துக்
கொண்டிருந்தான். சிரிப்பு யமச் சிரிப்பாயிருந்தது. அவன் கையில் மடக்குவாள்
நீண்டு, சாப்பாட்டு அரங்கின் விளக்கில் நாகசர்ப்பம்போல் மின்னிக்
கொண்டிருந்தது.
பழங்கள் வெகு துரிதமாக உரிக்கப்படுவதையும், சாமியார்
வாய்க்குள் சட்டென்று மறைவதையும் பார்த்துப் பக்கத்தில் சாப்பிட்டுக்
கொண்டிருந்தவர்கள் மட்டுமின்றி சத்திரக்காரனும் பிரமித்தான்
“சாமியாருக்குப் பாம்பு வயிறு போலிருக்கிறது. சாப்பிடும் வேகத்தில்
சத்திரத்தையே ஒழித்துவிடுவான் போலிருக்கிறது” என்று சொல்லிக் கொண்டான்
சத்திரக்காரன் உள்ளூற. அந்தச் சமயத்தில் பரிமாறும் ஏவலாளி ஒரு குவளையில்
பாலும் கொண்டு வைக்கவே அதை பரம பிரீதியுடன் பார்த்தான் வாலிபத் துறவி. அதை
எடுத்து அவன் குடிக்க வாய்க்கருகில் கொண்டுபோன சமயத்தில்தான் அந்த
நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்பொழுது கேட்டது வெளியே பலமான வெறிபிடித்த
சிரிப்பு ஒன்று. அந்தச் சிரிப்பைத் தொடர்ந்து தடித்தனமான காலடிகளும்
கேட்டன. நல்ல குடி வெறியுடனும் பெருத்த மீசையுடனும் சிவந்த கண்களுடனும்
திறந்த வாயிற்கதவைத் தட்டி வேண்டுமென்றே ஓசை கிளப்பிக் கொண்டு உள்ளே
நுழைந்தான் ஒரு வீரன். அவன் தனது பருமனால் உள் வாயிற்படியை அடைத்துக்
கொண்டு சாப்பிடும் கூடத்தின் மீது ஒருமுறை கண்களை ஓட்டினான். பிறகு
கச்சையில் தொங்கிய பலமான வாளை அனாவசியமாகத் தட்டிச் சத்திரக்காரனை நோக்கி,
“யாரவன், அதோ சாப்பிடுகிற சாமியார்?” என்று வினவினான்.
“யாரோ வெளி ஊரிலிருந்து வந்திருக்கிறார். இன்றுவரை பார்த்ததில்லை!” என்றான் சத்திரக்காரன் கிலி பிடித்த குரலில்.
அதற்கு
மேல் ஏதும் பேசாத அந்த முரடன் தனக்குப் பின்னால் நின்றிருந்த இரு வீரர்களை
நோக்கி, “டேய் நீங்கள் இங்கேயே நில்லுங்கள். ஆனைக்கட்டி மதுவை நான்
ருசிபார்த்துவிட்டு வருகிறேன்” என்று கூறிவிட்டுச் சாப்பிடுமிடத்திற்கு
வந்து ஒரு மஞ்சத்தின் மீது தன் பெருங்கால்களை அகற்றிக் கொண்டு உட்கார்ந்து
“யாரடா அங்கே; என் செலவில் எல்லாருக்கும் மது கொண்டுவா' என்று
உத்தரவிட்டான்.