சமய இலக்கியத் தோய்வைப் பெரிதும் பயன்படுத்திக்கொண்டு புதிதாய்ப் பிறந்தவள், இந்த மார்கழிப்பாவை. வேதங்கள் அனைத்திற்கும் வித்தாகும் கோதை தமிழுள், நாடகமாக முப்பது காட்சிகளை முன் விரிப்பது திருப்பாவை. அடிமுடி அறியாவடிவில் அண்ணாமலைத் தலத்தில் எழுந்த "முன்னைப் பழமைக்கும் முன்னைப்பழம்பொருளை, பின்னைப்புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றித்தான புதுமையை', தமிழாக்கித் தந்தது மணிவாசகத் திருவெம்பாவை மற்றும் திருப்பள்ளிஎழுச்சி. வைணவ ஆண்டாள் அமுதையும், சைவ-மாணிக்கத் தேனையும் தம் கொங்குத் தமிழில் குழைத்து, இனிக்க இனிக்கத் தந்திருக்கிறார் கவிஞர் சிற்பி. கோவை வானொலியின்மூலம் குளிர்மார்கழியின் பனிக்காற்றில் உலா வந்த பைந்தமிழ் உரைப்பனுவல், இந்நூல்.