உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது’ என்பார்கள். உண்மையில் எந்த உழவனும் கணக்குப் பார்ப்பது இல்லை. பச்சை நெல்லின் பால் வாசம் வீசும் மார்கழிப் பனியில், வரப்பில் நடந்தபடியே தன் குழந்தைகளைப் போல பயிர்களை நேசிக்கும் விவசாயி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் பார்ப்பான். யூரியா, டி.ஏ.பி., விலையைப் பார்ப்பான். ஒருபோதும் வரவு-செலவு கணக்குப் பார்ப்பது இல்லை. உழுவதும் உழைப்பதும் தனது பிறவிப் பெருங்கடன் என்று எண்ணியே காலம் எல்லாம் சேற்றில் நிற்கிறார்கள் விவசாயிகள். ஆனால், அது பார்க்கப்பட வேண்டிய கணக்கு. 'விவசாயிகளின் நிலை பரிதாபம்’ என்று அனுதாபப்படுவது இருக்கட்டும். அந்த அவலம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இது, மும்பை பங்குச் சந்தையின் வணிகக் கணக்கு அல்ல; வங்கி அரை வருடக் கணக்கு முடிவும் அல்ல. நம் ஊருக்கும் உலகுக்கும் சோறு போடும் உழவர்களின் வாழ்க்கை குறித்த குறுக்குவெட்டுச் சித்திரம்!
தஞ்சாவூருக்கு அருகே உள்ள காசவளநாடு புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி, குமார். இவர் இப்போதுதான் அறுவடையை முடித்துள்ளார். ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை ஒரு ஏக்கருக்கு எவ்வளவு செலவானது என்று குமார் சொல்லும் வரவு-செலவுக் கணக்கு இதோ..