தமிழர்களின் பாரம்பர்ய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் புற்றுநோய்க்குத் தீர்வு கிடைக்குமா. இதற்கான தேடலில் மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்களைப் போன்று நோயாளிகளும் இறங்கியுள்ளனர். நோய்க்கு தீர்வைத் தேடியும், வலியிலிருந்து விடுதலை பெற உதவும்படியும் நோயாளிகள் சித்த மருத்துவர்களை அணுகத் தொடங்கியுள்ளனர். சிலரோ, ஒருபடி மேலேபோய் `எனக்கு இருக்கிற கேன்சர் பாதிப்புனால நான் எத்தனை நாள் உயிரோட இருப்பேன்னு எனக்குத் தெரியாது. இருக்கிறவரை தரமான வாழ்க்கை வாழணும்' என்று கேட்கிறார்கள்.சித்த மருத்துவ முறையை உலக அளவில் கொண்டு சேர்ப்பதில் உள்ள வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்து விவாதிக்கும் தேசிய கருத்தரங்கத்தை இன்று மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் சென்னையில் நடத்தியது. கருத்தரங்கில் சித்த மருத்துவர் கு.சிவராமன் புற்றுநோய் சிகிச்சையில் `சித்த மருத்துவத்துக்கான பங்கும் இடர்பாடுகளும்' குறித்துப் பேசினார்.