திணிக்கப்பட்ட தேசிய விடுதலைப் போராட்டத்தில் போராளியாகிப் பின்னர், புலங்கள் பல பெயர நேரும் அலைக்கழிக்கப்பட்ட வாழ்வின் சட்டகங்களில் அடங்க மறுத்துத் திமிரும் ஆன்மாவின் ஓர்மத்தின் உயிர்ப்பை ஜீவமுரளியின் பதிவுகள் நெடுகிலும் காணலாம்.
எழுத்தும் படைப்பும் வானிலிருந்து பெறும் வரங்களோ படைப்பாளி வானிலிருந்து மண்ணில் வந்து விழுந்துவிட்ட பிறவியோ அல்ல. சமூக வாழ்வு கட்டமைத்துத் தந்த நினைவுகளை அழித்து விட்டு வருகின்ற கனவொன்றிற்காகக் காத்திருக்கும் இவரது எழுத்துக்கள் அதிகாரத்தை வேடம் போடாமல் எதிர்த்து நிற்பவை.
சமூக அநீதியைக் கேட்டு எழுதும் அனுபவத்திற்கும், வாழ்ந்து எழுதும் அனுபவத்திற்கும் இடையிலான விசால இடைவெளியை ஜீவமுரளியின் எழுத்து வரிகளின் இடைவெளிகளில் பயணிக்கையில் உணர முடியும்.
சாதியக் கொடுமைகளை வாழ்ந்து பெற்ற அனுபவத்தின் வலியில் கனலும் கோபமும் எதிர்ப்பும் இவரது எழுத்தின் இயல்பான வெப்பத்தின் காரணங்கள் சுவாசத்திற்கு அடுத்ததாக சமரசமும் சரணாகதியுமே மனித இருப்பின் அவசியங்களாகிப் போய்விட்ட அவலச் சூழலில் அதிகாரத்தின் எந்த வடிவத்துடனும் சமரசம் செய்ய மறுக்கும் தனித்த தனித்துவமிக்க ஒரு குரல் இந்தப் பதிவுகளில் ஒலிக்கின்றது.
கடவுளிடமிருந்தும் சூரியனிடமிருந்தும் தொலைவில் வந்து விழுந்துவிட்ட ஒரு கனவினைத் தொட்டுப் பார்க்க வேண்டுமென்றால் ஜீவமுரளியின் எழுத்துகளைக் கொஞ்சம் படிக்க வேண்டும்