குழந்தைப் போராளிகள் எல்லாவிதக் கொடுமைகளிலும் பங்கெடுத்துக் கொள்வார்கள். பல குழந்தைகளிற்கு கொலையும் சித்திரவதையும் மிகப் பிடித்தமான வேலைகள். கொலைகளாலும் சித்திரவதைகளாலும் தங்களது தளபதிகளின் 'நன்மதிப்பை'க் குழந்தைகளால் சீக்கிரமே பெற்றுவிட முடியும். போர்க் கைதிகளையும் உளவாளிகள், துரோகிகள் எனக் குற்றம் சுமத்தப்பட்டவர்களையும் குரூரமாகச் சித்திரவதை செய்தும் புதைகுழிகளிற்கு அனுப்பியும். ஒரே நாளில் இராணுவப் படிநிலைகளை ஒரே தாவாகத் தாவி உயரே சென்றுவிடக் குழந்தைகளால் முடியும். கைதிகளுக்கு நாங்கள் இழைக்கும் உச்சபட்சச் சித்திரவதைகள் எதிர்காலத்தில் எங்கள் உளவியலை எவ்வாறு பாதிக்கப்போகின்றன என்பதை அறியாத குழந்தை களாக நாங்களிருந்தோம். அந்தக் கொடுமை வாழ்நாள் முழுவதும் எங்களை வதைத்துக் கொண்டேயிருக்கும். நாங்கள் தலைவரின் பெயரால் அவரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக வகை தொகையின்றிக் கொடுமைகளைச் செய்தோம். பதிலுக்கு அவர் எங்கள் மீதேறிச் சவாரிவிட்டார். நாங்கள் தலைவரால் சாவதற்கென்றே வளர்க்கப்பட்டோம். நாங்கள் கற்பூரத்தால் வார்க்கப்பட்ட பறவைகள்.
இன்று உலகம் முழுவதும் இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைப் போராளிகள் யுத்தமுனைகளில் தள்ளப்பட்டும் பாலியல் வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டும் இயல்பான குழந்தைத்தனங்கள் சிதைக்கப்பட்டும் ஏன்? எதற்கு? யாருக்கு? என்று தெரியாமலேயே சாவின் வாசலில் நிறுத்தப் பட்டிருக்கிறார்கள். குழந்தைப் போராளிகளின் வரலாற்று மௌனத்தை இந்த தன் வரலாறு நூல் மூலம் சைனா கைறெற்சி உடைத்தெறிகிறார். 2002இல் டொச்மொழியில் வெளியிடப்பட்ட இந்நூல் தொடர்ந்து ஆங்கிலம், டெனீஸ், ஸ்பானிஷ், டச், செக், பிரெஞ்சு மொழிகளிலும் வெளியிடப்பட்டது.