சில மாதங்களுக்கு முன் தினமணி கதிரில் 'திருமதி தலைவர் ' கதையைப் படித்தேன். ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதும் அதில் ஆண்கள் செலுத்தும் ஆதிக்கம் பற்றி நிறையச் செய்திகளும் விமர்சனங்களும் வரத் தொடங்கின. ஊராட்சித் தலைவர்களாக இருந்த ஆண்கள் தங்கள் மனைவிகளையே அப்பதவிக்கு நிறுத்தி வெற்றி பெற வைத்துவிட்டு அவர்களை வெறும் கையெழுத்துப் போடுவதற்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டு தங்கள் பழைய அதிகாரத்தை அப்படியே தக்க வைத்துக் கொண்டுள்ளனர் என்பது நிதர்சனம். ஆனாலும் ஊராட்சித் தலைவர் கலந்து கொள்ள வேண்டிய எல்லா இடங்களுக்கும் இந்தக் கணவர்கள் போக முடியாது. மனைவியைத் தான் அனுப்ப வேண்டும். அப்படியான சந்தர்ப்பங்கள் அமையும் போது பெண்களின் தனித்திறன் வெளிப்பாட்டுக்கான சாத்தியங்கள் கிடைக்கின்றன. இன்னும் சில வருசங்களில் பெண்களே முழுமையாகச் செயல்படும் வகையில் மாற்றங்களும் ஏற்படக்கூடும். இத்தகைய ஒரு விஷயத்தைக் கதையாக்க முடியுமா என்பது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. கதைக்கு எந்த விஷயமும் கருவாகும், அது தொடர்பான அனுபவம் ஏற்படுமானால் என்பதற்கு ஆதார சாட்சியாகத் திருமதி தலைவர் தோன்றியது.