மனித உடலின் இயக்கங்கள் (எலும்பு மண்டலம் ) மனித உடலின் அனைத்துச் செயல் பாடுகளும் எலும்புகள் மற்றும் தசைகளின் இயக்கத்தின் உதவியால் நடைபெறுகின்றன. மனித உடல் எலும்புகளால் ஆன கட்டமைப்பால் உருவாக்கப்பட்டு, தசைகளால் இணைக்கப்பட்டுள்ளது. இக்கட்டமைப்பு எலும்பு மண்டலம் எனப்படுகிறது. பெரும்பாலான தசைகள், உடலின் பல்வேறு உறுப்புகளின் இயக்கத்திற்கோ, உடல் நிலையாக நிற்பதற்கோ உதவுகின்றன. தசைகளால் எலும்புகளைத் தள்ள இயலாது, இழுக்க மட்டுமே இயலும். பல தசைகள் இணைகளாகப் பணியாற்றுகின்றன. எலும்புகளுடன் தசைகள், தசை நார்களால் இணைக்கப் பட்டுள்ளன. தசை நார் என்பது தடித்த இழை அல்லது தகடு போன்ற இணைப்புத் திசுவின் மாறுபட்ட அமைப்பாகும். ஒரு தசை இறுக்கப்படுவதன் மூலம் அதன் நீளம் சுருக்கப்பட்டு அதனுடன் இணைந்த எலும்பு இழுக்கப்படுகிறது. இறுகிய இத்தசையானது தளர்த்தப்பட்டு, அதன் இணைத் தசை இறுக்கப்படுவதன் மூலம் அந்த எலும்பு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறது. எலும்பு கடினமானது. இது வெண்ணிற சாம்பல் நிறப் பொருள்களால் ஆனது. இதில் மூன்றில் இரண்டு பங்கு கனிமச் சேர்மங்கள் அல்லது கால்சியம், பாஸ்பேட், கார்பனேட்டுகள் போன்ற தனிமங்கள் அடங்கியுள்ளன. மீதி ஒரு பங்கு கரிமப் பொருள்களால் ஆனது. இது எளிதில் உடையக்கூடியதாகவும் உள்ளது. எலும்புகள் ஒரு திடப்பொருள் அல்ல. இவை வெளிப்புறத்தில் குறைந்த எடைகொண்ட கடினமான படலத்தாலும் நெருக்கமான பல அடுக்குகளாலும் ஆன எலும்புத் திசுக்களால் ஆனவை. எலும்பின் மையத்தில் கடற்பஞ்சு போன்ற பொருள்கள் உள்ளன. இவை எலும்பு மஜ்ஜை எனப்படும். இவை இரத்த சிவப்பணுக்கள் மற்றும் இரத்த வெள்ளையணுக்களை உற்பத்தி செய்கின்றன. நமது உடலின் தனித்தன்மை கொண்ட இன்றியமையாத, முக்கிய உறுப்புகளான மூளை, நுரையீரல், இதயம் போன்ற உறுப்புகளை எலும்புகள் பாதுகாத்துப் பராமரிக்கின்றன.