வாழ்க்கை, சகலத்தையும் புரட்டிப்போடும் வல்லமை வாய்ந்தது. நினைத்தே பார்த்திராத மாற்றம் - ஒரே நொடிப் பொழுதில் சாத்தியமாவதும், நினைத்துப் பார்க்கும் மாற்றம், நிகழவே நிகழாத சத்தியமாவதும் வாழ்க்கை வரம். சம்பிரதாயக் கட்டமைப்புகளைக் கேள்விக்கு உள்ளாக்க வேண்டிய கட்டாயச் சூழலைத்தான் ஆதிகாலம் தொட்டு இலக்கியம் சொல்கிறது. அப்பன் வெட்டிய கிணறு என்று உப்பு நீரைக் குடிக்கும் பரிதாப நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய சூழலில்தான் இலக்கியம் செல்கிறது. நல்லன அல்லாதவற்றையும், தேவை இல்லாத வற்றையும் உதறித் தள்ளிக் கொண்டே வந்திருக்கும் சமூகம் - ஒவ்வொரு வளர்சிதை மாற்றத்துக்கு முன்னும் ஓராயிரம் நெருப்புக் குழிகளைத் தாண்டித்தான் வளர்ந்திருக்கிறது.