"வலது நுரையீரல் பேசுகிறது " அது பேசவில்லை . அதைப் பேச வைக்கிறார் அமரர் டாக்டர் அ. கதிரேசன் அவர்கள் பல மருத்துவ நூல்களை எழுதி பல மருத்துவ நிபுணர்களின் பாராட்டைப் பெற்ற டாக்டர் அ. கதிரேசன் அவர்கள் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதிலும் வல்லவர், நல்லவர். அவருடைய உள்மனம் உலக மக்களின் உடல்நலம் பாழ்பட்டுப் போகக் கூடாது, பழுதடைந்து போகக் கூடாது என்று உறுத்தல் கொள்கிறது. புகைப்பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை வலது நுரையீரலைப் பேசவிட்டு நம் கருத்தில் பதிய வைக்கிறார்.
''அவர் சிகரெட்டுட்டுக்கு அடிமையாகிவிட்டார். புகையின் கரி என்னுள்ளே படிவதால் எனது மூச்சுவிடும் பணி பாதிக்கப்பட்டு நான் பல நோய்களுக்கு, குறிப்பாகப் புற்று நோய்க்கு ஆளாகிறேன்" என்று வலது நுரையீரல் புலம்புகிறது. அந்தப் புலம்பல் ஒவ்வொரு மனிதருக்கும் எச்சரிக்கை உணர்வாக வேண்டும் என்று டாக்டர் கதிரேசன் வலியுறுத்துகிறார். சுற்றுச் சூழல் மாசுகள் நுரையீரலைப் பாதிக்காத வண்ணம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று வழிகாட்டுகிறார்.