காளி அப்படிச் சொல்லிவிட்டு சைக்கிள் பெல்லை, ஒரு சீரான தாள லயத்தில் அடித்துக்கொண்டே போனான். ஒருவன் எவனிடமாவது மாட்டிக்கொண்டால், அடுத்தவனுக்கு இயற்கையிலேயே எழும் மகிழ்ச்சியை அந்த ட்ரிங்... ட்ரிங்... ட்ட்ட்ரிங்ங்... ட்ட்ட்ரிங்ங்... ட்ரிங்... ட்ரிங்... உணர்த்தியது.
எனக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. இத்தனைக்கும் டி.ஆரால் தேடப்படுபவன் நான் அல்ல. என் அருகில் அமர்ந்திருக்கும் ரகு.
'எதுக்குடா டி.ஆர். என்னையத் தேடுறாப்லயாம்?' - லேசாகச் செருமிக்கொண்டே கேட்டான் ரகு. அந்த 'எதுக்குடா?’-வில் லேசான பதற்றமும் 'என்னைய’ என்பதில் அதிகப் பதற்றமும் நன்றாகவே தெரிந்தது.