'இலக்கியப் பரல்கள்' எனப் பெயரிய இத் தொகுப்பு நூலில் பதினான்கு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியம் முதலாக இன்றைய ஹைகூ கவிதை வரையிலான பல்வேறு இலக்கிய வடிவங்களும் வகைகளும் இந்நூலில் அலசி ஆராயப் பெற்றுள்ளன. ஒரு வகையில் இந்நூல் கலம்பக இலக்கியம் போல ஆய்வுலகில் பறவைப் பார்வையில் வடிவாலும் பொருளாலும் வேறுபட்டு விளங்கும் பல்வேறு இலக்கியங்களையும் ஒன்றிணைத்து ஆராய முற்பட்டுள்ளது. ஓர் ஆய்வாளர் முன்னைப் பழமையோடு, பிள்ளைப் புதுமையிலும் ஆர்வமும் ஈடுபாடும் காட்டவேண்டும்; அப்போது தான் அவரது ஆய்வில் பன்முகப் பாங்கும் பரிமாணமும் சிறந்து விளங்கும்.