சு.ரா.வோ தமிழகத்தில் முக்கியமான இடதுசாரி போக்கு இலக்கியம் பத்திரிக்கை என்று பெரிதாக எதுவும் இல்லையென்றும், தனித்தனி எழுத்தாளர்கள்தான் உண்டெனவும் அலட்சியமாகக் கூறிவிட்டு, வேண்டுமானால் அவர்களைப் பார்க்கலாமென மேற்படிப் பட்டியலை முகவரிகளுடன் கொடுத்து அனுப்பிவிட்டார். இதில் எமது முகவரியையும் சு.ரா. கொடுத்திருப்பாரென வாசகர்கள் தவறாக நினைத்து விடக்கூடாது. அந்தத் தோழர் ஆந்திராவிலிருந்து கிளம்பும் போதே எமது முகவரியும் அவரது முகவரிப் பட்டியலில் இருந்திருக்கிறது.
அதன்பிறகு அந்தத் தோழரிடம் சு.ரா.வைப் பற்றியும் அவரது இரண்டாவது நாவலைப்பற்றியும் காலச்சுவடு குறித்தும் அவரிடம் நிலவும் கடைந்தெடுத்த மார்க்சிய வெறுப்பையும் விளக்கினோம். அப்போது கருவறை நுழைவுப் போராட்டம், இறால் பண்ணை அழிப்புப் போராட்டம் ஆகியவை நடந்து முடிந்த நேரம். அந்தப் போராட்டங்களின் வரலாற்றையும், அவை தமிழகத்தில் ஏற்படுத்தியிருந்த பாதிப்பையும், தமிழ் மக்கள் இசைவிழா கலை நிகழ்ச்சிகள் பாடல் ஒலிப்பேழைகள் பத்திரிக்கைகள் அவற்றின் விநியோகம் இவற்றையெல்லாம் விளக்க விளக்க அந்தத் தோழர் விக்கித்து நின்றார். “”உங்களைப் பற்றி சு.ரா. ஒன்றும் சொல்லவில்லையே” என்றார். சு.ரா ஏன் சொல்லியிருக்க முடியாது என்ற விளக்கத்துடன் அந்த உரையாடல் முடிந்தது.