ஐம்பெரும் பூதங்களாகிய நிலம், ஆகாயம், காற்று, நீர், நெருப்பு இவற்றில் நெருப்பு மட்டும்தான் இன்னும் மாசுபடாமல் இருக்கிறதே தவிர மற்ற எல்லாமே மாசுகொண்டதாக உள்ளது. நெருப்பு பரிசுத்தமானது. ஆனால் அது மாசுபட்ட பொருட்களை எரிக்கும்போது வான மண்டலத்தில் மாசுபட்ட புகை பரவுகிறது. உலக மண்டலம் மாசற்றதாக இருந்தால், உணவுவகைகள் கலப்படமற்றதாக இருந்தால் உடல்மண்டலம் நோயுண்டு துன்புறாமல் இருக்கும்.
'' உடலை ஓம்பும் நெறிகள்'' என்னும் இந்நூல் ஒரு சிறந்த மருத்துவ நூல். உடல் பாழ்பட்டுப் போகாமல் காக்கும் நெறிகள் இந்நூலில் உள்ளுரைந்துள்ளன. மனிதநேயமும் சேவை மனப்பான்மையும் தனது மாண்புகளாகக்கொண்டு மருத்துவப் பணியில் ஈடுபட்டுப் புகழ்பெற்ற டாக்டர் K.B. கல்யாணசுந்தரம் அவர்கள் இந்நூலை ஆக்கித்தந்துள்ளமை பெருமைக்குரியது.