தென் இந்தியப் பேரரசன் என்று சங்க காலத்திற் கருதப்பட்டவன் கரிகாற் சோழன் ஆவன்; இடைக் காலத்தில் அப்பட்டத்தைப் பெற்றவன் வாதாபி வென்ற நரசிம்ம பல்லவன்; பிற்காலத்தில் புகழ் பெற்றவன் இராஜேந்திர சோழன். இவர்கட்குப் பிறகு தென் இந்தியாவிற் புகழ் பெற்ற பேரரசர் கிருஷ்ணதேவ ராயர் ஒருவரே ஆவர். விஜய நகர அரசர்கட்குள் பெயரும் புகழும் பெற்றவரும் அவர் ஒருவரேயாவர். பகைவரை வென்ற பேராண்மையும், போரை அறமுறைப்படி நடத்திய திறமையும், பெரு நாட்டுச் சிற்றரசர்களை அடக்கி ஆண்ட முறைமையும், அயல் நாட்டு அரசர்களுடன் உறவு கொண்டாடிய பண்பும், அயல் நாட்டு வாணிகத்தை வளப்படுத்திய வகையும், நாகரிகக் கலைகளாகிய இசை-நடனம்-நாடகம்- ஓவியம்-சிற்பம்-மருத்துவம் முதலிய வற்றை வளர்த்த முறையும். தம் பெருநாட்டு மொழிகள் அனைத்தையும் சம நிலையில் வளர்த்த திறமும் பிறவும் கிருஷ்ணதேவ ராயரைப் பேரரசர் ஆக்கின.