ஒரு பத்திரிகையாளரின் பணி சவால்களும் சிக்கல்களும் நிறைந்தது. இதன் காரணமாக இதழியலாளர்கள் படைப்பாக்கத்திறன் பாதிக்கப்படுவதுண்டு. வெறும் வாழ்க்கைத் தொழிலாக மட்டுமே பாவித்து இதழியலாளர்களாக இருப்பவர்களும் உண்டு. மிகுந்த ஆர்வமும் இலட்சிய வேட்கையுமாக பத்திரிகைத் துறையை விரும்பித் தேர்ந்தெடுத்துக்கொண்டவர்களும் உண்டு ஜி.மீனாட்சி இரண்டாம்வகை இதழியலாளர். பல வருடங்களாக தினமணி நாளிதழில் பணியாற்றிய பின் தற்சமயம் புதிய தலைமுறை இதழில் என்றுமான உத்வேகத்துடன் இயங்கிவரும் ஜி.மீனாட்சியின் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் சமீபத்தில் நியூ செஞ்சுரி பதிப்பக வெளியீடுகளாக பிரசுரமாகியுள்ளன. 2012-ன் இறுதியில் ஒன்றும், 2013 ஜூன் _ல் இன்னொன்றுமாக வெளியாகியுள்ளன. கிராமத்து ராட்டினம் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள சிறுகதைத் தொகுப்பில் 11 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியத்தின் விரிவான அணிந்துரையும், ஆசிரியரின் அடர்செறிவான என்னுரையும் வெளியாகியுள்ளன. பூ மலரும் காலம் என்ற கவித்துவமான தலைப்பிட்ட சிறுகதைத் தொகுப்பிலும் 11 கதைகள் இடம்பெற்றுள்ளன. அமுதசுரபி ஆசிரியர், எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணைன் விரிவான அணிந்துரையும் ஆசிரியரின் என்னுரையும் வெளியாகியுள்ளன.