பள்ளி மாணவன் ஒருவன் தன்னைப் பற்றிச் சொல்லும் வகையில் அமைந்துள்ள இக்கதை படிப்பவர் உள்ளத்தை அள்ளும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது. வாழ்க்கையில் நடக்க முடியாத அற்புத நிகழ்ச்சிகளை எழுத்திலே ஓவியமாய், சிறுவர்தம் சிந்தை கவரும் சிங்காரக் கதைகளைப் படைத்துத் தருவதே சிறந்த கதாசிரியருக்கு அமைந்ததோர் ஒப்பற்ற இலக்கணமாய்க் கருத்ப்பட்ட காலம் மலையேறிவிட்டது. அன்றாட வாழ்க்கையிலே சாதாரணமாக நடக்கக் கூடிய, நம்பக் கூடிய நிகழ்ச்சிகளைப் பின்னணியாகக் கொண்டு பின்னப்படுகின்ற கதைகளையே இன்றைய மாந்தர் பெரிதும் விரும்புகின்றனர். குறிப்பாகவும் சிறப்பாகவும் சோவியத்து நாட்டு மக்கள், அக்டோபர் புரட்சிக்குப் பிறகு சமுதாயத்திலே நடக்கின்ற அன்றாட நிகழ்ச்சிகளையும் போர்க்களத்தில் நிகழுகின்ற வீர, தீரச் செயல்களையும் அடிப்படையாகக் கொண்டு எளிமையாகத் தீட்டப்படுகின்ற கதைகளையே விரும்புவதை, நான் மாஸ்கோவில் வாழ்ந்தபோது கண்டிருக்கிறேன். சிறுவர்க்கென எழுதப்பட்டுள்ள இந்தக் கதை நம் நாட்டுக் குழந்தைகள் படிக்கின்ற கதைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட புதிய முறையில் வரையப்பட்ட கதையாகும். மனித வாழ்க்கையிலே நடக்கக் கூடிய. நம்பத் தகுந்த நிகழ்ச்சிகளையே நாம் இந்தக் கதையில் காண்கிறோம்.