என் நாவிலும் நினைவிலும் தவிழ்ந்து கொண்டே இருக்கும் ஒரு கனிமரம். மரம் என்னவோ திருகியும் வளைந்தும் இருந்தாலும் மறக்க முடியாத சுவை அதன் பழங்களுக்கு. உலகத்தின் அத்தனை தித்திப்பையும் ஒன்று திரட்டி உருட்டிச் சிறிய செம்பவள நிறக் கனிகளாய் ஆக்கினால் எப்படியோ அப்படி ஒரு சுவை நறிவிலிப் பழங்களுக்கு. நான் சின்னஞ் சிறுவனாய் இருந்த போது அடிக்கடி வட்டமிட்ட மரம் நறிவிலி. அதன் நினைவு ததும்ப ஒரு கவிதையும் எழுதியிருக்கிறேன். இந்தப் பழத்தின் சிறப்பு என்னவென்றால் நாவலி சுவைக்கத் தொடங்கினால் பசை போல் நாவில் ஒட்டிக் கொள்ளும். துப்புவதோ நாவை விட்டு எடுப்பதோ சிரமம். அப்படி என் நாவில் ஒட்டிக் கிடப்பது தமிழ் எனக் கவிதை கூறும்.