கொத்தாயிலிருந்து நடுராத்திரியில் சைக்கிள் உருட்டி வீடு வந்து சேரும்போது தன்னை எதிர்பார்த்து பசியால் துடித்துக் கடைசியில் மண்ணை வாரித் தின்று தூங்கும் அவரைக் கொடியைவிட மொலிந்த கழுத்தும் வீங்கிய வயிறும் கொண்ட மகள் ஒருத்தி அசைனார் பாய்க்கு இல்லையே. நாம் யாரிடமாவது நம் கவலைகளை எடுத்துச் சொல்லும்போது அதைச் செவி கொள்ளும் நபர் அதே அளவுக்கு இல்லையென்றாலும் கொஞ்சமாவது அது போன்ற கஷ்டங்களை அனுபவித்திருக்க வேண்டும். அப்படிப்பட்டவரல்ல எனின் அவர்களிடம் சொல்லக் கூடாது. சொன்னால் நாமே ஒரு குற்றவாளியாகவோ கோமாளியாகவோ மாறிவிடுவோம்.