இந்நூல் தென்னிந்திய வரலாற்றின் முக்கிய பகுதிகளை எடுத்து விளக்க முயலுகின்றது. குறிப்பாக, ஆங்கில நூல்களைக் கற்க வசதியற்றவர்களுக்குப் பயன்படுமாறு இந்நூல் எழுதப் பெற்றுள்ளது. நாட்டின் வரலாறானது, மக்களது வாழ்க்கை நிலை, சமூக நிலை, நாகரிக நிலை முதலியவற்றை நன்கு விளக்க வேண்டுமென்பதை இன்று யாவரும் ஒப்புக்கொள்ளுகின்றனர். இக்கருத்தைத் தழுவியே இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. ஆகையால், மன்னர் வரலாறுகள், போர் நிகழ்ச்சிகள், அரசியல் ஒப்பந்தங்கள் முதலியன விரிவாகக் கூறப்பெற்றில். சமூக வரலாற்றை அறிவதற்கு இன்றியமையாத அரசியல் குறிப்புகள் மட்டுமே இதன்கண் இடம் பெற்றுள்ளன.