ஔவையார் என்ற பெயரால் பல காலத்தும் பலர் நிலவியிருந்தனரோ அன்றி
அறிவிலே திருவுடைய பெண்பாலர் எல்லாம் ஔவையார் என்னும் ஒரு பெயரால்
அழைக்கப்பட்டனரோ நாம் அறியோம். ஔவை என்ற சொல் மூதாட்டியென்ற நினைவையும்
தருவதாகும். இந்த முதுமை, ஆண்டின் முதிர்ச்சியைக் குறித்ததோ அல்லது அறிவின்
முதிர்ச்சியியைக் குறித்தோ அதனையும் நாம் அறியோம். நாம் அறிந்தனவெல்லாம்
தமிழ் ஆர்வமிக்க சான்றோர்கள் திரட்டிச் சேர்த்து பாதுகாத்து வைத்த
தனிப்பாக்கள் மட்டுமேயாகும். அவற்றைப் பொருளுடன் அறிந்து, சிந்தித்து,
அவற்றால் அறியலாகும் ஔவையாரின் செவ்வியினையும், குணநலங்களையும் உளங்கொண்டு
போற்றுவது மட்டுமே நம்மால் இயல்வதாகும். இந்த நூலைப் பயிலுகின்ற அன்பர்கள்,
இதனை மனத்திற் கொண்டே கற்க வேண்டும் என விரும்புகிறேன். தமிழன்பர்கள்
விருப்பமுடன் வரவேற்று இன்புறுவார்கள் என்று எப்போதுமே எனக்கு
நம்பிக்கையுண்டு. -புலியூர்க்கேசிகன்