சொற்களில் உயிர்த்துடிப்பும் கருத்துகளில் உணர்ச்சி வேகமும் இணைந்துள்ள இந்நூலைப் படிப்போர் புதிய எழுச்சியும் ஆவேசமும் பெறுவம் என்பது உறுதி. இது படிப்பதற்கான நூல் மட்டுமன்று. குண்டும் குழியுமாயுள்ள சமுதாயப் பாதையின் இடறிடாமல் நடந்து செல்லப் பயன்படும் ஊன்று கோலும்; உள்ளம் எனும் விளக்கில் நம்பிக்கை ஒளியை எப்போதும் அணையாதிருக்கத் தூண்டிக் கொண்டேயிருக்கும் தூண்டுகோலும் ஆகும்.
இநூலைப் பள்ளிகளிலும் கல்லூரிகளும் பாட நூலாக வைத்தால் மாணவர்கள் அனைவருமே சாதனையாளர்களாகி, வருங்கால இந்தியாவை வளம்பெறச் செய்வர்; வல்லரசாகவும் ஆக்குவர்.
பஞ்சணை மெத்தையில் ஓய்வெடுத்துக்கொள்ள
விரும்பாதீர்கள்!
நீங்கள் பறந்து செல்லும் இராசாளிப் பறவைகள்ந
மலையுச்சியில் உங்கள் கூடுகளைக்
கட்டிக்கொள்ளுங்கள்
எனும் கவிஞர் இக்பாலின் இப்பாடல் கூறுவதுபோல் இந்நூற் கருத்துக்கள் நம்மை மேலே மேலே இட்டுச்செல்லும் என்னும் உறுதிப்பாட்டுடன், திருமதி சுமதி இதுபோன்ற நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் எனும் விருப்புடன் அவரை மனமாரப் பாராட்டி மகிழ்கிறேன்.
அன்புடன்,
சு. செல்லப்பன்.