இனிமையான இசையில் இளகிய மனதை இறுகச் செய்து விட்டு தன்னை அணைத்து படுத்திருந்த மகளின் நித்திரை கலையாமல் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு நிமிர்ந்த ஹம்ஷவர்தினியின் கண்கள் தன்னுடைய நகலை கண்டு பெருமிதத்தில் மலர்ந்த அடுத்த நொடியே தலையை குலுக்கிக்கொண்டு அந்த அறையுடன் கூடிய குளியலறையில் நுழைந்து கொண்டாள். காலைக் கடன்களை முடித்து கருநாகம் போன்ற கூந்தலை அள்ளி முடித்து கொண்டு கிச்சனுக்குள் புகுந்து தனக்கும் மகளுக்கும் அன்றைய நாளை நகர்த்திட தேவையான சக்தியை (சாப்பாட்டுக்குத் தான் இந்த வர்ணனை) மளமளவென்று தயாரிக்க தொடங்கினாள். மகளுக்கு பிடித்த ஆலூ பராத்தாவும், தயிர் பச்சடியும் செய்து விட்டு தனக்கு எண்ணெய் இல்லாத ரொட்டி, பருப்பு செய்து முடிக்கும் பொழுது, மம்மா! குட் மார்னிங் என்ற கொஞ்சும் குரலுடன் வந்த ஆஷிர்யா தனது அம்மாவின் முகத்தில் தெரிந்த புன்னகையை கண்ட நொடி "ஐ லவ் யூ" என்று தாவி அணைத்திருந்தாள்.