உடல் நலம்காக்கும் மூலிகைச் சமையல், உணவே மருந்து என்னும் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு அற்புதமான
படைப்பு.மூலிகைகளை வெறும் மருந்துகளாக உட்கொள்வதை விட அதையே அன்றாட உணவுகளாக்கி உணபது. சுவையானதாகவும், உடல் நலத்தைக் காப்பதாகவும் அமையும். அந்த வகையில் இந்நூலில் நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய மூலிகைகளைக் கொண்டு எளிய முறையில் சுவையாக சமைக்கும் முறைகளையும், அதன் மருத்துவப் பயன்களையும் சிறப்பாக விளக்கியுள்ளார் ஆசிரியர் சுப்புலட்சுமி சிவமதி அவர்கள். தமிழர்களின் மண் மணம் மிகுந்து வீசுகிற இடம் கிராமங்கள் தான். கற்கோவில் என்கிற கிராமம் தான் இந்நூலாசிரியர் பிறந்த ஊர். அதன் தாக்கம்தான் இந்த மண்ணின் மணத்தோடு, சமையலின் மணத்தையும் கூட்டி இவரை எழுத வைத்திருக்கிறது. அடுப்படியை ஆராய்ச்சிக் கூடமாக்கி, தமிழல்களின் பாரம்பரிய சமையல் வகை நுடபங்களை கண்டுபிடித்து நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். பத்திரிகைகளில் பல சமையல் குறிப்புகளை எழுதி பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார். மூலிகைகளை மருந்துகளுக்குச் சேர்க்கும் வித்தை சித்தர்களுக்கே அத்துபடி. ஆனால் இவர் மூலிகைகளை எப்படி சமையலில் சேர்ப்பது என்பதை இந்நூலில் எளிமையாக எடுத்துச் சொல்கிறார். ஒவ்வொரு தமிழரின் இல்லத்தின் அடுப்படியிலும் இருக்க வேண்டிய அருமையான நூல் இது என்றால் அதிகப்படுத்திச் சொல்வதாகாது. அவசியம் கருதிச் சொல்லப்படுவது.
- பதிப்பகத்தார்.