தமிழின் முதன்மையான சிறுகதையாளர்களில் ஒருவரான அசோகமித்திரன் இதுகாறும் எழுதிய அனைத்துக் கதைகளும் அடங்கிய பெருந்தொகை இந்நூல். 1956 முதல் 2017 வரை அறுபதாண்டுகள் எழுதிய கதைகளின் தொகுப்பு. “பெரிய கதையொன்றின் சிறுசிறு பகுதிகள்தாம் என் கதைகள்” என்று கூறும் அவர், தான் எழுதிய இச்சிறிய கதைகளின் வாயிலாக என்றுமே எழுதி முடிக்க முடியாத அந்தப் பெரிய கதையான ‘வாழ்வின்’ பக்கங்களை நமக்குப் புரட்டிக் காட்டுகிறார். முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடியாத அக்கதையினை நாம் பகுதிபகுதியாக வாசித்துக்கொண்டிருக்கும்போதே, ஏதோ ஒரு தருணத்தில் அது நம்மைப் பற்றிய கதையாகவும் மாறிவிடும் விந்தை அசோகமித்திரனின் இந்தக் கதைகளில் இயல்பாக நடந்தேறுகிறது.