ஜோதிட அன்பர்களுக்கு வணக்கம். ஜாதகம் கணிப்பதற்கும், பிரஸ்ன ஜாதகம் கணிப்பதற்கும், முகூர்த்தங்களை நிர்ணயம் செய்வதற்கும், பலாபலன்களை தீர்மானிப்பதற்கும் இலக்கினமும், பாவச் சக்கரமும் முக்கியமான அம்சங்களாகும். இதில் இலக்கினத்தைக் கணிப்பதற்கு பலவிதமான வழிகள் உள்ளன. அவற்றுள் நட்சத்திர ஹோராமணியைக் கொண்டு இலக்கின ஸ்புடமும், பாவஸ்புடங்களும் கணிக்கும் முறையே மற்றெல்லா முறைகளையும்விட நவீனமானதும், துல்லியமானதும் ஆகும். இது ஒரு மேல் நாட்டு கணித முறையாதலாலும், தமிழில் இதுவரை ஒரு முழுமையான, முறையான புத்தகங்கள் எதுவும் இல்லாததாலும் நமது ஜோதிட நண்பர்களால் இலக்கின ஸ்புடங்களையும், பாவஸ்புடங்களையும் எளிதாகவும் துல்லியமாகவும் கணிக்க முடியாத குறை இருந்து வந்தது. அந்தக் குறையைப் போக்குவதற்காக பல்வேறு சிரமத்திற்கிடையில் இந்நூலைக் கணித்து உங்களுக்காக வழங்குகின்றேன். நட்சத்திர ஹோராமணி கணிப்பதற்கான எளிமையான அட்டவணைகளை இந்நூலில் தயாரித்துக் கொடுத்துள்ளேன். அயனாம்சம் மற்றும் கணிதத்திற்குத் தேவையான பல விதமான அட்டவணைகளையும் இதில் கணித்துச் சேர்த்துள்ளேன். பாவச் சக்கரம் என்னும் பனிரெண்டு பாவ ஸ்புடங்கள் ஸ்புடங்கள் அடங்கிய சக்கரத்தை நமது இந்திய முறைப்படி கணிக்கும் முறையினை இதில் தெளிவாக உதாரணத்துடன் விளக்கியுள்ளேன். இதுமட்டும் அல்லாமல், மேல் நாட்டு ஜோதிட முறைப்படி அமைக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான பாவப் பகிர்வு முறைகளையும் நீங்கள் தெளிவாக அறிந்து கொள்வதற்காக இந்த நூலில் காட்டியுள்ளேன். இவையன்றி, இந்நூலில் அவ்வப்போது தேவைப்படும் பல நுணுக்கங்களையும் உங்களுக்காக எடுத்துக் காட்டியுள்ளேன். இவையொன்றும் ரகசியமான விஷயங்களோ, மறைக்கப்பட வேண்டிய விஷயங்களோ அல்ல. சில தற்பெருமை சொல்வதைப் போல இதுவொன்றும் கம்பசித்திரமல்ல. எவரும் செய்ய முன்வராத காரியங்களைத் தாம் செய்துவிட்டதாகச் சொல்லக் கூடிய அளவிற்கு இது சாதனையும் அல்ல. நமது முன்னோர்கள் ஜோதிட சாஸ்திரத்தில் மகா விற்பன்னர்களாகத் திகழ்ந்தவர்கள். அவர்களின் கணித முறைகளையே மேலை நாட்டினர் பயன்படுத்தி, அதில் தற்கால கணிதமுறைகளைப் புகுத்தி நவீனப்படுத்திவிட்டார்கள். அப்படி நவீனப்படுத்தப்பட்டவற்றில் இதுவும் ஒன்று. அவ்வளவே. அந்தக் கணித முறைகளை நமது இந்து ஜோதிட சாஸ்திரத்தை அனுசரித்து, அன்பர்கள் கணித்துப் பயன்பெற வேண்டுமென்ற நோக்கத்தில்தான் இந்த நூலைத் தயார் செய்து உங்களுக்கு வழங்குகின்றேன். தொடர்ந்து படியுங்கள்! பயன் பெறுங்கள்! இந்நூலை மிகுந்த ஆர்வத்துடன் அச்சிட்டு வெளியிட்டுள்ளேன்.