வெள்ளிக்கிழமை
மந்தைவெளி மாரியம்மன் கோவில். மாலைப் பொழுதின் வெளிச்சம் மங்கிக் கொண்டிருந்த வேளையில் கூட்டம் பெருக ஆரம்பித்தது. கோவிலைச் சுற்றி மாடங்களிலும், மதில் சுவர்களிலும் வண்ண, வண்ண மின் விளக்குகள் கண்சிமிட்ட ஆரம்பித்தன. கண்ணாடிக்கு முன்னால் நின்று தங்களை அழகுபடுத்திக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி தங்கத் தேர்களைப் போல் இளம்பெண்கள் கோவிலை நோக்கி நடந்து வரும் காட்சி... தேர் அழகா தேருக்குள் இருக்கும் தேவி அழகா என்று ஆண்கள் கூட்டம் அந்தப் பெண்களைப் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தது.
அன்று பௌர்ணமி வேறு-
அடிவானில் மஞ்சள் தட்டு போலத் தகதகவென முழு நிலவு.
கோவிலை நோக்கிப் பவனி வரும் பெண்களில் அழகில் சிறந்தவளைத் தேர்ந்தெடுப்பது போல ஆகாயத்திற்கு எழும்பி வரும் நிலவின் அழகோ கொள்ளையோ கொள்ளை...