இந்த நூல் ஒருவகையில் வரலாற்று நூலாகும். வேதகாலம் தொட்டு சாதனைகள் புரிந்து, சரித்திரம் படைத்த மாதர்குலத் திலகங்களை இந்நூல் அறிமுகப் படுத்துகிறது. அதேசமயம், சலிப்புத் தட்டாமல் இருப்பதற்காக நூலாசிரியை திருமதி சு. லலிதாம்பாள் அவர்கள் கடித வடிவிலான கட்டுரைத் தொகுப்பாக இந்நூலை இயற்றியிருக்கிறார். அவரது இந்த அணுகுமுறை நூலுக்குச் சுவையும் விறுவிறுப்பும் அளித்து வாசகர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.
மகளிர்தம் மாண்பினை இலக்கியம், இதிகாசம், வரலாறு, வாழ்க்கைமுறை ஆகிய பலவற்றின் வாயிலாக நாம் அறிந்து வந்திருக்கிறோம். எளிய நடையில், இனிய நல்ல தமிழில், அன்புச் செல்விக்கு அன்னை எழுதும் அழகிய மடல்களாகப் பற்பல மகளிரின் சிறப்பினை எடுத்தியம்பியுள்ளார். இவ்வாசிரியப் பெருந்தகை.