வாழ்க்கையைப் பயணமென்று ஏன் சொன்னார்கள்? இலக்கு இல்லாமல் பயணிக்க முடியாது. எங்கே போகப் போகிறோம் என்று முடிவு செய்த பிறகுதான் பயணத்தைத் தொடங்க முடியும். ஆகவே வாழ்க்கைப் பயணமென்பது ஓர் இலக்கை நோக்கிக் செல்வதாகத் தான் இருக்கமுடியும். ஆனாலும், எல்லாருடைய வாழ்க்கைப் பயணமும் இலக்கை நோக்கித்தான் செல்வதாக இருக்கின்றதா? பெரும்பாலோருடைய வாழ்க்கைப் பயணம் எந்தக் குறிப்பிட்ட திசையிலும் செல்வதில்லை என்பதுதான் உண்மை. இவர்களைப் பொறுத்தவரையில் கால வெள்ளத்தில் இவர்கள் அடித்துச் செல்லப்படுகிறார்கள். ஒதுக்கப்படுகின்ற கரையில் ஒதுங்கி விடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இதுதான் வாழ்க்கை என்றாகி விடுகிறது.