சில வருடங்களுக்கு முன் சென்னையில் பெருவெள்ளம் வந்தபோது, பாதிக்கப்பட்டோருக்கு கைக்கொடுக்க, உலக மக்கள் எல்லாம் ஓடோடி வந்தனர். பெயர் தெரியாத, முகம் தெரியாத ஏதோவொரு வியாசர்பாடி அன்பருக்கு, வான்கூவர்-லிருந்து வந்து சேர்ந்தன நன்கொடைகள்! எதனாலே?
உயிர்கள் பெரிய அளவில் வாடும்போதெல்லாம், அதைச் சரி செய்ய வேண்டும் என்ற நம் இயற்கை உணர்வான அன்பு துடிக்கிறது. மனதின் அடியில் உறங்கிக்கிடந்த நேயம் உயிர்த்தெழுகிறது. உதவிகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. பூமியில் அருள் ஊற்றெடுக்கிறது!
பிரச்னை முடிந்தபின் அனைவரும், என் ஆரோக்கியம், என் சம்பாத்தியம், என் உறவுகள் எனச் சென்றுவிடுகிறோம். விளைவு, பூமியின் ஒத்திசைவு சீர்குலைந்து அடுத்த பிரச்னை ஆரம்பிக்கிறது!
இன்று பூமியில் ஏற்பட்டிருக்கும் மாபெரும் துன்பத்துக்குக் காரணம் ஏதோவொரு குட்டி வைரஸ் என நினைத்துவிட வேண்டாம். ‘அருள் குறைந்துவிட்டது’ எனப் பிரபஞ்சம் நமக்கு அறிவுறுத்தும் செய்திதான் அது.