திருப்பாவைக்குத் தரப்பட்ட உயர்வான விளக்கங்களால் அது வேதமெனப்
போற்றப்படுகிறது. வேத உறுப்புகளில் ஒன்றான ஜோதிடத்திற்குப் போதிய
விளக்கங்கள் பெறப்படாமையால் அது தூற்றுவார் கைப்பிள்ளையாயிற்று.
ஜோதிடத்தில் தனியிடம் பெறும் சத்தியாசாரியரே புதுச் சித்தாந்தங்களை வழங்கிய
பின்னரும் தன்னிறைவு பெறாமை கண்டு பனிரெண்டு ஆண்டுகள் தவம்புரிந்தார்.
எனில் நம் போன்றோர் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளின் அளவீடு அறியலாம் தானே.
எல்லாமே விதிப்படிதான் நடைபெறும் என்பது தீர்மானமாகின் ஜோதிடம்
பார்ப்பதின், திருமணப்பொருத்தம் பார்ப்பதின் அவசியம் தான் எங்கே
ஏற்படுகிறது. மரபு ஜோதிடம் கட்டிடத்தின் அஸ்திவாரம் போன்றது. புதிய ஆய்வு
முறைகள் அதன் மேல்தளங்கள் போன்றவை. ஜோதிடக் கோட்பாடுகள் அனைத்தும்
கவிதைக்குப் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கு ஒப்பானவை. வார்த்தைகளில் கவிதை
இல்லை. ஜோதிட விதிமுறைகளில் ஜோதிடம் இல்லை. அது ஒரு தெய்வீக வெளிப்பாடு.
சோர்வுற்று வரும் ஜோதிட வாடிக்கையாளர்களுக்கு சோர்வு நீக்கும் சொர்க்க
பூமியாக, ஜோதிடக்களம் அமைய எமது ஆலோசனைகளின் சில கட்டுரைகளே இந்த நூல்.