இலங்கைப் போரில் படுகொலை செய்யப்பட்ட குழந்தைகள் தெய்வத்திடம் நீதி கேட்கின்றன. செய்த தவறை ஒப்புக்கொள்ளும் ஒரே ஒரு நபரை அழைத்துவாருங்கள். இறந்தவர்கள் அனைவரையும் உயிர்த்தெழவைக்கிறேன் என்று தெய்வம் வாக்குக் கொடுக்கிறது. குழந்தைகள் ஐநாசபைக்குச் சென்று நீங்கள்தானே இந்த உயிரிழப்புக்குக் காரணம். வாருங்கள் என்று அழைக்கின்றன. அவர்களோ இந்தியத் தலைவர்கள்தான் காரணம் என்கிறார்கள். இந்தியத் தலைவர்களிடம் சென்று கேட்டால் தமிழகத் தலைவர்கள்தான் காரணம் என்கிறார்கள். சிங்களர்களிடம் கேட்டால் விடுதலைப் புலிகள்தான் காரணம் என்கிறார்கள். இப்படியாக ஒவ்வொருவரும் அடுத்தவர் மேல் பழியைப் போடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
மனம் சோர்ந்துபோகும் குழந்தைகள் தெய்வத்திடம் சென்று முறையிடுகின்றன. நீங்கள்தானே எல்லாரையும் படைத்தது. நீங்கள்தான் காரணம் என்று சொல்கின்றன. தெய்வமும் தன் மீது குற்றமில்லை. மனிதர்கள்தான் காரணம் என்று பழியைத் தூக்கி மனிதர்கள் மீது போடுகிறது. தெய்வமே இப்படிச் சொன்னதைக் கேட்டுக் கலங்கும் குழந்தைகள் சோகமாக திரும்புகின்றன. அப்போது பிரபாகரனும், பிரேமதாசாவும் எதிரில் வருகிறார்கள். யார் சொன்னதைக் கேட்டு நடந்ததால் இந்த இழப்பு ஏற்பட்டது என்பதைச் சொல்லமுடியாது.
ஆனால், யார் சொன்னதைக் கேட்டிருந்தால் இந்த இழப்பு நடந்திருக்காது என்பது தெரியும். வாருங்கள் என்று குழந்தைகளை அழைத்துக் கொண்டு செல்கிறார்கள். அவர்கள் போகும் திசையில் மலை உச்சியில் ஒரு குடிசை இருக்கிறது. குடிசையை நெருங்க நெருங்க ராட்டைச் சத்தமும் ரகுபதி ராகவ ராஜா ராம் பாடலும் உரத்துக்கேட்கிறது