‘உலகின் வியத்தகு பாலங்கள்' எனும் கைப்பிரதி நூலை முனைவர் பு.சி. இரத்தினம்
அவர்கள் என் கையில் தந்தபோது, இவ்வளவு வியத்தகு பாலங்கள் உலகில்
மிளிர்ந்து வரலாற்றுச் சின்னங்களாக விளங்கி வருகின்றனவா என்ற ஏற்றமிகு
எண்ணந்தான் என் மனதில் தோன்றி எழுச்சியும், விழிப்புணர்வும் ஏற்படுத்தியது.
இங்கு கூறப்பட்டுள்ள 63 பாலங்களைத் தவிர இன்னும் எத்தனையோ பாலங்கள்
இருக்கக்கூடும் என்னும் உணர்வும் என் மனதில் உந்தியது. காவிரியின் குறுக்கே
குடகில் உள்ள ஆடுதாண்டு பாலமும், கங்கையின் குறுக்கே ரிஷிகேஷில் உள்ள
இராமர்துர்க், இலக்ஷ்மண்துர்க் பாலங்களும் என் கண்முன்னே தோன்றி நிலைகுத்தி
நிற்கின்றன.
ஆசிரியர் கூறுவதுபோல பாலங்கள் இரு கரைகளை மட்டுமின்றி இரு
தீவுகளையோ, இரு பெருநிலப் பகுதியாம் கண்டங்களையோகூட இணைத்து மனித உயிர்கள்
மட்டுமின்றி பிற உயிர்களும் பிழைக்க உதவுகின்றன என்று நினைக்கும்போது
பாலங்களின் பயன்பாடு பெரிது பெரிது என கருதத் தோன்றுகிறது.