காமாட்சியம்மன் தீபம் குறுகிய வட்டத்தில் தட்டுப்பட்ட பொருள்களின் மீதெல்லாம் ஒளி பாய்ச்சிக்கொண்டிருந்தது. வெள்ளச்சம் தேடி வரும பூச்சிகளின் வெடிப்பொசுங்களால் தீபத்தில் அவ்வப்போது பொறி எழுந்து அடங்கியது. சூரியனின் இறுதித் தங்கக்கீற்றுகள் வீட்டுப் பலகைத் தடுப்பின் இடைவெளிகளில் நுழைந்து திட்டுத்திட்டாகத் தரையில் சிதறிக்கிடந்தன. ஐந்து பேர் கைக்கால்களை நீட்டிப்படுத்தால் நிறைந்துவிடும் வீட்டில், பூசைப் பொருள்களைத் தவிர சமையலுக்கான சில தளவாடங்களும் ஓர் இரும்புப் பெட்டியும் இருப்பதை, வலியால் அடிவயிற்றை அழுத்திப் பிடித்தப்படி அப்போய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். பாட்டியின் வீட்டில் இருப்பதுபோல் அறையென தனியாக அங்கு எதுவும் இல்லை. அவனுக்கு அது வீடு போலவே தோன்றவில்லை.