book

அலைகள் ஓய்வதில்லை

Alaikal voivathillai

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லா.ச.ராமாமிருதம்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :266
பதிப்பு :1
Published on :2001
Add to Cart

எனக்கு முன்னுரை எழுதவே பிடிக்கும். இப்படித்தானே உங்களுடன் நேரிடைப்பாவனையில் உரையாட முடியும்.


இந்தத் தொகுப்புடன் எழுத்துடன், என் அறுபத்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலான ஈடுபாட்டில் என் நினைவு தெரிந்த வரை, என்னிலிருந்து பிறந்த எல்லாச் சிறுகதைகளும் வெளியாகிவிட்டன. ஓரிரு மாதங்களுக்கு முன் உத்தேச எண்ணிக்கையில் இருநூறு கூடத் தேறவில்லை. ஆனால் ஏமாற்றத்தினின்று உடனே தேறிவிட்டேன். ஏனெனில் ஐம்பத்து ஐந்து, அறுபது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கதைகள் இன்னும் பேசப்படுகின்றன. குறிப்பிடப்படுகின்றன.


தொகுப்புகளில் சேர்க்கப்படுகின்றன. 'மண்' எழுதி அறுபது ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் சமீபத்தில் இரண்டாம் முறை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுப் பிரபல ஆங்கில சஞ்சிகையில் வெளிவந்திருக்கிறது. முதன்முறை லண்டனில் வெளி வந்தது. இப்போது ஸ்பானிஷ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏனிந்த மார்த் தட்டல்? இது ஒரு தகவல் தெரிவிப்பு என்று கொள்ள வேண்டுமேயன்றி என்னைப் பொறுத்தவரையில் எண்பத்து ஐந்து வயதில் என்னால் வேறு என்ன சொல்ல முடியும். எழுத்தின் வீச்சுக்குக் காலவரையேயில்லை என்று தெரிகிறது.


கதை எழுதி முடிக்கும் வரை எனக்கு சிரத்தை. அதற்குப்பின் எனக்குத் தொடருவதில்லை. ஆனால் வாசகர்கள் கடிதம் எழுதியோ நேரில் வந்தோ அதன் மூலம் அவர்களுக்கு நேர்ந்த பாதிப்பைத் தெரிவிக்கையில் மகிழ்ச்சியாகத்தானிருக்கிறது. அம்மா சொல்லுவாள் வாயுள்ள குழந்தையானால் பிழைத்துக் கொள்ளட்டும். இதில் எவ்வளவு அர்த்தங்கள் அடங்கியிருக்கின்றன என்று இப்பத்தானே தெரிகிறது. ஆகவே நீங்கள் தான் என் கலையைப் போஷித்தீர்கள். விருட்சம் ஆக்கினீர்கள்.


இந்தத் தொகுதிக்கான சரக்கை ஒன்று சேர்க்க கண்ணன் ரொம்பவே சிரமப்பட்டு விட்டான். அவன் எனக்குத் தார்க்குச்சிப் போட்டுக் கொண்டேயிராவிட்டால் இந்தத் தொகுதி வெளிச்சம் கண்டிருக்காது.


இதைக் காட்டிலும் என்ன பெருமை நிறைவு வேண்டும்? என் பெற்றோர்கள் என்னை வளர்த்த முறைக்கும் என் மேல் வர்ஷித்த பாசத்திற்கும் சற்றேனும் தகுதியாயிருப்பேன் என்று நினைக்கிறேன் - இது கூடப் பெரிய வார்த்தைதான் - ஆசைப்படுகிறேன்.


கடைசியில் என் வாழ்க்கைக் குறிப்பைக் கட்டுரையாகக் காண்பீர்கள். இதற்குக் காரணம் உண்டு.


ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் அந்தப் புத்தக சம்பந்தப்பட்ட ஒருவர் சுருக்கமாக என் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பைக் கேட்டிருந்தார்கள். அதை வெறும் தகவல் அட்டவணையாகக் கொடுப்பதற்குப் பதிலாக கோர்வையாக ஒரு மினி வரலாறாய் எழுதினேன். ஆனால் உடல் நிலை காரணமாக அந்த விழாவிற்குப் போக முடியவில்லை. அவ்வளவு சிரமப்பட்டு எழுதிய அந்தக் கட்டுரையும் என்னுடன் தங்கிவிட்டது. ஆனால் எந்த எழுத்தும் வீணாகப் போகக் கூடாது. வீண் போகாது. இந்தத் தொகுப்பில் சேர்ப்பதற்கு வாய்ப்புக் கிடைத்து விட்டது.


ராமகிருஷ்ண விஜயத்துக்கு எழுதிய கட்டுரையையும் சேர்த்து விட்டேன். ஏன் அதைத் தனியாக விட்டு வைக்க வேண்டும்? ஆகவே சுயசரிதை, கட்டுரை, கதை என ஒரு கலவையாக இந்தத் தொகுப்பு அமைந்துவிட்டது.


இந்தத் தொகுப்பே என் கடைசி வெளியீடாக இருக்குமோ என்கிற எண்ணம் தோன்றாமலில்லை. கற்பனைக்கும் ஊற்று வற்றாதா? உடலுக்கும் அசதி கண்டு விட்டதே. என் பிள்ளைகள் சிரிக்கிறார்கள். பத்து வருடங்களாக இப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். தொகுதிகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. கதைகள் எழுதிக் கொண்டுதானிருக்கிறீர்கள். அவர்கள் சொல்வதற்கு ஏற்றாற்போல் 'ராசாத்தி கிணறு' ‘அலைகள் ஓய்வதில்லை' இரண்டு கதைகளும் இந்த வருடம் எழுதியவைதான். ராசாத்தி கிணறு கரு நாற்பது வருடங்களுக்கு முன்னால் தோன்றிவிட்டது. ஆனால் அதை உருவாக்க அப்போது வழி தெரியவில்லை. ஆனால் இப்போது திடீரென பற்றிக் கொண்டு எழுதி முடித்து விட்டேன். அடுத்தாற் போல ஐம்பது வருடங்களுக்கு முன்னால் தோன்றிய ஒரு வித்து இப்பொழுது துளிர்விட ஆரம்பித்துவிட்டது. மனத்தினுள் தேள் கொட்டிக் கொண்டே இருக்கிறது. ஆகவே ஒரு எழுத்தின் விதைக்கும் அதன் வளர்ச்சிக்கும் விதமோ வரையோ வகுக்க முடியவில்லை.