book

சின்ன விஷயங்களின் கடவுள் (1997 ஆம் ஆண்டிற்கான புக்கர் பரிசு பெற்ற நாவல்)

Chinna Vishayangalin Kadavul ( Tamil Translation of 'God of Small Things' )

₹390+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜி. குப்புசாமி
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :366
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381969045
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

"காட் ஆஃப் ஸ்மால் திங்க்ஸ்தான் அருந்ததிராய் எழுதியிருக்கும் ஒரே நாவல். ஒரே நாவலில் உலகப் புகழ் பெற்றிருக்கிறார் என்பதுதான் அவருடைய தகுதியின் சிறப்பாகவும் குறையாகவும் பார்க்கப்படுகிறது. ஒற்றை நாவல் மூலம் இலக்கியப் பிரபலமாகி விட்டார் என்று பாராட்டப்படுகிறார். ஒரு நாவல்தானே எழுதியிருக்கிறார். அடுத்த ஒன்றையும் எழுதி வெளியிடட்டும். அதன் பிறகுதான் அவருடைய இலக்கியத்தரம் தீர்மானிக்கப்படும் என்றும் விமர்சிக்கப்படுகிறார். இந்த இரண்டு கருத்துகளுக்கும் இடையில் அருந்ததி ராயின் நாவல் முப்பத்தியொன்பது மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. நாற்பதாவது மொழியாக இப்போது தமிழிலும் வெளிவந்திருக்கிறது. ஜி. குப்புசாமி சின்ன விஷயங்களின் கடவுள் என்ற பெயரில் தமிழாக்கம் செய்துள்ள நாவலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. ஒற்றை நாவல் மூலம் இலக்கியப் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் உலக இலக்கியத்தில் முன்பே இருக்கிறார்கள். கான் வித் தி விண்ட் நாவலை எழுதிய மார்க்கரெட் மிஷெல், பார் எவர் ஆம்பரை எழுதிய கேதலீன் வின்சர், பேடன் பேலஸ் நாவலை எழுதிய கிரேஸ் மெடாலியஸ், என்ற நாவலை எழுதிய ரிச்சர்ட் ஹுக்கர். இனிவிசிபிள் மேனை எழுதிய ரால்ஃப் எலிசன், டு கில் தி மாக்கிங்க் பர்ட் நாவலை எழுதிய ஹார்ப்பர் லீ ஆகிய எழுத்தாளர்கள் ஒற்றை நாவல் அதிசயங்களாகச் சொல்லப்படுகிறார்கள். இந்தப் பட்டியலில் ரிச்சர்ட் ஹுக்கர், ரால்ஃப் எலிசன் தவிர மற்றவர்கள் பெண்கள். ஏன் பெண்கள் ஒரே நாவலுடன் நின்றுவிடுகிறார்கள் என்பது இலக்கியரீதியாகவும் சமூகவியல் ரீதியாகவும் ஆய்வு செய்யப்படவேண்டிய ஒன்று. அருந்ததி ராயை உலகப் புகழ் பெறவைத்ததில் ஊடகங்களின் பங்கு அதிகம். அந்தப் புகழும் வளம்பரமும் தருகிற பரபரப்பான சூழ்நிலையைப் பயன்படுத்தி அவர் இரண்டாவது ஒரு நாவலை எழுதி வெளியிட்டிருக்கலாம். ஆனால் சாதகக் காற்று அடிக்கும்போது தூற்றிக்கொள்ள முயற்சி செய்யவில்லை என்பதுதான் அருந்ததிராய் இலக்கியத்தின் மீது வைத்திருக்கும் மரியாதையையும் அவர் மீது வாசகர் வைக்கக்கூடிய மதிப்பையும் காட்டுகிறது. அருந்ததி ராயின் நாவல் அவரது சொந்த வாழ்க்கையின் சாயலைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. அய்மனம் என்ற கேரள கிராமம்தான் அவருடைய சொந்த ஊர். நாவலின் கதை நடப்பதும் அய்மனத்தில்தான். இரட்டைக் குழந்தைகளான எஸ்தா என்ற எஸ்தப்பன், ராஹேல் இருவரும் ஒன்றாகப் பிறந்து பத்து வயதுவரை ஒன்றாக வளர்ந்து பெற்றோரின் மண விலக்குக் காரணமாகப் பிரிந்து விடுகிறார்கள். இருபத்தி மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கிறார்கள். இந்த இடைவெளியில் நடக்கும் சம்பவங்கள்தாம் கதை. நாவலிலேயே குறிப்பிடப்படுவதுபோல மகத்தான கதைகள் என்பவை நீங்கள் கேட்ட, மீண்டும் கேட்க விழையும் கதைகளே. எந்த இடத்திலும் நீங்கள் உள்ளே நுழைந்து சௌகரியமாகப் பொருத்திக் கொள்ள இடமளிப்பவை. அவை உங்களை கிளர்ச்சியூட்டுவதாலும் தந்திரமான முடிவுகளாலும் ஏமாற்றுபவையல்ல. எதிர்பாராதவற்றால் உங்களை வியப்பில் ஆழ்த்துபவை அல்ல. அவை நீங்கள் வசிக்கும் வீட்டைப் போலப் பரிச்சயமானவை அல்லது உங்கள் காதலரின் வாசனையைப்போல. அவை எவ்வாறு முடியுமென்று தெரிந்திருந்தாலும் தெரியாததைரப் போலக் கேட்க வைப்பவை. தெரிந்த ஒரு கதையைத்தான் அருந்ததி ராய் இந்த நாவலில் சொல்கிறார். அதை இதுவரை தெரியாத முறையில் சொல்கிறார் என்பதுதான் இந்த நாவலின் சிறப்பம்சம். ஆங்கிலத்தில் எழுதப்படும் இந்தியக் கதைகளில் மொழி நடையாலும் சொல்லும் முறையாலும் திருப்புமுனையாகச் சொல்லப்படும் நாவல் சின்ன விஷயங்களின் கடவுள். இது மகத்தான இலக்கியப் படைப்பல்ல. ஆனால் முக்கியமான படைப்பு. இந்த நாவலின் வருகைக்குப் பிறகே உலக இலக்கியத்தில் இந்தியப் படைப்புகளுக்கு இலக்கிய மதிப்பும் சந்தை மதிப்பும் உயர்ந்திருக்கிறது., ஒரு நாவலாசிரியர் என்பதைக் காட்டிலும் கட்டுரையாளராகவும் செயல்பாட்டாளராகவும் அதிகம் ஊடக கவனம் பெற்றிருப்பவர் அருந்ததிராய். ஆனால் அவர் அடிப்படையில் ஓர் எழுத்தாளர். ஓர் எழுத்தாளரை மதிப்பிடுவது அவரது படைப்பின் வழியாகத்தான். அதற்கான வாய்ப்பை சின்ன விஷயங்களின் கடவுள் மொழியாக்கம் தமிழ் வாசகர்கள் முன் வைக்கிறது. -சுகுமாரன்."