book

வெள்ளிசனிபுதன் ஞாயிறுவியாழன்செவ்வாய்

Velli Sani Buthan Gnayiru Viyazhan Chevvai (Poetry)

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பெருமாள்முருகன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :95
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381969519
Add to Cart

" “கிரானைட் தன்னைக் காட்டிக் கிடந்தது நீ என்ன கண்டாய் நாடோடியே? உட்கார ஒரு பெஞ்சுமில்லை. நான் களைத்துப்போயிருந்தேன்.“ - ப்ரக்ட் ஒரு கவிதை உருவாவதற்கும் அக்கவிதை உருவாகக் காரணமான அனுபவத்திற்கும் இடையே இருக்கும் ஒரு மெல்லிய இழையை அடைபவனே கவிஞன். கவிஞன் தன் அனுபவத்தை அல்லது தரிசனத்தைப் பெறுவதற்கு முன் அவ்வனுபவத்தை அடைந்திடக் காத்திருக்கும் ஒரு சராசரி மனிதனாகவே இருக்கிறான். அவ்வனுபவம் அவன் மனதில் படும்போதுதான் அவனுக்குள் ஏற்படும் ஒருவிதமான உணர்வு அவனைச் சராசரி மனிதத் தன்மையிலிருந்து விலக்கிப் படைப்பாளியாக்குகிறது. அவ்வனுபவம் அவனுக்குள் கிளர்த்தும் கேள்விகள், உண்மைகள், சந்தேகங்கள் அவனை எழுத வைக்கின்றன. அங்குதான் வாழ்வின் முதல் முகம் அவனுக்கு அவ்வனுபவத்தின் வழியே தெரிகிறது. தனக்கும் பிரபஞ்சத்திற்குமான உறவை உணர்கிறான். அப்போது அவனுக்குள் ஒரு விழிப்புநிலை உருவாகிறது. அங்கிருந்துதான் படைப்பு உத்வேகம் கொள்கிறது. பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த உணர்ச்சிக்கூறைத் தனக்குள் கொண்டவன் கவிஞன். அவனையும் அவன் பிரபஞ்சத்தையும் தனித்தனியாகப் பிரித்தறிய முடியாது. ஏனெனில் அவன் மனதின் நிழல் பிரபஞ்சம். அல்லது பிரபஞ்சத்தின் நிழல் அவன். இந்த நிழலிலிருந்து அவனுடைய கேள்விகள், விவாதங்கள், விளக்கங்கள், தரிசனங்கள் படைப்பாக வெளிவருகின்றன. அப்படைப்பினை வாசிக்கும்போது நமக்குள் அந்தக் கேள்விகளை, தரிசனங்களை நாம் அடைந்திருப்பதை உணரமுடிகிறது. இதை நாம் உணரும்போது படைப்பின் விழுமியம் முழுமையடைந்துவிடுகிறது. கேள்விகள், தரிசனங்களில் உண்மை இல்லாதபோது படைப்பின் விழுமியம் சாத்தியமற்றுப்போகிறது. ஆகப் படைப்பின் விழுமியம் என்பது அனுபவம் வெளிப்படுத்தும் உண்மையைச் சார்ந்துவிடுவதை நாம் உணரலாம். இந்தத் தளத்திலிருந்து பெருமாள்முருகன் கவிதைகள் உருவாகின்றன எனத் தோன்றுகிறது. பெருமாள்முருகன் கவிதைகள் எளிமையானவை. அவை எளிமையான இயற்கையைப் போன்றவை அல்லது எளிய கிராமத்தைப் போன்றவை. இவரின் கவிதைகளை வாசிக்கும்போது படர்ந்து விரிந்த ஆலமரத்தின் சின்னஞ்சிறு கிளையில் பார்வைக்குப் படாமல் கூடுகட்டி வாழும் அக்காக்குருவியையே நான் காண்கிறேன். அக்காக்குருவியின் மாபெரும் இசையையே இக்கவிதைகளில் அங்கங்கு செவிமடுக்கிறேன். அது அவ்வளவு மென்மையானது. இன்றைய நவீனக் கவிதை உலகில் யதார்த்த எழுத்துக்கென்று பெருமாள்முருகன் கவிதைகளுக்கு இடமுண்டு."