book

வணக்கம்

Vanakkam

₹213.75₹225 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வலம்புரிஜான்
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :288
பதிப்பு :5
Published on :2017
Add to Cart

Thanks : http://www.nisaptham.com/2016/10/blog-post_45.html

அரசியல் சம்பந்தமான சில புத்தகங்கள் நமது ஆர்வத்தைக் கிளறிவிடுபவை. ஜெவும் சசியும் எப்படி தோழியர் ஆனார்கள், பின்னணி என்ன என்றெல்லாம் தெரிந்து கொள்ளத் துழாவிய போது இணையத்திலேயே நம்பகமான கட்டுரைகள் நிறையச் சிக்கின. ஆனால் பெரும்பாலானவை ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன. தமிழில் எழுதுவதற்கு எல்லோருக்கும் பயம்தான். தொண்ணூறுகளில் ஆரம்பித்த பயம் இன்னமும் எழுதுகோல்களிலும் கீபோர்டுகளிலும் ஊடுருவித்தான் கிடக்கிறது.

தமிழகத்தின் முதல் பெண் ஆட்சியராக சந்திரலேகா தென்னாற்காடு மாவட்டத்தில் பொறுப்பேற்ற போது அம்மாவட்டத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக நடராசன் பணியில் இருந்தது, மாவட்ட ஆட்சியராக சந்திரலேகாவின் செயல்பாடுகளில் மகிழ்ச்சியடைந்த அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவரை மதுரை மாவட்டத்துக்கு மாறுதல் செய்தது, அந்தச் சமயத்தில் அதிமுகவின் கொ.ப.செவாக நியமிக்கப்பட்ட ஜெயலலிதா மதுரையில் ஒரு மாநாடு நடத்த அதனை பிரம்மாண்ட வெற்றியடைச் செய்து தந்தது, இதன் மூலமாக சந்திரலேகா-ஜெ.வின் பள்ளிக்கால நட்பு சென்னைக்கு சந்திரலேகா மாறுதலாகி வந்த பிறகும் தொடர்ந்தது என அது ஒரு தனி ட்ராக்.

சந்திரலேகாவின் குழந்தையை பராமரிப்பதற்காக தனது மனைவியை நடராசன் சந்திரலேகாவுக்கு அறிமுகம் செய்து வைக்க அதன் காரணமாக சந்திரலேகாவுக்கு நெருக்கமான சசிகலா அவர் மூலமாகவே போயஸ்கார்டனுக்குள் பிரவேசித்தது, உடன்பிறவா சகோதரி ஆனது என்பதெல்லாம் இன்னொரு ட்ராக். இந்த பின்னணிகளை ஓரளவு புரிந்து கொண்ட பிறகு அந்தக் கால அரசியல் செயல்பாடுகள் குறித்தான புத்தகங்களைத் தேடிக் கொண்டிருந்த போது வலம்புரி ஜான் எழுதிய ‘வணக்கம்’ என்ற புத்தகம் கிடைத்தது. குமணன் தனது நூலகத்திலிருந்து எடுத்துக் கொடுத்தார்.

1991 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வரான பிறகு மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் கழித்து வலம்புரி ஜான் நக்கீரன் இதழில் ஒரு தொடர் எழுதினார். அதுதான் வணக்கம்.

வலம்புரிஜான் குறித்து என் வயதுடைய தலைமுறைக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. ‘வாதம் தீருமா என்றால் தீரும்’ என்ற விவேக் நகைச்சுவை மட்டும்தான் நினைவில் நிற்கிறது. விக்கிப்பீடியாவிலும் அவரைப் பற்றி விரிவாக எதுவுமில்லை. 

எம்.ஜி.ஆர் அவர்களால் முதன் முறையாக ராஜ்யசபாவுக்கு எம்.பி ஆக்கி அனுப்பி வைக்கப்பட்ட போது வலம்புரி ஜானுக்கு வயது இருபத்தெட்டு. அவ்வளவு இளம்வயதிலேயே எம்.பி.யாக நியமனம் செய்யப்படுகிற அளவுக்கு கவனம் பெற்றவர் வார்த்தைச் சித்தர். ராஜ்யசபாவுக்கு உறுப்பினராக வேண்டுமானால் குறைந்தபட்சம் முப்பது வயது ஆகியிருக்க வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டு பதவியை இழக்கிறார். இருந்தாலும் எம்.ஜி.ஆர் கைவிடவில்லை. தனது ‘தாய்’ பத்திரிக்கைக்கு ஆசிரியராக்குகிறார். மீண்டும் எம்.பி ஆக்குகிறார். எம்.எல்.சி ஆக்குகிறார். இப்படியாக எம்.ஜி.ஆர் இருந்த வரையிலும் அவரோடு மிக நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்த வலம்புரி ஜான் அதன் பிறகு வெவ்வேறு கட்சிகளுக்கு மாறி அரசியல் ரீதியாக வெற்றியடைய இயலாமல் கடைசியில் நொந்து போய் உயிரிழக்கிறார். 

நக்கீரன் கோபால் சென்னையில் வேலை தேடிக் கொண்டிருந்த போது அவருக்கு ‘தாய்’ பத்திரிக்கையில் வேலை கொடுத்தவர் வலம்புரிஜான். அந்த விசுவாசத்தில் வணக்கம் தொடரை எழுதுவதற்கு நக்கீரன் கோபால் தனது குருநாதருக்கு வாய்ப்பளிக்கிறார். வாய்ப்பு என்பது மிக எளிமையான சொல். ரிஸ்க் எடுத்திருக்கிறார் என்று சொல்லலாம். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் முதன் முறையாக முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெ., மிகுந்த அதிகாரத்துடன் செயல்பட்ட காலம். அவரைப் பற்றி தனது பத்திரிக்கையான ராஜரிஷியில் எழுதப் போவதாக வலம்புரி ஜான் அறிவித்த பிறகு பத்திரிக்கை தடை செய்யப்படுகிறது. வேறொரு வழக்கில் வலம்புரி ஜான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். இந்தச் சூழலில்தான் அதே கட்டுரைத் தொடரை தனது பத்திரிக்கையில் எழுதும்படி கோபால் கோரிக்கைவிடுக்கிறார். வலம்புரி ஜான் மிகுந்த உற்சாகத்துடன் எழுதத் தொடங்குகிறார்.

தாய் பத்திரிக்கை சார்ந்த வேலைகளுக்காக அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆருடன் வெகுவாக நெருங்கிப் பழகியவர், ஜெயலலிதோவோடு ஒரே சமயத்தில் எம்.பி.ஆக இருந்தவர், ஜெயலலிதாவை ஆரம்ப காலத்தில் கடுமையாக எதிர்த்த ஆர்.எம்.வீரப்பனால் ‘இந்த அம்மையாருக்கு அரசியல் ஆசை உருவாக முக்கியமான ஆள்’ என்று குறிப்பிடப்பட்டவர், ஜெ.வால் ‘வீரப்பனின் ஆள்’ என்று குறிப்பிடப்பட்டவர் என்று அந்தக் கால அதிமுகவின் பெரும்புள்ளிகள் அத்தனை பேருடனும் நெருக்கமாக இருந்தும் கடைசியில் சின்னபின்னமாகிப் போனவர் வலம்புரி ஜான்.

எம்.ஜி.ஆர் முதல்வரானதிலிருந்து இறுதி வரைக்கும் அவரது செயல்பாடுகள், அவரது சகாக்கள் பற்றிய குறிப்புகள், ஜெயலலிதாவின் வளர்ச்சி, அவரை ஆதரித்தவர்கள், எதிர்த்தவர்கள் என எல்லாவற்றையும் அப்பட்டமாக இந்தத் தொடரில் எழுதியிருக்கிறார். நடராசன், சசிகலா, இந்திரகுமாரி, ஆர்.எம்.வீரப்பன், ராகவானந்தம், குஷ்வந்த் சிங் என்று ஒருவர் பாக்கியில்லை. எம்.ஜி.ஆருக்கு ஜெ மீதான பொஸஸிவ்னெஸ், டெல்லிக்கு அவரை எம்.பி ஆக்கி அனுப்பிவிட்டு கண்காணித்தது, ஜானகிxஜெ பிரச்சினைகள் என சகலத்தையும் விலாவாரியாக எழுதினால் ஜெவுக்கு மட்டுமில்லை யாருக்குமேதான் கோபம் வரும். அதை நக்கீரன் இதழிலும் கத்தரி போடாமல் பிரசுரித்திருக்கிறார்கள்.

இதே போன்றதொரு இன்னொரு புத்தகம் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வனவாசம். அதில் பக்கத்துக்குப் பக்கம் கருணாநிதி வறுபட்டிருப்பார். திமுகவினரிடம் வனவாசம் குறித்துப் பேசினால் ‘அது டுபாக்கூர்’ என்பார்கள். அத்தனையும் பொய் என்பார்கள். அதிமுகவினர் வணக்கம் பற்றி ஏதாவது சொல்கிறார்களா என்று பார்க்க வேண்டும். வலம்புரிஜானின் புத்தகத்திலும் சரி; கண்ணதாசனின் புத்தகத்திலும் சரி- பொய் இருக்கலாம். ஆனால் அத்தனையும் பொய்யாக இருக்க வாய்ப்பில்லை.

இத்தகைய எழுத்துக்களை அப்படியே நம்ப வேண்டியதில்லை என்றுதான் நானும் சொல்வேன். ஜெயலலிதாவின் மீதான வலம்புரி ஜானின் கோபமும் வன்மமும் பக்கத்துக்குப் பக்கம் தெரிகிறது. கரித்துக் கொட்டியிருக்கிறார். கண்ணதாசனும் அப்படியேதான். ஒருவேளை அரசியலில் தாங்கள் தோல்வியுற்றதன் எரிச்சலாகக் கூட இருக்கலாம். தங்களோடு இருந்த கருணாநிதியும் ஜெவும் தாங்கள் கற்பனை கூட செய்திராத உயரத்துக்குப் போய்விட்ட பொறாமையாகவும் இருக்கலாம்.

அரசியல் விருப்பு வெறுப்பு இல்லையென்றாலும் கூட இத்தகைய புத்தகங்களை ஒரு முறை வாசித்து வைக்கலாம். நம் சமகால அரசியலும் அரசியல்வாதிகளும் ஆரம்பகாலத்தில் எப்படியெல்லாம் இருந்திருக்கிறார்கள், தங்கள் இடத்தை அடைவதற்கு எத்தகைய காரியங்களையெல்லாம் செய்திருக்கிறார்கள் என்பதை ஓரளவுக்கு புரிந்து கொள்ள உதவும். 

அரசியல் என்பது சாதாரணமில்லை. இருபக்கமும் கூரான கத்தி. ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர்களுக்கு லாவகமாகப் பயன்படுத்தத் தெரிந்திருக்கிறது. வீச வேண்டிய இடத்தில் வீசி மேலே வந்துவிட்டார்கள். கண்ணதாசனுக்கும் வலம்புரிஜானுக்கும் இன்னபிற அரசியல் தோல்வியாளர்களுக்கும் பயன்படுத்தத் தெரியவில்லை அல்லது பயன்படுத்த விரும்பவில்லை.  அரசியல் வரலாற்றில் சரி தவறு என்றெல்லாம் எதுவுமேயில்லை. வெற்றி தோல்வி மட்டும்தான் கணக்கு. வென்றவர்கள் வரலாறு ஆகிறார்கள். வரலாற்றுப் புழுதியானது தோற்றவர்களை வேகமாகக் கீழே தள்ளி மண் மூடி புதைத்துவிடுகிறது.