புத்தக வெளியீடு (Book Release)
திருவனந்தபுரம்:கேரளாவில் வசிக்கும், வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள், மலையாளம் கற்கும் வகையில், 'ஹமாரி மலையாளம்' என்ற புத்தகத்தை, மாநில அரசு தயாரித்துள்ளது.
கேரளாவில், முதல்வர், பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், தமிழகம், மேற்கு வங்கம், பீஹார், அசாம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா உட்பட, வெளிமாநிலங்களைச் சேர்ந்த, 25 லட்சம் பேர், தங்கி வேலை செய்து வருகின்றனர். இவர்கள், மலையாள மொழியை எளிதில் கற்கும் வகையில், 'ஹமாரி மலையாளம்' என்ற புத்தகத்தை மாநில அரசு தயாரித்துள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில், விரைவில் நடக்கவுள்ள விழாவில், இந்த புத்தகத்தை, மாநில கல்வித் துறை அமைச்சர், ரவீந்திரநாத் வெளியிட உள்ளார்.
இது குறித்து, எழுத்தறிவு இயக்க இயக்குனர், ஸ்ரீகலா நிருபர்களிடம் நேற்று கூறுகையில், ''உள்ளூர் மக்களுடன், வெளிமாநில மக்கள், எளிதில் பேசி பழகும் வகையில், இந்த புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
Wednesday 16 Aug 2017 | செய்திகள், புத்தக வெளியீடு (Book Release) |
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டை முன்னிட்டு பொன்மனச் செம்மலின் எம்.ஜி.ஆரின் பொன்விழா 2017 எதிர்வருகின்ற ஆகஸ்டு மாதம் 12 ஆம் தேதி மாலை 06.00 மணிக்கு கோலாலம்பூரில் உள்ள தான் ஸ்ரீ K.R. சோமா அரங்கில் நடைபெற இருக்கிறது*. மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கும் மக்கள் திலகத்தை நினைவுகூறும் வகையில் இந்த கலை இரவை *எம்.ஜி.ஆர். புரொடக்ஷன்ஸ் சேர்ந்த எம்.ஜி.ஆர் கலைமகள் திருமதி பூங்கொடி* *எம்.கே.யு. மலேசிய கலை உலகம்* குழுவினருடன் இணைந்து ஏற்பாடு செய்திருக்கிறார்.
இந்த கலை நிகழ்ச்சியில் நடனம் மற்றும் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது. எம்.ஜி.ஆர். சிறந்து விளங்கிய சிலம்பாட்டமும் சிறப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருகிறது. இவற்றுடன் சேர்ந்து ஒரு புத்தக வெளியீடும் நடைபெற இருக்கிறது.
*எம்.ஜி.ஆர். தங்கராஜு, எம்.ஜி.ஆர் மதி ஆகியோரின் அபிநயம் நடைபெறுகிறது*.
*ஏரா நடனக்குழுவினர் தங்கள் நடனத்தால் நம்மை மகிழ்விக்க இருக்கின்றனர்*.
*பார்வையிழந்த பாடகர்களான திரு. நாகா, குமாரி காயத்ரி ஆகியோருடன் பாடகர்கள் TMS சிவகுரு, சென்னை TMS ராஜா, N.பாலா, ரமேஷ், ஷர்மிளா சிவகுரு, நளினா* ஆகியோரும் இணைந்து நம்மை இசை வெள்ளத்தில் ஆழ்த்த போகிறார்கள்.
நமது பாரம்பரிய கலையான சிலம்ப சாகச நிகழ்ச்சியை *மகாகுரு ஆறுமுகம் அவர்களின் புதல்வர் மகாகுரு அ.சிவகுமார்* அவர்களின் மாணவர்கள் மேடையில் நிகழ்த்த இருக்கின்றனர்.
நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக தமிழகத்தை சார்ந்த பேராசிரியர் மற்றும் சினிமா வரலாற்று ஆராய்ச்சியாளர் உயர்திரு *வா. பாலகிருஷ்ணன்* அவர்கள் எழுதியிருக்கும் ”எம் ஜி.ஆரின் வாத்தியார் காளி என். ரத்தினம்” என்ற புத்தக வெளியீடு நடைபெற இருக்கிறது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக ஆஸ்திரேலியாவில் இருந்து *திரு. வெங்கட் ராவ்* மற்றும் அவரது துணைவியார், பேராசிரியர் உயர்திரு . *வா. பாலகிருஷ்ணன்* அவர்கள் , பல நாடுகளில் பெரும்புகழ் பெற்ற *சிங்கப்பூர் எம்.ஜி.ஆர்* மற்றும் சென்னை லயன்ஸ் கிளப் *கவர்னர் டாக்டர். மணிலால்* ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர்.
இந்நிகழ்ச்சியின் பிரதான அறிவிப்பாளர் *திரு. தமிழ் செல்வன்*
கடந்த ஆண்டு MGR THE LEGEND 3, என்ற மாபெரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் கலைமகள் என்ற சிறப்புக்குரிய பட்டத்தினை *திருமதி பூங்கொடி* அவர்களுக்கு மதிப்புக்குரிய சிங்கப்பூர் எம்.ஜி.ஆர் வழங்கியது குறிப்பிடத்தக்கது. பொன்மனச் செம்மலின் பொன்விழா 2017 நிகழ்வில் சிங்கப்பூர் எம்.ஜி.ஆர் சில கலைஞர்களுக்கு விருது வழங்க இருக்கிறார்
இந்த நிகழ்ச்சியில் MALAYSIAN ASSOCIATION FOR THE BLIND சங்கத்திற்கு *நன்கொடையாக Rm 3,000* பார்வையற்றோர் முன்னேற்றத்திற்கு அந்த நிறுவனத்தின் உறுப்பினரிடம் மேடையினில் காசோலையாக வழங்கப்படும்.
பிரமாண்டமான அரங்க அமைப்பு ஒளி ஒலி ஏற்பாடு கண்கவர் கலை நிகழ்ச்சி என எம் ஜி.ஆரின் 100 ம் ஆண்டு பொன்மனச் செம்மலின் பொன்விழா 2017 , சிறப்பாக நடைபெறும் என்று அதன் ஏற்பாட்டாளர் பொன்கொடி தெரிவித்தார். திருமதி பூங்கொடியின் இரண்டாவது நிகழ்ச்சியான பொன்மனச் செம்மலின் பொன்விழா 2017 நிகழ்ச்சி எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு என்றும் நினைவில் நிற்கும் நிகழ்வாக அமையும்.
Monday 14 Aug 2017 | செய்திகள், புத்தக வெளியீடு (Book Release) |
ஈரோடு: புத்தக திருவிழாவை முன்னிட்டு, ஈரோட்டில், 60 வகையான பல்சுவை புத்தகங்கள் வெளியிடப்பட்டன. ஈரோட்டில் புத்தக திருவிழா நடக்கிறது. இதையொட்டி நூல்கள் வெளியிடும் விழா, ஈரோட்டில் நேற்று நடந்தது.அழிவின் விளிம்பில் அந்தமான், பனை விடிலி, சிறகின் நிழல், விடுதலை வேள்வியில் மதுரை, அறிவியல் விருந்து, நண்டு சொன்ன நகைச்சுவை கதைகள், ஒளியாய் இருக்க வருவாயாக, பளிச்சினு பற்களுக்கு ஒரு மாற்றம், கடல் அடி, பசுமை அரசியல், சுற்றுச்சூழல் பயில்வுகள், வாடகைத் தொட்டில், மறைத்துப் பேச என்ன இருக்கு, யாதும் ஊரே யாவரும் கேளீர், என்பன உள்ளிட்ட, 60 புத்தகங்கள் வெளியிடப்பட்டன. தமிழக அரசு முதன்மை செயலாளர் இறையன்பு வெளியிட்டார். ஈரோடு எஸ்.பி., சிவக்குமார் பெற்றுக் கொண்டார். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Thursday 10 Aug 2017 | செய்திகள், புத்தக வெளியீடு (Book Release) |
காரைக்காலில் காரைத் தமிழ்ப் பேரவை சார்பில் புத்தக வெளியீடு மற்றும் இலக்கியப் பேருரை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் காரைத் தமிழ்ப் பேரவையின் இலக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது. பேரவைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச். நாஜிம் தலைமை வகித்தார். புலவர் திருமேனி நாகராசன் தொடக்கவுரையாற்றினார். வாணியம்பாடி பேராசிரியர் தி.மு. அப்துல்காதர் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, "விழித்தால் விடியும்' என்ற தலைப்பில் உரையாற்றினார். மேலும் படிக்க...
Tuesday 08 Aug 2017 | செய்திகள், புத்தக வெளியீடு (Book Release) |
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செட்டியார் பாரம்பரிய அறக்கட்டளை சார்பில் "செட்டியார் பாரம்பரியம் " என்கிற நூல் வெளியிட்டு விழா க.ராம தெரு, மெ.செ இல்லமான, பழமையான பங்களா வீட்டில் நடைபெற்றது.கர்நாடக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் எஸ்.எஸ். மீனாட்சி சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். முதல் பிரதியை நூறு வயதான பழனியப்ப செட்டியார் ,சம்பந்தம் செட்டியார் ஆகிய இருவரும் பெற்றுக்கொண்டார்கள்.
மேலும் படிக்க...
Wednesday 02 Aug 2017 | செய்திகள், புத்தக வெளியீடு (Book Release) |
சென்னை ராயப்பேட்டை புத்தக திருவிழா, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் ஆர்.வெங்கடேஷ் எழுதிய பரிபூரண அருளாளன் எனும் புத்தகத்தை எழுத்தாளர் பாலகுமாரன் வெளியிட திருவெற்றியூர் கணேசன் பெற்றுக்கொண்டார்.
Wednesday 26 Jul 2017 | புத்தக கண்காட்சி, புத்தக வெளியீடு (Book Release) |
கன்னடத்தில் 'அம்மா ஆதா அம்மு : ஜெயலலிதா', அதாவது 'அம்மு என்கிற அம்மா: ஜெயலலிதா' என்ற பெயரில் இந்த நூல் வெளிவந்துள்ளது. 262 பக்கங்களைக்கொண்ட இந்த நூலில், ஜெயலலிதாவின் குழந்தைப் பருவம் முதல் அவர் மறைந்தது வரை பல செய்திகள் சுவாரஸ்யமாக இடம்பெற்றுள்ளன.
மேலும், ஜெயலலிதாவின் குடும்பம் மற்றும் பெற்றோர் பற்றி வெளிவராத பல தகவல்கள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. நேற்று விற்பனைக்கு வந்த இந்தப் புத்தகம், வந்த சில மணி நேரங்களில் விற்றுத் தீர்ந்தன. இதனால், இந்தப் புத்தகத்தை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட, புத்தக ஆசிரியர் என்.கே.மோகன்ராம் முடிவுசெய்துள்ளார். கூடிய விரைவில் 'அம்மு என்கிற அம்மா : ஜெயலலிதா' புத்தகத்தை தமிழில் படிக்கலாம்.
ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுக்கும் முயற்சியில் மறைந்த தெலுங்கு இயக்குநர் தாசரி நராயண ராவ் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Friday 16 Jun 2017 | செய்திகள், புத்தக வெளியீடு (Book Release) |
தண்டுவட அறுவை சிகிச்சை
கோவையில் உள்ள கே.எம்.சி.எச்.மருத்துவமனையில் நன்கு பயிற்சி பெற்ற நிபுணர்கள் மூலம் மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. துறையில் சிறப்பு ஆலோசகரான பார்த்திபன் தண்டுவடத்தில் டிஸ்க் புரோலாப்ஸ் அறுவை சிகிச்சை செய்வது குறித்த புத்தகத்தை எழுதியுள்ளார். இது நரம்பு தண்டுவட அறுவை சிகிச்சை நுட்பங்கள் டிஸ்க்கை தண்டுவடத்திற்கு பாததிப்பில்லாமல் அகற்றுவது குறித்த தெளிவான முறைகள் விரிவாக உள்ளது. வளர்ந்து வரும் மருத்துவர்களுக்கு மிகவும் பயனள்ள வகையில் அமைந்துள்ளது. இந்தப் புத்தகத்தின் பிரதிகள் கோவை மற்றும் மதுரையில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது.
மே.எம்.சி.எச் மருத்துவமனைத் தலைவர் நல்ல ஜி.பழனிச்சாமி புத்தகத்தை வெளியிட அதனை டாக்டர் ரமணி பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை இயக்குனர்கள் அருண் பழனிச்சாமிஇமோகன் சேதுபதி மற்றும் வெங்கட் ரமணாஇநந்தினி முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
Friday 02 Jun 2017 | புத்தக வெளியீடு (Book Release) |
கவிஞர். ரவிசுப்பிரமணியனின் புதிய கவிதைத் தொகுப்பான 'விதானத்துச் சித்திரம்' புத்தகத்தின் வெளியிட்டு விழா சனிக்கிழமை (27-5-2017) மாலை 6:00 மணியளவில் சென்னை- கே.கே.நகர் டிஸ்கவரி புக் பேலஸில் வெளியிடப்படவிருக்கிறது. இது அவருடைய ஐந்தாவது கவிதைத் தொகுப்பாகும். பத்தாண்டுகளுக்குப் பிறகு அவர் இத்தொகுப்பைக் கொண்டு வந்துள்ளார். ரவிசுப்பிரமணியன் ஏற்கனவே ஒப்பனை முகங்கள், காத்திருப்பு, காலாதீத இடைவெளியில், சீம்பாலில் அருந்திய நஞ்சு ஆகிய கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். மேலும் சிறுகதைகள், கட்டுரைகள், ஆவணப்படங்கள் எனப் படைப்புகள் தந்து பன்முகப்பட்ட ஆளுமையாய்த் திகழ்கிறார்.
40 நவீனக் கவிதைகளுக்கு இசை வடிவம் தந்துள்ளார். மேலும் சாகித்திய அகாடமி ஆலோசனைக்குழுவில் உறுப்பினராகவும், இயக்குநரும் படத்தொகுப்பாளருமான பி. லெனினிடம் ஐந்து ஆண்டுகள் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார். சிறந்த கவிதை நூலுக்கான விருது, இலக்கிய விருது, ஆவணப்படத்திற்கான விருது ,சிற்பி இலக்கிய விருது, தி.க.சி.இயற்றமிழ் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். வெளியிடப்படும் இப்புத்தகம் குறித்துப் பாரதி புத்திரன், மண்குதிரை, கவிதைக்காரன் இளங்கோ, அனுராதா ஆனந்த், வேல் கண்ணன் ஆகியோர் பேச உள்ளனர்.
Friday 26 May 2017 | புத்தக வெளியீடு (Book Release) |
சென்னை: ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
பேராசிரியர் நா. மணி தொகுத்து, பாரதிபுத்தகாலயம் பதிப்பித்துள்ள “நீட்: கூட்டாட்சிக்கும் சமூக நீதிக்கும் எதிரானது – ஏன்?” என்ற நூல் வெளியீட்டு விழா வெள்ளியன்று (மார்ச் 17) சென்னையிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நூலை வெளியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், “நீட் தேர்வுகளால் வரும் பாதிப்புகள் குறித்து விளக்கமாக விளக்கும் கட்டுரைகளைக் கொண்ட புத்தகமாக கொண்டு வரப்பட்டுள்ளது. நீட் தேர்வை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்க்கிறது. இதற்கெதிரான போராட்டத்தையும் நடத்தி வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் மார்க்சிஸ்ட் கட்சி ஈடுபடும்” என்றார்.
மாநில பாடதிட்டம் தரம் குறைந்ததல்ல
நூலின் முதல் படியைப் பெற்றுக் கொண்டு பேசிய கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன், “நீதிபதி ஒருவர் நீட் தேர்விலிருந்து தமிழகம் விலக்கு கேட்பதற்காக வெட்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார். விடுதலை பெற்று 70 ஆண்டுகளாகியும் அனைவருக்கும் தரமான சமமான கல்வி வழங்காததற்காகத்தானே ஆட்சியாளர்கள் வெட்கப் பட வேண்டும்? தனியார் கல்வி நிறுவனங்களை தொடங்கி கொள்ளையடிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கிய 11 நீதிபதிகள் கொண்ட குழுதான் வெட்கப்பட வேண்டும். டிஎம்ஏ பாய் என்ற வழக்கில் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பை மாற்ற மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரவேண்டும்” என்றார்.
“சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் தரத்தை விட மாநில அரசின் பாடத்திட்டம் சிலவற்றில் தரம் அதிகமாக உள்ளது. மாநில பாடத்திட்டத்தை சரியாக ஆராய்ந்து பார்க்காமல், சிபிஎஸ்இ பாடத்திட்டம் உயர்வானது என்று தவறான தகவலை பரப்புகின்றனர்” என்று கூறிய ராஜகோபாலன், “சிபிஎஸ்சி திட்டத்தில் படித்த மாணவர்களில் 95 விழுக்காடு பேர் தனியார் மையங்களில் பயிற்சி பெற்று தேர்வு எழுதுகின்றனர். இதனால் தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் அதிகளவு வெற்றி பெறுகின்றனர். ஏழைகளால் தனியார் மையத்தில் பயிற்சி பெற முடியுமா? இதனை எதிர்கொள்வது எப்படி என்று சிந்திக்க வேண்டும்” என்றார்.
மாணவர்களின் திறனை மேம்படுத்த…
“நீட் தேர்வு மாநில உரிமையை பறிக்கிறது. கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வந்தால்தான் நீட் போன்ற பிரச்சனைகள் எழாமல் இருக்கும். நீட் தேர்வை எதிர்க்கும் அதேநேரத்தில் மாணவர்களின் திறனையும் மேம்படுத்த வேண்டும். நீட் தேர்வு வினாத்தாள்களை போன்று, தற்போது உயர்கல்வி தேர்வுக்கான வினாத்தாள்களை மாற்றி அமைக்க வேண்டும். இதுபோன்ற சில மாற்றங்கள் கொண்டு வந்தால் நமது மாணவர்கள் எந்த தேர்வையும் எதிர்கொள்ள தயாராக இருப்பார்கள். ஆனால், மருத்துவம், பொறியியல் படிப்புக்கான தேர்வுகளை மாநில அரசுதான் தீர்மானிக்க வேண்டுமே தவிர மத்திய அரசு அல்ல.” என்றும் ராஜகோபாலன் கூறினார்.
மாதம் முழுவதும் போராட்டம்
இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கிய பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, “நீட் தேர்வின் பாதிப்புகளை விளக்கி கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் மார்ச் மாதம் முழுவதும் புத்தக விற்பனை இயக்கம் நடைபெறும். ஏப்.1 முதல் 30 வரை தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும்” என்றார்.
Saturday 13 May 2017 | செய்திகள், புத்தக வெளியீடு (Book Release) |