திருவாதவூரடிகள் என்னும் ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமி களையும் அவர் செய்தருளிய திருவாசகம், திருக்கோவையார் என்ற திருமுறைகளையும் அறியாத தமிழனும் சைவனும் உலகத்தில் இல்லையென்றே சொல்லலாம். அன்னிய மதத்தினர்கள்கூட நமது ஆசாரிய மூர்த்திகளின் சரிதத்தையும் அவர் அருந் திருவாக்கையும் பழகிப் பயன்பெற விரும்புகிறார்கள். இவ்வாறு உலகமறிந்த பெரியாரான ஸ்ரீ மாணிக்கவாசகர் என்னும் ஆசாரிய மூர்த்திகளுடைய சரிதம் யாது? அவர் பெருமைகள் யாவை? அவர் திருவாக்குகளாகிய திருவாசகம், திருக்கோவையார் என்ற திருமுறைகள் எந்தமட்டில் அவர் சரிதப் பகுதிகளையும் அவர் பெருமை களையும் விளக்குகின்றன? என்ற ஆராய்ச்சியை என் சிறிய அறிவுக்கும் சிறிய சக்திக்கும் ஏற்றபடி மேற்கொள்வதே இந்த உபந்யாசத்தின் நோக்கமாகும்.