book

நீரில் விளக்கெரியும் நந்திக்கடல்

Neeril Vilakeriyum Nandhikkadal

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இளைய அப்துல்லாஹ்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :159
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381969656
Out of Stock
Add to Alert List

" இப்போதெல்லாம் எனது பிறந்த தினம் வரும் மே மாதம் அவ்வளவு விருப்பத்திற்குரியதாக இல்லை. அது துர்ச்சகுனமான மாதமாகவே இருக்கிறது. நான் முல்லைத் தீவு ஆஸ்பத்திரியில் பிறந்தேன். அப்படியே பிஞ்சுக் குழந்தையாக கொண்டுவந்து வளர்த்தியது முள்ளியவளை வீட்டில். அப்போதிருந்தே வன்னி மண் என் வாழ்வோடு ஒட்டிக்கொண்டுவிட்டது. நான் வன்னியில் பிறந்தவன்.முள்ளியவளையில் இருந்து அய்யா அம்மாவை விட்டுவிட்டுப் போய்விட்டார். அய்யாவின் பிரிவுக்குத் தங்கச்சி பிறந்ததுதான் காரணம் என்று என் கிராம மக்கள் பேசிக்கொண்டனர். எங்கள் ஒட்டுசுட்டான் புளியங் குளம் கிராமம் எவ்வளவு அருமையானது. அதனோடு வாழ்ந்த வாழ்வைத்தான் இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறேன். எழுதும்போதும் படிக்கும்போதும் அடிக்கடி நினைவுக்கு வருவது எனது கிராமம்தான். தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றாக மகிழ்வாக இருந்தது அந்த வன்னிக்கிராமங்களில். முள்ளிய வளையில் நீராவிப்பிட்டிப் பள்ளி வாசலுக்கு அடிக்கடி போயிருக்கிறேன். எங்கள் ஊரில் இருந்து எட்டு மைல். எங்கள் ஊரில் வாழ்ந்த பாரூக் கூலி வேலைசெய்து வாழ்ந்துவந்தார். அவருடைய மனைவி காது நிறையதோடு குத்தியிருப்பார். அவர் எங்கள் வீட்டுக்கு வந்து கூலிக்கு மா இடித்து அம்மாவிடம் காசு வாங்கிக்கொண்டு போவார். முத்தையன் கட்டுக் குளத்துக்கு அருகில் மண்ணால் கட்டப்பட்ட ஒரு பள்ளிவாசல் இருந்தது. யுத்தம் என்ற ஒன்று எங்கள் கிராமங்களைச் சூழும் என்று நாங்கள் அப்பொழுது கனவிலும் நினைக்கவில்லை. பரந்து விரிந்த புளியங்குளத்தை விட்டுவிட்டு நாங்கள் எல்லோரும் துரத்தப்படுவோம் என்றும் நினைக்கவில்லை. எனது ஏழு வயதிலேயே அப்பா இறந்துவிட்டார். ஐயாவையும் தன்னையும் யாரோ சூனியம் வைத்துப் பிரித்துவிட்டார்கள் என்று தான் அம்மா சொல்லுவார். சில வேளை இந்தக் காதல் கல்யாணத்தில் விருப்பம் இல்லாத தன் அண்ணன்தான் செய்திருப்பாரோ என்று அம்மாவுக்கு இன்னும் சந்தேகம். இப்போதும் அம்மா அதைத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறாள். அப்பா அம்மாவை விட்டுவிட்டு போன பிறகு அம்மய்யாதான் எங்களை வளர்த்தெடுத்தார். அம்மாவின் ஐயாவை அப்படித்தான் நாங்கள் கூப்பிடுவோம். அம்மய்யாதான் எனக்கு எல்லாம் என்றிருந்த காலம் அது. ஐயாவின் பாசம் என்பதை நான் இறுதியாகக் கண்டது கருவேலன்கண்டல் குண மண்ணையின் தேத்தண்ணிக் கடையில் தோசையும் சம்பலும் வாங்கித் தந்தபோதுதான். அந்த ருசியும் தோசையின் மணமும் ஐயாவின் மணமும் அடிமனத்தில் இன்னும் ஒட்டிப்போய்க் கிடக்கின்றன. ஐயா இல்லையென்றாகிப் போன பின்பு அம்மய்யாதான் எங்களுக்கு எல்லாம் என்றாகிவிட்டது. அம்மய்யா படிப்பறிவு இல்லாதவர். ஆனால் மிகப் பரந்த அனுபவ, அரசியல், சமூக அறிவு உடையவர். ஊரில் மிக நல்ல மனிதர். ஒட்டு சுட்டானில் அவரது பெயருக்கும் அவருக்கும் தனி மதிப்பு உண்டு. அவரைத் தெரிந்தவர்கள் எல்லாம் இன்றும் அவருக்காக என்னை மதிக்கிறார்கள். லண்டனிலும்கூட. அவர் வாழ்ந்த, நான் வாழ்ந்த வீடு இப்போது என்னவாகிக் கிடக்கிறது என்று எனக்குத் தெரியாமலேயே போய்விட்டது. ஒட்டுசுட்டானில் இருந்து ஒரு மைல்தூரத்தில் இருந்தது செழிப்பான எனது கிராமம். வேலி நெடுக வாழை மரங்கள் நட்டார் அம்மய்யா. ஒவ்வாரு நாளும் வாழைப்பழம் சாப்பிடுவோம். வீட்டோடு சேர்த்துத் தென்னை மரங்கள், மாமரங்கள், நெல்வயல், தோட்டக்காணி, இரண்டு கிணறுகள் என்று செல்வச் செழிப்போடு வாழ்ந்தவர்கள் நாங்கள். அவரும் அப்படித்தான் வாழ்ந்தார். எங்களுக்கான தனி வீடும் இல்லாமல் போய்விட்டது. தனிநாடு கேட்கப்போய் வந்தவினைதான் இதுவோ என்று எண்ணத் தோன்றுகிறது. நான் படித்த பள்ளிக்கூடம் இப்போது எப்படி இருக்கும்? அம் மய்யா பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு என்னவாகியிருக்கும்? உடைந்து நாசமாகிப்போயிருக்குமா? அந்த மனிதர் செங்கல்லால் மட்டும் அதைக் கட்டவில்லை. காலையில் மண் வெட்டியைத் தோளில் தூக்கினால் பின்னேரம்தான் அது இறங்கும். வியர்வையால் கட்டிய வீடு அது. என் கிராமம் அவ்வளவு அழகானது. குளம் நிறைந்த தண்ணீர், பாட சாலைகள், சுற்றிவர வயல்வெளிகள், தோட்டங்கள், நல்ல மனிதர்கள் என்று எல்லாம் மயானமாகிவிட்ட ஒரு பூமியாகிக் கிடக்கும் இப்போது. அல்லது வெறும்காடு. ஒவ்வொரு குச்சு ஒழுங்கையிலும் எனது கால்கள் பட்டுத் திரிந்த காலம் நினைவுக்கு வருகிறது. வற்றாப்பளை அம்மாள் கோவில் என்னவாகிக்கிடக்கிறதோ? நந்திக் கடல்தான் அப்போது எங்களுக்கு புனித நீர்த் தடாகம். அதில் இருந்து வைகாசிப் பருவம் நேரம் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து காட்டு வினாயகர் கோவிலில் தண்ணீர் ஊற்றி விளக்கு எரிப்பார்கள். முல்லைத்தீவுக்கே அது பேரதிசயம். வண்டி கட்டி, லொறி பிடித்து, உழவு மெசினில் எல்லாம் பெட்டி நிறைய ஆட்கள் வந்து தண்ணியில் விளக்கு எரிகிற அதிசயத்தைப் பார்த்துப் பரவசப்பட்டுப்போவார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து லொறியில் எங்களது சொந்தம் பந்தம் எல்லாம் வரும். வைகாசி மாதம் எங்கள் வீடு களைகட்டிவிடும். வைகாசிக் காற்று ஒரு கிளுகிளுப்பை மனத்தில் ஏற்றும். முள்ளியவளையில் ஒவ்வொரு மணல் ஒழுங்கைக்குள்ளும் கால்கள் புதையப் புதைய அந்தப் பனம்பழ வாசத்தோடும் கிளுவை வாசத்தோடும் நடந்தது இன்னும் அடி மனத்தில் ஒட்டிக்கிடக்கிறது. எல்லாம் காடுபத்திக் கிடக்குமோ? என் தெருக்கள் ஒவ்வொன்றும் எனதானவை. ஆனால் இப்போது அவை சிங்களவருக்கே ஆகிவிடுமோ என்று பேரச்சமாக இருக்கிறது. வற்றாப்பளையில் நின்று பார்த்தால் நந்திக் கடல் ஒரு தேவதையைப் பார்ப்பதுபோல பரவசமாயிருக்கும். ஆனால் இப்போது அதுதான் ரத்தம் குடித்த கடலாகக் கிடக்கிறது. எமது வாழ்வின் எல்லா அதிசயங்களையும் முடித்துவைத்த உப்போடையாகக் கிடக்கிறது. இனி அதில் தண்ணீர் எடுத்துக் காட்டு வினாயகரிடத்தில் கொண்டு வந்தால் விளக்கெரிந்து அற்புதம் காட்டுமா எனும் சந்தேகம் எழுகிறது. முழுவாழ்க்கையையும் அழித்து விட்டு இரத்தக் கடலாகக் கிடக்கிறது நந்திக்கடல். எல்லா வரலாறுகளையும் உடைத்து வீசிவிட்டது யுத்தம். முந்தியென்றால் பண்டாரவன்னியன் நினைவுக்கல்லுக்குக் கிட்டப் போனாலே ஒரு பரவசம் வரும். ஏனென்று தெரியாத பரவசம். வீரன் அவன் என்று. இப்போது எங்களது கண்ணுக்கு முன்னால் எல்லாம் அழிந்துபோய்க்கிடக்குது. பண்டார வன்னியன் ஆண்ட பூமி என்ற பெயர் மட்டுமே வெறுமையாக மனத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. முன்பு சங்கிலியன் ஆண்ட பூமி என்று யாழ்ப்பாணத்தைப் பெருமை பேசித் திரிந்தோம். இப்பொழுது எமக்கு எமக்கான எமக்கேயான எங்களுடைய ஒரு துண்டு நிலமாவது சொந்தமாகக் கிடைக்குமோ என்று யோசிக்ககூடப் பயமாகவிருக்கிறது. நெடுங்கேணியில் காட்டுக்குள் இருக்கிற ஐயனார் கோவிலுக்கு ஒருமுறை போயிருந்தேன். எனக்குப் பத்து வயதிருக்கும். காடு முழுக்கத் தெய்வங்களை வைத்து வழிபட்டவன்தானே தமிழன். எத்தனைபேர் இதை வாசித்துக் கொண்டிருப்பவர்கள் போய் இருப்பீர்கள்?பழைய நினைவுகள் வரும் உங்களுக்கு. அந்தக் காட்டுக்குள் ஐயனாருக்குக் கிடாய் வெட்டி அன்னதானம் வைத்துச் சமைத்துச் சாராயம் படைத்து அவரை இரவு பகலாகத் திருப்திப்படுத்திய காலம் அது. ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் விடலைப்பருவத்துப் பிள்ளைகளும் என்று காட்டுக்குள் திருவிழா வலு கலாதியாக இருக்கும். ஐயனார் என்றால் பயம் ஒருபக்கம் மகிழ்ச்சி மறுபக்கமாக ஒரே குதூகலம்தான். வாழ்வு என்பது அதுதான். இப்போது அந்தக் காடுகளுக்கு அருகில்கூடப் போக முடியுமோ தெரியாது. எல்லாம் முடிந்துபோய்விட்டது. வாழ்வு, வளம் எல்லாம் முடிந்துபோய் விட்டது. யுத்தம் எல்லாவற்றையும் சப்பித் துப்பிவிட்டது. மனம் முழுக்க அந்தரமாக இருக்கிறது. அமைதியாக இருந்த எங்கள் வன்னிக் கிராமங்களுக்குள் யுத்தத்தைக் கொண்டுவந்த எல்லோர் மீதும் பெருங்கோபம் வருகிறது. யுத்தம் சாகடித்த மனிதர்களுக்காக மூன்றாம் ஆண்டு திதி செய்யக்கூட விடுகிறார்களில்லை என்று ஒட்டுசுட்டானில் இருந்து நண்பி ஒருத்தி அழுகிறாள். மரணம் துரத்திய எனது கிராமங்களை விட்டு விட்டு ஓடிவந்துவிட்டோம். மே மாதம் முழுக்க மனம் பேதலித்துப் போய் இருக்கிறது. மரணங்களை மறக்க முடியவில்லை."