book

குதிரைக்காரன்

Kuthiraikaran (Short Stories)

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. முத்துலிங்கம்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :151
பதிப்பு :2
Published on :2013
ISBN :9789381969267
Add to Cart

"அவனுடைய பெயர் என்னவென்று யாராவது கேட்டால் அவன் ‘மார்ட்டென்’ என்றே சொன்னான். அது பிலிப்பினோ பெயர். ஆனால் அவர்கள் அழைக்கும்போது ‘மார்ட்டின்’ என்றே அழைத்தார்கள். ஒன்றிரண்டுமுறை தவறைச் சுட்டிக் காட்டினான். பின்னர் திருத்துவது அலுத்துப்போய் அவனும் தன் பெயரை மார்ட்டின் என்று சொல்லத் தொடங்கியிருந்தான். ஒரு வருடத்திற்கு முன்னர் பழைய சந்தையில் வாங்கிய கோட்டை அணிந்திருந்தான். வயது ஏறும்போது கோட்டும் வளரும் என்று எண்ணினானோ என்னவோ அது அவன் உடம்பைத் தோல்போல இறுக்கிப் பிடித்துக்கொண்டது. விளிம்புவைத்த வட்டத் தொப்பி ஒன்றைத் தரித்திருந்தான். சாமான்கள் நிரம்பிய முதுகுப்பை பாரமாகத் தொங்கியது. லராமி ஆற்றை ஒட்டிய பாதையில் நடந்து போனால் மார்க் ஓகொன்னருடைய பண்ணை வரும் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் எத்தனை மணி நேரம் அப்படி நடக்க வேண்டும் என்பதை எவரும் சொல்லவில்லை. மரப் பாலங்கள் அடிக்கடி வந்தன. மிகவும் எச்சரிக்கையாக அவற்றைக் கடக்க வேண்டும். ஒன்றிரண்டு பலகைகள் உடைந்து தண்ணீர் மினுங்கிக்கொண்டு கீழே ஓடுவது அவதானிக்கக் கூடியதாக இருந்தது. பாதை இரண்டாகப் பிரிந்த ஒவ்வொரு சமயமும் பிலிப்பைன் நாட்டில் இருக்கும் தன் தகப்பனை நினைத்துக்கொண்டான். அவருடைய அறிவுரை பயனுள்ளதாகத் தோன்றியது. வழிதெரியாத புதுப் பிரதேசத்தில் நடக்கும்போது எப் போதும் பாதை பிரிந்தால் இடது பக்கத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வழி தவறினால் திரும்பும்போது வலது திருப்பங்களை எடுத்துப் புறப்பட்ட இடத்துக்கு வந்து சேர்ந்துவிடலாம். இடம், வலம் என்று மாறி மாறிச் சென்றால் திரும்பும் வழி மறந்து தொலைந்துபோய்விட வேண்டியதுதான். எத்தனை நல்ல புத்திமதி. மான் கூட்டம் ஒன்று அவனைத் தாண்டிப் போனது. கொம்புவைத்த ஆண் மான் பாதையின் நடுவில் நின்று ஒருவித அச்சமும் இல்லாமல் எதையோ தீர்மானிக்க முயல்வதுபோல அவனை உற்றுப் பார்த்தது. அது வெள்ளைவால் மான் என்பது அவனுக்குப் பின்னாளில் தெரியவரும். கறுப்புவால் மான்கள் இன்னும் பெரிதாக இருக்கும். கீழே தூரத்தில் பைஸன்கள் பள்ளத்தாக்கிலே மேய்ந்துகொண்டிருந்தன. ஆனால் அவன் பயப்படுவது கரடிகளுக்குத்தான். அவை ஆபத்தானவை என்று கேள்விப்பட்டிருந்தான். ஓநாய்களும் அவனுக்கு அச்சம் ஊட்டுபவை. பனிக்காலம் முடிந்துவிட்டாலும் இன்னும் சில இடங்களில் கடைசிப் பனி உருகாமல் தரையை ஒட்டிப் பிடித்திருந்தது. அமெரிக்காவில் ஜனாதிபதி ஐஸன்ஹோவர் தனது இரண்டாவது தவணை ஆட்சியைத் தொடங்கி நாலு மாதங்கள் ஆகிவிட்டன. அவனுடைய நாட்டு ஜனாதிபதி மகசெசெ விமான விபத்தில் இறந்துபோய் இரண்டு வாரங்கள் ஆகின்றன. பின்னாளில் உலகப் பிரபலமாகப் போகும் ஒசாமா பின்லாடன் பிறந்து ஒரு மாதம் ஆகியிருந்தது. இது ஒன்றும் அவனுக்குத் தெரியாது. முதுகுப்பையில் பத்திரமாக அவன் காவிய மரக்கன்றுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்பதில் அவன் கவனம் இருந்தது. பண்ணை எப்போது வரும் என அலுத்துப்போய்ச் சற்று நின்று வானத்தை நிமிர்ந்து பார்த்தபோது கண்களை அவனால் நம்ப முடியவில்லை. மஞ்சள் தலை கறுப்புக் குருவிகள் ஆயிரம் ஆயிரமாகத் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பறந்துகொண்டிருந்தன. இவை என்ன பறவைகள் எனக் கண்டுபிடிக்க வேண்டும் என மனதுக்குள் நினைத்துக்கொண்டான். மீண்டும் பார்வையை நேராக்கியபோது ‘ஓகொன்னர் பண்ணை’ என எழுதிய பெயர்ப் பலகை கண்ணில் பட்டது.. ஓகொன்னர் நீண்ட பொன்முடி விழுந்து கண்களை மறைக்கத் தட்டையான அகன்ற நெஞ்சுடன் ஆறடி உயரமாகத் தோன்றினார். மாலை ஆறு மணி ஆகிவிட்டதால் தூரத்தில் தெரியும் இரண்டு மலை முகடுகளைப் பார்த்தபடி ஓய்வெடுத்தார். சூரியனுடைய கடைசிக் கிரணங்கள் அவர் முகத்தைச் சிவப்பாக்கின. அவருக்கு முன் இருந்த இனிப்பு மேசையில் நுரை தள்ளும் பானம் இருந்தது. பியர் ஆக இருக்கலாம். மரநாற்காலிகள் நிறைய இருந்தும் அவர் அவனை உட்காரச் சொல்லவில்லை. மார்ட்டின் தொப்பி விளிம்பில் ஒரு விரலை வைத்து அது போதாதென்று நினைத்தோ என்னவோ இடுப்புவரை குனிந்து வணக்கம் சொன்னான். ‘பண்ணையில் என்ன வேலை செய்யத் தெரியும்?’ என்று அவனிடம் கேட்டார். மார்ட்டின் ‘எல்லா வேலைகளும் தெரியும். கோழி வளர்ப்பு, பன்றிகள், ஆடுகள், மாடுகள் எல்லாம் பராமரிப்பேன். தச்சு வேலையும் கொஞ்சம் கற்றிருக்கிறேன்’ என்றான். அவனுடைய தகப்பன் ‘தச்சுவேலை உனக்கு உதவும். அது யேசுநாதருடைய தொழில்’ என்று சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. ‘குதிரை பராமரித்து உனக்கு ஏதாவது அனுபவம் உண்டா?’ என்றார். ‘இன்னும் இல்லை ஐயா. ஆனால் எதையும் சீக்கிரம் கற்றுக்கொள்வேன்’ என்றான். ‘அப்ப சரி. உனக்குத் தச்சு வேலை வரும் என்பதால் நீ வேலிகளைச் செப்பனிடலாம். குதிரைப் பராமரிப்பாளன் தொம்ஸனுக்கு உதவியாளாக இரு’ என்றார். ‘நன்றி, ஐயா. ஒரு சின்ன விண்ணப்பம். ஒரு செடி கொண்டு வந்திருக்கிறேன். அதை நடுவதற்கு அனுமதி வேண்டும்’ என்றான். ‘செடியா? என்ன செடி?’ என்றார் ஓகொன்னர். ‘அஸ்பென் செடி ஐயா. அதிவேகமாக வளரும். தன் இனத்தைத் தானே பெருக்கிக்கொள்ளும். பண்ணைக்குச் சுபிட்சத்தையும் மனிதர்களுக்கு அமைதியையும் கொடுக்கும்’ என்றான். ‘அப்படியா, மிக்க மகிழ்ச்சி. அஸ்பென் செடி ஒன்றை நானும் தேடிக்கொண்டிருந்தேன். நீ கொண்டுவந்துவிட்டாய், நன்றி. வராந்தாவுக்கு முன் நட்டுவிடு. நான் தினம் தினம் பார்க்கலாம்’ என்றார். மார்ட்டின் ‘ஆகட்டும்’ என்றான். தொம்ஸன் ஒரு கறுப்பின அமெரிக்கன். அறுபது வயதில் சற்றுக் கூன் விழுந்து ஆறடி உயரமாக இருந்தான். யோசித்துப் பார்த்தபோது மார்ட்டின் அமெரிக்காவில் ஆறடிக்குக் குறைவானவர்களை இன்னும் சந்திக்கவில்லை. நேரம் இருட்டிவிட்டதால் சமையல் அறை பூட்டு முன்னர் தொம்ஸன் அவனுக்கு இரவு உணவு வாங்கிவந்து கொடுத் தான். வாட்டிய மாட்டிறைச்சி, பீன்ஸ், ரொட்டி. குதிரை லாயத் துக்குப் பக்கத்தில் இருந்த ஒரு சிறு அறையை அவனுக்கு ஒதுக்கி அங்கே படுத்துக்கொள்ளச் சொன்னான். மரக்கட்டிலின் மேல் பரப்பிய வைக் கோல் மெத்தை ஒன்று கிடந்தது. அதிலே கால்களை நீட்டிப் படுத்த போதும் அவனுக்குத் தூக்கம் வரவில்லை. அவனுக்கு மேல் சரி நேரே பழுப்பு நிறத்தில் பெரிய வௌவால் ஒன்று தலைகீழாகத் தொங்கியது. அவன் அதை பார்த்துக்கொண்டிருந்தபோது அது கால்களை விடுவித்து நேரே விழுந்து பாதியில் செட்டையை அடித்து வெளியே பறந்துபோனது. அவன் நியூயோர்க்கில் ஒருவாரம் தங்கியிருந்தது நினைவுக்கு வந்தது. அமெரிக்காவில் காலடிவைத்த அந்த முதல் நாள் அவனுக்கு ஐந்தாவது மாடியில் தங்க இடம் கொடுத்தார்கள். எவ்வளவோ அவன் மறுத்தும் அவர்கள் சம்மதிக்கவில்லை. கழிப்பறை போவதற்கு 5 மாடிகளும் இறங்கிக் கீழே வந்தான். மறுபடியும் மேலே ஏறினான். மூன்றாம் நாள்தான் கழிப்பறை ஐந்தாம் மாடியிலேயே இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தான். தரையில் கழிப்பறை இருப்பதை அவன் கண்டிருக்கிறான். ஆனால் ஐந்தாவது மாடியில் ஒரு கழிப்பறையை உருவாக்க முடியும் என்பது அவனுக்குப் பெரும் புதிராகவே இருந்தது. எப்படி யோசித்தும் அதைக் கற்பனை செய்ய முடியவில்லை. அமெரிக்காவின் முதல் அதிசயமாக அது மனத்தில் பதிந்துபோய்க் கிடந்தது. குதிரைகள் கால் மாறி நிற்பதும் அவற்றின் கனைப்புச் சத்தமும் அவனை மறுநாள் காலை எழுப்பியது. தொம்ஸன் அவனை அழைத்துச் சென்று குதிரைகளை அறிமுகப்படுத்தினான். அவற்றின் பெயர்கள் எலிஸபெத், தண்டர்போல்ட், ஸ்கைஜம்பர், ரப்பிட்ஸ்டோர்ம் என்று பலவிதமாக இருந்தன. குதிரைகளைப் பார்த்தவுடனேயே அவனுக்கு அதீதப் பிரியம் ஏற்பட்டுவிட்டது. அவற்றைப் பராமரிப்பது பற்றித் தொம்ஸன் சொல்லித் தந்தான். மார்ட்டின் ஒவ்வொரு குதிரையையும் தொட்டு அதன் பெயரைச் சொல்லி சிநேகப்படுத்திக்கொண்டான். குதிரை வளர்ப்பு பற்றி நிறையக் கேள்விகள் கேட்டான். உயர்ஜாதிக் குதிரை ஒன்று மட்டும் கூடிய பாதுகாப்புடன் பிரத்தியேகமாகப் பராமரிக்கப்பட்டது. பகலிலும் மின்சார பல்புகள் எரிந்தன. ‘குதிரையின் கர்ப்பகாலம் 11 மாதம். கருத்தரிக்கக்கூடிய சிறந்தமாதம் மே அல்லது ஏப்ரல். அதிக வெளிச்சம் கருத்தரிக்கும் வாய்ப்பைக் கூட்டும். அதுதான் அப்படியான கவனம். அந்தக் குதிரை சீக்கிரத்தில் கர்ப்பமடையப்போகிறது’ என்று தொம்ஸன் கூறினான். "