book

வஞ்சிமா நகரம்

Vanchima Nagaram

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நா. பார்த்தசாரதி
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :வரலாற்று நாவல்
பக்கங்கள் :96
பதிப்பு :6
Published on :2010
Add to Cart

பூர்ணவாகினி என்று சிறப்பித்துச் சொல்லப்படும் பொன்வானியாறு கடலொடு கலக்குமிடம், அன்று அந்த முன்னிரவு வேளையில் அழகு மிகுந்து தோன்றியது. பௌர்ணமிக்கு மறுநாளாகையினால் சிறிது காலந்தாழ்ந்து உதித்தாலும் நிலாவின் பொலிவு அந்த இடத்தின் பொலிவுக்கு மெருகு ஊட்டியது. பொன்வானியாற்றின் செந்நிற நீரும் மகோதைக் கடலின் நீல அலைகளும் கலக்குமிடம் ஆண்மையும், பெண்மையுமாகிய குணங்களே சந்தித்துக் கலப்பது போல் வனப்பு நிறைந்ததாயிருந்தது. கடலை ஆண்மையாகவும், நதியைப் பெண்மையாகவும் கற்பனை செய்யும் எண்ணத்தைக் கூட அந்தச் சங்கமத் துறையே படைத்துக் கொடுத்தது.
அடர்ந்த மரக்கூட்டங்களுக்கு அப்பால் பொன்வானி யாற்றின் கரையோரமாகவே சென்றால் சேரநாட்டின் வீரத் தலைநகரமாகிய கொடுங்கோளூரை அடைந்து விடலாம். கரையோரமாகத் தென்மேற்கே பத்து நாழிகைப் பயணத்தில் வஞ்சிமாநகரம் இருந்தது. கொடுங் கோளூரை ஒட்டிக் கடலோரமாகவே இருந்த முசிறியில் இரண்டு மூன்று நாட்களாகப் பரபரப்பூட்டும் பயங்கரச் செய்தியொன்று பரவிப் பொது மக்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது. மேற்குக் கடலின் கொடிய கொள்ளைக்காரனாகிய கடம்பர் குறுநில மன்னன் ஆந்தைக் கண்ணன் முசிறியைக் கொள்ளையிடப் போகிறான் என்ற செய்திதான் காட்டுத் தீ போலப் பரவிக் கொண்டிருந்தது.