புத்தக விமர்சனம்

ஆயிரம் ஹைக்கூ ! – நூல் விமர்சனம்
ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : பேராசிரியர் முனைவர் யாழ். சந்திரா. ‘ குடியரசுத் தலைவர் விருது பெற்றவர் ! யாழகம்’140-ஏ, வடக்காவணி மூல வீதி, மதுரை-625 001. மின் அஞ்சல் yazh.chandra@gmal.com வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் . சென்னை .17 தொலைபேசி 044-24342810 , 044- 24310769. மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com 184 பக்கங்கள் விலை ரூபாய் 100. அதிகாலையின் அடுக்களைப் பரபரப்பில் இருந்து விடுபட்டு அருகில் உள்ள நகரத்தின் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மகளை அக்கல்லூரியின் பேருந்தில் ஏற்றிவிட்டு, ஒவ்வொரு நாள் விடியலையும் இரசித்துக் கொண்டே நடைப்பயிற்சியில் தினந்தோறும் வணக்கம் பகிர்ந்து கொள்பவர்களில் ஹைக்கூ இரவியும் ஒருவர். அப்படியான ஒரு காலைப் பொழுதில் தோழர் இரவி கொடுத்த ‘ஆயிரம் ஹைக்கூ’. அன்று இரவு வாசிப்பிற்காகப் படுக்கையறை மேசையில் வைத்து, அன்றைக்கே வாசித்து முடித்து கவிதையின் நெகிழ்வுச் சலனத்தோடு உறங்க முற்பட்ட தருணங்கள் நினைவில் ஆடுகின்றன. கல்லூரிப் பணியின் கடுமையான சூழல் திருடிக்கொண்ட பொழுதுகளில் விமர்சனம் எழுதுவது தள்ளிக்கொண்டே போனது. கோடை விடுமுறையின் சோம்பலான காலைப் பொழுதில் மீண்டும் “ஆயிரம் ஹைக்கூ” கையில் எடுத்த போதும் இரு மாதங்களக்கு முன்னர் கிடைத்த அதே கவிதை நெகிழ்வு! ஹைக்கூ கவிஞராய், தோழர் இரவி பெற்ற வெற்றியல்லவா இது! பன்னிரண்டாவது ஹைக்கூ நூலைத் தொகுப்பாய் – தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் மாலையாய்த் தந்திருக்கும் கவிஞரின் படைப்பு முயற்சியை, வாமன அவதாரம் எனலாமா? காண்கின்ற காட்சி, எண்ணுகின்ற எண்ணம், பேசுகின்ற பேச்சு (உண்ணும் சோறும், பருகும் நீரும்) எல்லாமே கவிஞருக்கு மூன்று வரி முத்தாய்ப்பு தானோ? அதனால் தான், முன்றில் அணில் கூட, ஹைக்கூவாகிறதோ கவிஞருக்கு? ஹைக்கூ கவிதையை முதுகில் சுமப்பவை அணில்கள் ! என்ற கவிதை சேது பாலத்தோடு ஹைக்கூவையும் அல்லவா நினைவுச் சரடுகளில் கோர்த்துவிடுகிறது. வியர்வைப் பெருக்கோடு விசிறி விற்பவனைக் காட்டும் ஜப்பானிய ஹைக்கூவிற்குச் சற்றும் சளைக்காத கவிஞரின் படைப்பு. பட்டு நெய்தான் கந்தல் உடையுடன் நெசவாளி ! என்ற ஹைக்கூ நாடு, மொழி, இனம் ஆகியவற்றின் எல்லைகள், தொழிலாளி என்ற வர்க்கத்தினரின் துன்பத்தால் அழிக்கப்படும் ஒருமையைச் சுட்டும் இந்த ஹைக்கூ படைப்பாளியின் சமூகச் சார்பின் வெளிப்பாடாகிறது. மாறி வரும் காலங்களின் சாட்சியாய் நழுவிப் போகும் நம்பிக்கை. காவல் தெய்வம் கையில் அரிவாள் காணவில்லை உண்டியல் ! என்ற ஹைக்கூவும், மக்களைக் காப்பது இருக்கட்டும் முதலில் உன்னைக் காப்பாற்றிக் கொள் தெருவோரக் கடவுளே! என்ற ஹைக்கூவும், வெண்தாடி வேந்தரின் நாத்திகச் சாட்சியாய்ச் சாட்டைகளாகின்றன. அழும் குழந்தை பால் ஊற்றினர் பாம்புப் புற்றுக்கு! என்ற ஹைக்கூ, ஞானப்பால் சம்பந்தரைச் சமகாலத்தில் நோக்கும் புதிய பக்தித் தமிழாக முப்புரிக் கவிதையாகிறதே! இயற்கையின் வளர்ச்சியும், மலர்ச்சியும் ஏழையின் பிழைப்பில் இரசனையாகாமல் இழப்பாகும் அவலத்தை, யாரும் வாங்காமலே மலர்ந்தன பூக்கள் வாடினால் பூக்காரி ! என்ற கவிஞரின் படைப்பு, படைப்பாளியின் சமூக அக்கறையின் சாட்சியமாகிறது. கொஞ்சம் நில் இரயிலே தண்டவாளத்தில் இரயில் வண்ணத்துப்பூச்சி என்ற பதைபதைப்பு, கவிதை மனதின் கனிவு அல்லவா? வானிலிருந்து குதித்தும் காயம் இல்லை மழைத்துளி! என்ற கவி ஆசுவாசம், வாசிப்பின்போதான இதழோரச் சிரிப்பின் இரசனைக்கு விருந்தாகிறது! வீரத்தில் சிங்கமாய் வேகத்தில் சிறுத்தையாய் எப்போது மனிதனாய்? என விலங்காகும் மனிதத்தை, வினாவிற்கு உள்ளாக்கும் கவிஞரின் அக்கறை! காவிரிக்கு விலங்கு கண்ணகி கோவிலுக்குத் தடை ஒன்றுபட்ட இந்தியா ! என்ற ஆதங்கம் தமிழர்களின் ஏக்கப்பெருமூச்சாக நூற்றாண்டுகளைக் கடந்து விடுமோ? அன்னிய இலக்கிய வடிவம் படைப்பாளிக்குள் பதிந்து, அதன் வழி தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த படைப்பாளியாய் உயர்ந்தோங்குகிறார் தோழர் இரவி! கலை வாழ்க்கைக்காக என்ற கடப்பாடு கவிதையின் அடிநாதமாக ஆயிரம் ஹைக்கூவில் எண்ணாக - எண்ணமாக! செறிவும், வலிவும் பெற்ற கவிதைகள், தெளிவும் பொலிவும் பெற்றுத் தமிழ்க் கவிதை உலகின் தனி முத்திரையாக மிளிர்கின்றன! கவிஞரின் முயற்சிகள் வளரட்டும்! வாழ்த்துக்கள்! . நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி இறந்த பின்னும் இயற்கையை ரசிக்க கண் தானம் !

இறைவன் தந்த பரிசு ! – நூல் விமர்சனம்
இறைவன் தந்த பரிசு ! நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் . 9486264022. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! வாசகன் பதிப்பகம் .11/96 சங்கிலி ஆசாரி நகர் .சன்னியாசி குண்டு சேலம் .636015. விலை ரூபாய் 35. செல் 9944391668 kavignareagalaivan@gmail.com நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் அவர்கள் தச்சுத் தொழிலாளி. இவருக்கு மரத்தை செதுக்குவது மட்டுமல்ல சொற்களை செதுக்குவதும் கை வந்த காரணத்தால் கவிதை வடித்துள்ளார் .நூல் ஆசிரியருக்கும் ,பதிப்பாளர் இனிய நண்பர் ஏகலைவன் அவர்களுக்கும் பாராட்டுக்கள் .வாசகன் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது . . ஆணாதிக்கச் சமுதாயத்தைப் பார்த்து கேட்க்கும் கேள்விகள் சிந்திக்க வைக்கின்றன .சிறு வயதிலேயே ஆணாதிக்க சிந்தனையை கற்பித்து விடுவதால் அது இரத்தத்தில் கலந்த ஒன்றாகி விடுகின்றது. சமுதாயத்தில் மாற்றம் நிகழ வேண்டும் .சக மனுசியின் மனசை மதிக்கும் உள்ளம் வேண்டும் .பெண்களை சமமாக மதிக்கும் உள்ளம் எல்லா ஆண்களுக்கும் வர வேண்டும் .அதற்காக படைப்பாளிகள் குரல் தர வேண்டும் .நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் குரல் தந்துள்ளார். பாராட்டுக்கள் . உன்னைச் சுற்றும் சாபங்கள் ! வீட்டுக்கு ஒரு பெண்டாட்டி அவருக்கு மலடி என்று பெயர் பிள்ளை பெறாட்டி தனக்கோர் வாரிசு வேண்டுமென்று ஆண் அவன் மறுமணம் செய்து கொள்கிறான் . தனக்கே குறை இருந்தால் மனைவிககோர் மணம் செய்வானா ? ஆசிரியர் பணி அறப்பணி என்பார்கள் .ஆசிரியர் சமுதாயத்திற்கு வேண்டுகோள் போல வைக்கும் கவிதை நன்று .அறிவொளி ஏற்றும் விளக்குகளான ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டும் . நல்ல குருவுக்கு நன்றி ! திறமை நிறைந்த ஆசிரியர்களே வறுமை நிறைந்த மாணவனுக்கும் பெருமை வாய்க்கும் கல்வியை சேவையாக கற்றுத் தாருங்கள் ! வாழ்வியல் கருத்துக்களை விதைக்கும் விதமாக பல கவிதைகள் நூலில் உள்ளன .பாராட்டுக்கள் .துன்பத்திற்கு துவளாமல் வாழ்வது எப்படி ? என்பதை உணர்த்துகின்றார் . சுகங்கள் விரும்பாதீர் ! சுமக்கத் துணிந்தவனுக்கு மலையும் துரும்பாகும் ! சுமக்க இயலாதவனுக்கு தன் தேகமே சுமையாகும் ! சங்கடத்தையும் சுகமாய் மாற்றிக் கொண்டால் தொலைந்துவிடும் துன்பங்கள் இதை மனதிடம் சொல்லி வையுங்கள் ! உழைப்பாளிகளின் சார்பில் உரக்க குரல் தந்து உள்ளார் . உழைத்தவன் களைக்கும் முன்னே அவன் ஊதியத்தைக் கொடுங்கள் ! அவனுக்கு சுகங்கள் இல்லாவிட்டாலும் உயிராவது இருக்கட்டும் ! . தமிழகத்தின் சிறப்புகளில் ஒன்றாக ஒரு காலத்தில் இருந்த கூட்டுக் குடும்பம் பற்றி சிந்திக்க வைக்கும் கவிதை நன்று .கூட்டுக் குடும்பம் இன்று சிந்திந்து தனித்தனி குடும்பமாகி விட்டன. உயர்ந்த பின்னே மறவாதே !! தேனீக்களின் பெருந்தன்மை அதன் கூட்டை அழித்தாலும் மீண்டும் கூடி கூடு கட்டுது ! நம் கூட்டுக் குடும்ப வாழ்வில் சிறு சண்டை வந்தாலும் மனம் விலகி மீண்டும் சேர்வதில்லை ! தமிழ்ப் பண்பாட்டை சீரழித்து வரும் தொலைக்காட்சித் தொடர்களுக்கு தமிழக மக்கள் அடிமையாகி விட்டனர் .இவர்கள் மீட்டு எடுக்க வேண்டிய அவசர அவசியம் உள்ளது . தொலைக்காட்சியால் வாசிக்கும் நல்ல பழக்கமும் வழக்கொழிந்து வருகின்றது .நூல் ஆசிரியர் கனவிலும் வாசிக்கிறார் . சொப்பனத்தில் ஒரு புத்தகம் ! உறங்க இமை மூடினேன் சொப்பனத்தில் புத்தகம் படித்தேன் ! நூலகத்தின் நூலிலே நல்ல கருத்துக்கள். சலித்தவன் சாதித்தது இல்லை சாதிப்பவன் சலிப்பதும் இல்லை இது நல்ல கருத்து இந்த கருத்தை என் இதயத்தில் ஏற்றி வைத்தேன் ! நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் அவர்களுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் .இறைவன் தந்த பரிசு என்ற பெயரில் நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் அவர்கள் தந்த பரிசு நன்று

கவித்தென்றல் ! – நூல் விமர்சனம்
கவித்தென்றல் ! நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் ! mail2mariammal@gmail.com நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! வாசகன் பதிப்பகம் .11/96 சங்கிலி ஆசாரி நகர் .சன்னியாசி குண்டு சேலம் .636015. விலை ரூபாய் 35. செல் 9944391668kavignareagalaivan@gmail.com நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் அவர்கள் போலியோ நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி .உடலில் குறை இருந்தாலும் உள்ளத்தில் குறை இல்லாத காரணத்தால் ஆழ்ந்து சிந்தித்து கவிதை வடித்துள்ளார் .குடத்து விளக்காக இருந்த கவிஞர் பி .மாரியம்மாள் அவர்களின் கவிதை ஆற்றலை குன்றத்து விளக்காக ஒளிரும் வண்ணம் நூலாக்கிய இனிய நண்பர் ஏகலைவன் அவர்களுக்கு பாராட்டுக்கள் . நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் அவர்கள் B.COM ,D.C.A, D.T.P. படித்து உள்ளார்கள்.இந்த நூலை தன் பெற்றோர்களுக்கு காணிக்கை ஆக்கி உள்ளார் . இந்த நூல் வெளி வர உதவிய உள்ளங்களுக்கு மறக்காமல் நன்றியை பதிவு செய்துள்ளார்கள் . நூலில் முதல் கவிதை செய்தித்தாள் விற்றுப் படித்து தலைப்புச் செய்தியானவர் .இந்தியாவின் கடைக்கோடியான இராமேசுவரத்தில் படகோட்டி மகனாகப் பிறந்து இந்தியாவின் முதற்குடிமகனாக உயர்ந்த மாமனிதர் அப்துல் கலாம் பற்றிய கவிதை நன்று. ஐயா அப்துல் கலாம் ! கனவுகளை கனவில் மட்டுமல்லாமல் நினைவிலும் சிற்பமாக செதுக்கியவர் . வீடு வீடாக செய்தித்தாள் போட்டு கல்வி பயின்ற பல்கலைக்கழகம் . 10 வகுப்பு தேர்வில் தோற்று பின் நாளில் பெரிய சாதனைகள் புரிந்தவர்கள் பட்டியல் நீளம்.இதை உணராமல் தேர்வில் தோல்வி அடையும் சிறு தோல்வி கூட தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர் .தோல்வியால் துவளும் நெஞ்சங்களுக்கு தன்னம்பிக்கை விதைக்கும் விதமான கவிதை மிக நன்று . வீழ்வது தோல்வியல்ல ! கீழே விழுவதால் வீழ்ந்து போவதில்லை .. அருவி ! மண்ணில் விழுவதால் பழுதாவது இல்லை .. விதை ! தவறி விழுவதால் தளிர்நடை மறுப்பதில்லை மழலை ! முயற்சியில் தோல்வியடைந்தால் விட்டு விலகுதல் அழகா ? உனக்கு .. எளிய சொற்களின் மூலம் வாழ்வியல் கருத்துக்களை நுட்பமாக கற்பிக்கும் விதமாக கவிதைகள் வடித்துள்ளார் .பாராட்டுக்கள் . கற்றது கையளவு ! அம்மாவிடம் அன்பைக் கற்க வேண்டும் ! நண்பரிடம் நேசத்தைக் கற்க வேண்டும் ! உறவினர்களிடம் விட்டுக்கொடுத்தலைக் கற்க வேண்டும் ! முதியோர்களிடம் அனுபவத்தைக் கற்க வேண்டும் ! இனிய நண்பர் மாற்றுத்திறனாளிகள் கவிதைத் தொகுப்பு வெளியிட்டவர் பதிப்பாளர் ஏகலைவன் பற்றிய கவிதை நன்று . நம்பிக்கை நாயகனே வா ! மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகவே வாழ்ந்து கொண்டு பலரின் வாழ்க்கைப் பாதையில் ஒளியை மலரச் செய்யும் சகோதரனே ஏகலைவா ..! புதுக்கவிதைகள் ஹைக்கூ கவிதைகள் நூலின் உள்ளன. பாராட்டுக்கள் . அன்பின் மேன்மை சொல்லும் ஹைக்கூ நன்று . எதிரியையும் பணியவைக்கும் ஆன்ம மந்திரம் அன்பு ! நட்பின் நுட்பம் சொல்லும் ஹைக்கூ மிக நன்று . இன்பத்தில் தூரமிருந்தாலும் துன்பத்தில் பக்கமிருக்கும் உன்னதமான நட்பு ! இன்று பலர் குடியால் சீரழிந்து வருகிறார்கள் .மதிப்பை எங்கும் இழந்து வருகின்றனர் . அவர்களுக்கான ஹைக்கூ ஒன்று . குடியை நிறுத்து ஊற்றெடுக்கும் வளமை ! கவித்தென்றல் நூலிருக்கான தலைப்பு மிகப் பொருத்தம் பெயருக்குப் பெயர் வைக்காமல் உண்மையில் கவிதைகள் கவித்தென்றலாகவே இருந்தது .நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் அவர்களுக்கு எழுதிய இந்த நூலிற்காக பாராட்டுக்கள் .இன்னும் எழுத உள்ள நூலிற்கு வாழ்த்துக்கள்.

உழைப்பின் நிறம் கருப்பு ! – நூல் விமர்சனம்
உழைப்பின் நிறம் கருப்பு ! ( ஹைக்கூ கவிதைகள் ) நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! aarison.2008@gmail.com நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! தளிர் பதிப்பகம் 2/2 தீபம் வளாகம் ,முதன்மைச் சாலை ,சாத்தூர் 626203.விலை ரூபாய் 100. உழைப்பின் நிறம் கருப்பு ! நூலின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றது.நூலின் அட்டைப்படத்தில் கருப்பு நிற உழைப்பாளியின் புகைப்படம் மிக நன்று .தமிழ்த் தேனீ முனைவர் இரா மோகன் அவர்களின் அணிந்துரை , வாழ்த்துரை நூலிற்கு அணிவித்த மகுடமாக உள்ளன. த .மு .எ .க .ச .திரு எஸ் .கருணா ,இயக்குநர் தமிழ் இயலன் ,முனைவர் பு .ரா. திலகவதி , ஹைக்கூ தளத்தில் தொடர்ந்து இயங்கி வரும் இனிய நண்பர் பொன்குமார் ஆகியோரின் அணிந்துரை, வாழ்த்துரை மிக நன்று .இந்த ஹைக்கூ கவிதை நூலை ஹைக்கூ கவிஞர்களின் முன்னோடி கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு காணிக்கை ஆக்கி இருப்பது மிகச் சிறப்பு . நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் அவர்கள் சென்னையில் நடந்த ஹைக்கூ திருவிழாவில் கலந்து கொண்டார் .சந்தித்து உரையாடினேன். பல்வேறு சிற்றிதழ்களில் தொடர்ந்து ஹைக்கூ படைத்து வரும் படைப்பாளி .ஹைக்கூ எழுதும் நுட்பம் உணர்ந்த காரணத்தால் தொடர்ந்து ஹைக்கூ நூல்கள் எழுதி வருகிறார். அலைபேசி வழி தினந்தோறும் ஹைக்கூ அனுப்பியவர் . முயன்றால் வெற்றி பெறலாம் .வானம் வசப்படும் என்பதை உனர்த்தும் விதமான நூலின் முதல் ஹைக்கூ இது . மிக நன்று . இறக்கைகளை அசைக்க அசைக்க அருகில் வருகிறது வானம் ! எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் சிலைகளின் அழகில் உள்ளம் மயங்குவது உண்டு .சிற்பியின் திறமை அறிந்து வியப்பது உண்டு .சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்தும் ஹைக்கூ நன்று . சிற்பியை வணங்கியது சிலை ! எந்த நோயும் இல்லாவிட்டாலும் தனக்கு நோய் இருப்பதாக அஞ்சி வாழும் மனிதர்கள் உண்டு .அவர்களுக்கான ஹைக்கூ . நோயில்லை மனதை உலுக்கியது பயம் ! நிலவு வந்ததும் அல்லி மலரும் அறிந்து இருக்கிறோம் .பார்த்தும் இருக்கிறோம் .அதனை கவித்துவமாக உணர்த்தும் ஹைக்கூ நிலவின் முத்தத்தில் ஓசையின்றி விழித்தது மலர் ! இந்த ஹைக்கூவில் மலர் என்பதற்குப் பதில் அல்லி என்றும் எழுதி இருக்கலாம் . வாசிப்பது யாரென்றாலும் இசை தரும் புல்லாங்குழல் .நிறம் பார்ப்பதில்லை .குணம் பார்ப்பதில்லை. பாரபட்சம் பார்ப்பதில்லை. என்பதை விளக்கும் ஹைக்கூ . நிறம் பற்றி கவலையின்றி இசையாக்கியது புல்லாங்குழல் காற்று ! ஜல்லிக்கட்டு நடக்கும் ஒவ்வொரு வருடமும் உயிர் பலியும், காயங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன .ஜல்லிக்கட்டின் காரணமாகவே விதவையான பெண்கள் கிராமங்களில் நிறைய உள்ளனர் மனிதாபிமான அடிப்படையில் வடித்த ஹைக்கூ . உயிர்வதை செய்து உயிரிழக்கிறார்கள் ஜல்லிக்கட்டு ! மனிதனில் எவனும் சாமி இல்லை என்பதை உணராமல் ஆசாமிகளை சாமி என்று சொல்லி ஏமாந்து பணம் கட்டி வருகின்றனர் .அவர்களோ சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் .கோடிகளை சேர்த்து விடுகின்றனர் . பெண்களிடம் தவறாக நடக்கின்றனர் . விழிப்புணர்வு விதைக்கும் ஹைக்கூ . போதைமடம் காவிக்குள் வழிகிறது காமரசம் ! இயற்கையைக் காட்சிப் படுத்துதல் , முதல் இரண்டு வரிகளில் வியப்பு ஏற்படுத்தி மூன்றாம் வரியில் விடை சொல்லும் விதமாக எழுதுவது ஹைக்கூ வடிப்பதில் உள்ள யுத்திகள் .அந்த வகை ஹைக்கூ . இனிக்கிறது வேப்பங்காடு குயிலோசை ! கேள்விப்பட்ட பொன்மொழிகளை மாற்றி எழுதுவது ஹைக்கூ வடிப்பதில் உள்ள ஒரு கலை .நிறைகுடம் தளும்பாது என்ற பொன்மொழியை மாற்றி சிந்தித்து வித்தியாசமான ஹைக்கூ வடித்துள்ளார் .நன்று . நிறைகுடம் பாறைக்குள் தளும்பியது ஊற்று ! தீப்பெட்டியை காட்சிபடுத்தி அதன் மூலமாக சோம்பேறியாக இருக்கும் மனிதனுக்கு சுறுசுறுப்பை போதிக்கும் விதமான ஹைக்கூ . உறங்கும் தீ தீப்பெட்டிக்குள் தீக்குச்சிகள் ! தோற்றத்தை , நிறத்தை வைத்து யாரையும் குறைவாக எண்ணுதல் தவறு என்பதை உணர்த்தும் ஹைக்கூ அருவருப்பு அல்ல உழைப்பின் நிறம் கருப்பு ! நூலின் தலைப்பைத் தந்த ஹைக்கூ இதுதான் .மிக நன்று நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் . . நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி www.eraeravi.com www.kavimalar.com http://www.eraeravi.blogspot.in/ . http://www.tamilthottam.in/f16-forum http://eluthu.com/user/index.php?user=eraeravi http://www.noolulagam.com/product/?pid=6802#response* இறந்த பின்னும் இயற்கையை ரசிக்க கண் தானம் !

எல்.டி.டி.ஈ-யை காட்டி மிரட்டிய தமிழக போலீஸ் அதிகாரி!
எல்.டி.டி.ஈ-யை காட்டி மிரட்டிய தமிழக போலீஸ் அதிகாரி! ஆவணமற்றா அதிசயம்!  ''என் இரவு தூக்கத்தைத் தமிழக அரசியல்வாதிகள் தொலைத்துவிட்டார்கள்'' - கடந்த சட்டசபைத் தேர்தலின்போது தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த எஸ்.ஒய்.குரைஷி ஆதங்கத்தோடு கொட்டிய வார்த்தைகள் இவை. இப்போது பணியில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட குரைஷி,‘AN UNDOCUMENTED WONDER’ ஆவணமற்ற அதிசயம்) என்ற தலைப்பில் எழுதியிருக்கும் புத்தகம் சூட்டைக் கிளப்பியிருக்கிறது. திருமங்கலம் ஃபார்முலா, பண விநியோகம் என தேர்தல் தில்லுமுல்லுகளைத் தோலுரித்திருக்கிறார் குரைஷி. ஆனால், எந்த இடத்திலும் தனிப்பட்ட நபர்களின் பெயரையோ கட்சியின் பெயரையோ நேரடியாக குரைஷி குறிப்பிடவில்லை.  

''தேர்தலில் அச்சுறுத்தல்கள் என்பது வெளியில் இருந்து மட்டுமல்ல... அதிகாரிகள் மட்டத்திலும் எதிரொலிக்கின்றன. நடுநிலை தவறும் அதிகாரிகளை உடனே மாற்றிவிடுவோம். 2011 சட்டமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் உளவுத் துறை கூடுதல் டி.ஜி.பி-யாக இருந்தவர், எஸ்.பி., டி.ஐ.ஜி-க்களை அழைத்து அரசியல் தொடர்பாக பேசிக்கொண்டிருப்பதாக தேர்தல் கமிஷனுக்குத் தகவல் வந்தது. அவருடைய அரசியல் செல்வாக்கால், போலீஸ் அதிகாரிகள் மீது கட்டுப்பாடு இருந்தது; இது ஆளுங்கட்சிக்கு உதவியாக இருக்கிறது என புகார்கள் வந்தன. இதனால், அவரை மாற்ற முடிவெடுத்தோம். சம்மன் அனுப்பி டெல்லிக்கு வரவழைத்து விசாரித்தோம். மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலுக்குப் பார்வையாளராகப் போகச் சொன்னோம். உடனே அவர், 'தேர்தலைச் சீர்குலைக்கத் தமிழகத்தைத் தாக்க எல்.டி.டி.ஈ திட்டமிட்டிருக்கும் தகவல் உளவுத் துறை மூலம் கிடைத்திருக்கிறது. அதோடு தேசிய தலைவர்கள் மூன்று பேரைத் தாக்கவும் எல்.டி.டி.ஈ திட்டமிட்டிருக்கிறது’ என்று சொன்னார். அது தொடர்பாக முடிவு எடுக்க முடியாத அளவுக்கு நெருக்கடியை உருவாக்க முயன்றார். 'தேர்தலில் பிரச்னைகள் எதுவும் ஏற்பட்டால் உங்களைத்தான் சந்தேகப்படுவோம்’ என்று சொன்னேன். கடைசியில் அவர்  விடுப்பில் மலேசியா சென்றுவிட்டார். அதன் பிறகு மத்திய உள்துறைச் செயலாளர் கோபால் பிள்ளையை அழைத்து விசாரித்தபோது 'எல்.டி.டி.ஈ மிரட்டல் எல்லாம் பொய். விடுதலைப் புலிகள் பற்றி அவருக்கு எதுவும் தெரிய வாய்ப்பு இல்லை’ என்றார். அதன் பிறகு மூன்று பேர் லிஸ்டில் இருந்து ஒருவரை உளவுத் துறை கூடுதல் டி.ஜி.பி-யாகத் தேர்வு செய்தோம்'' என திகில் கிளப்பியிருக்கிறார் குரைஷி!

அடுத்து திருச்சியில் ஆர்.டி.ஓ-வாக இருந்த சங்கீதா பற்றி விவரிக்கிறார். ''பஸ்ஸில் 20 கோடி ரூபாய் பணம் கொண்டுசெல்லப்படுவதாக நள்ளிரவு 1.30 மணிக்கு சங்கீதாவுக்கு தகவல் கிடைக்க... உடனே பொன்நகர் ஏரியாவுக்குப் போகிறார் சங்கீதா. அங்கே பஸ்ஸும் இனோவா காரும் நிற்கின்றன. அருகில் இருந்த சி.ஆர்.பி.எஃப் போலீஸ்காரர்களுக்கு தகவல் கொடுக்கிறார் சங்கீதா. அவர்கள் வந்து சேர்வதற்குள் கார் கிளம்பிவிடுகிறது. பஸ்ஸை சோதனையிட்டபோது 5.01 கோடி ரூபாய் சிக்குகிறது.

சுய உதவிக் குழு, காது குத்துதல், மொட்டையடித்தல், ஆரத்தித் தட்டு, திருமண விழா என விதவிதமான வழிகளில் தேர்தலில் பணம் விநியோக  விவகாரம் நடந்துவருகிறது. இப்படி 40 வழிகளில் பண விநியோகம் செய்யப்படுவதைக் கண்டறிந்தோம்.

2009-ல் மதுரை திருமங்கலம் இடைத்தேர்தலில் நடந்த பண விநியோகம் அமெரிக்கா வரை போனது. இதுபற்றிய உளவுத் தகவல் அமெரிக்காவுக்குப் போனதை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியிருக்கிறது. அரசியல் கட்சிகளிடம் இருந்து வாக்காளர்களுக்கு லஞ்சமாகப் பணம், பொருள் வழங்குவது இந்தத் தேர்தலில் இருந்துதான் ஒரு அம்சமாக மாறியது. இது ஒரு குறிப்பிட்ட மத்திய அமைச்சரின் வெற்றி ஃபார்முலா ஆனது. திருமங்கலத்தில் ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய் வரை அந்த அமைச்சர் வழங்கினார். இந்த ஸ்டைல்தான் பிறகு 'திருமங்கலம் ஃபார்முலா’ எனப் பெயர் பெற்றது. 2011 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலின்போது திருமங்கலம் ஃபார்முலாவை முறியடிக்க தேர்தல் கமிஷன் புது ஃபார்முலாவைப் போட்டது. பீகாரில் கிடைத்த அனுபவத்தை வைத்து, தமிழகத்தில் பண ஆதிக்கத்தைத் தடுக்க ஆபரேஷனில் இறங்கினோம். பறக்கும் படைகள் மூலம் பண விநியோகத்தைத் தடுத்தோம். பணத்தை கொண்டுசெல்ல முடியவில்லை என்று வர்த்தக நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. தேர்தல் கமிஷனின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்தது நீதிமன்றம். ஆனால், தன்னார்வக் குழுக்கள் இந்தத் தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட்டதால், தலைமை நீதிபதி அடங்கிய பெஞ்ச் தடையை விலக்கியது!'' என்று தைரியமாகக் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் இது ஆவணமற்ற அதிசயம்தான்!

- எம்.பரக்கத் அலி

 

மேலும் படிக்க...


புத்தகம் வாழும் – ஃபாரென்ஹீட் 451 புத்தக விமர்சனம்

ஃபாரென்ஹீட் 451. காகிதம் தானாகவே எரிய ஆரம்பிக்கத் தேவைப்படும் தோராயமான வெப்பநிலை. புகழ்பெற்ற அறிவியல் புனைகதை எழுத்தாளர் ரே ப்ராட்பரி தன்னுடைய நாவலுக்கு வைத்த தலைப்பும் இதுதான். ‘புத்தகங்கள் தடைசெய்யப்பட்ட எதிர்காலத்தில்' நடப்பதாக எழுதப்பட்ட அந்த நாவலின் நாயகன் தீயணைப்பு வீரன். யார்யாரெல்லாம் புத்தகங்களை வைத்திருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்து அவர்கள் வீட்டுக்குச் சென்று அந்தப் புத்தகங்களை எரிக்கும் பணியில் இருப்பவன். ஒரு நாள் அவனுடைய புத்தக எரிப்புக் குழு ஒரு மூதாட்டியின் ரகசிய நூலகத்தை எரிக்கச் செல்கிறது. புத்தகங்களை எரிப்பதை அனுமதிக்காத அந்த மூதாட்டி தன்னைத் தானே எரித்துக்கொண்டு இறந்துபோகிறார். போயும்போயும் புத்தகங்களுக்காகத் தங்கள் உயிரையும் மாய்த்துக்கொள்பவர்கள் இருக்கிறார்கள் என்பது நாவலின் நாயகனுக்கு அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்துகிறது. அதன் பிறகு அவன் வாழ்க்கை முற்றிலுமாக மாறிப்போகிறது.

மேலும் படிக்க...


ஜெயிப்பது நிஜம் ! – நூல் விமர்சனம்
ஜெயிப்பது நிஜம் ! நூல் ஆசிரியர் இன்ஷ்பயரிங் இளங்கோ ! md@acea2z.com ( பார்வையற்றவர் ) நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! கிழக்கு பதிப்பகம் 177/103, முதல் தளம் அம்பாள் கட்டிடம் ,லாயட்ஷ்சாலை ,ராயப்பேட்டை , சென்னை .6000014. விலை ரூபாய் 100. இந்த நூலில் 17 கட்டுரைகள் உள்ளன.படிக்கும் வாசகர் மனதில் தன்னம்பிக்கை விதைக்கும் நூல் .நூல் ஆசிரியர் இன்ஷ்பயரிங் இளங்கோ அவர்கள் புறப் பார்வையற்ற மாற்றுத் திறனாளி அல்ல அவரது மொழியில் சிறப்புத் திறனாளி ஆனால் அவருக்கு அகப் பார்வை ஆயிரம் உள்ளன என்பதை மெய்பிக்கும் நூல் இது . குறை ஒன்றும் இல்லை ,நூற்றுக்கு நூறு ,காலின் பலம், வானமே எல்லை, நினைத்தது நிறைவேறும் ,தட்டுங்கள் திறக்கப்படும் ,மனமிருந்தால் மார்க்கமுண்டு இப்படி கட்டுரைகளின் தலைப்புகளே தன்னம்பிக்கை தரும் விதமாக , சிந்திக்க வைக்கும் விதமாக , நேர்மை சிந்தனை விதைக்கும் விதமாக , உடன்பாட்டு சிந்தனை வளர்க்கும் விதமாக உள்ளன .பாராட்டுக்கள் . .நூல் ஆசிரியர் இன்ஷ்பயரிங் இளங்கோ பற்றி சில வரிகள் .ACE PANACEA SOFTSKILLS ( www.acea2z.com) என்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ,ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் ,பன்முகஆற்றல் மிக்கவர் ,புகழ்பெற்ற பல விளம்பரங்களில் இவர் குரல் ஒலித்துள்ளது ,சிறந்த பேச்சாளர் ,பல்வேறு விருதுகள் பெற்றுளார் .நல்ல நடை அறிவுரை போல இல்லாமலும் ,வாழ்க்கை வரலாறு போல இல்லாமலும் இயல்பான நடையில் உள்ளது .படிக்க விறுவிறுப்பாக உள்ளது . தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் உள்ளது . ஆசிரியர் முன்னுரையில் உள்ள அறிஞர் அண்ணா சொன்ன கருத்து சிந்திக்க வைத்தது . அறிஞர் சொன்ன மேற்கோள் , "பாருங்கள் உலகத்தில் எல்லா இடங்களிலும் தமிழர்கள் இருக்கிறார்கள் .மலேசியாவில்தான் தமிழர்கள் வாழ்கிறார்கள் " .அப்படித்தான் வாழ்தல் வேறு ,இருத்தல் வேறு . உலகில் ஒப்பற்ற உறவு அன்னை .அந்த அன்னை பற்றியும் குறிப்பிட்டு உள்ளார் . "என் வாழ்க்கையில் என்னைப் படிக்க வைத்து இந்த நிலைக்குக் கொண்டு வந்தவர் சமீபத்தில் மறைந்த என் தாயார் .எனக்கு எப்போதும் எல்லா நிலையிலும் உறுதுணையாக இருந்தவர் .அவருடைய போராட்ட குணம்தான் எனக்கும் வாய்த்திருக்கிறது .அதற்க்கு அவருக்குதான் நன்றி சொல்ல வேண்டும் " .வரிகளைப் படிக்கும்போது வாசகர்களுக்கு அவரவர் அன்னை நினைவு வந்து விடும் . .கல்லூரியில் படித்த காலத்தில் ராபர்ட் என்ற மாணவனால் ராக்கிங் என்ற பெயரில் அவமானப்படுத்தப்பட்டக் காட்சி நெகிழ்ச்சி .நூல் ஆசிரியர் இளங்கோ பிறந்ததில் இருந்து பார்வை இல்லாதவர் .அவரை நீ அம்மாவை பார்த்து இருக்கிறாயா? அப்பாவை பார்த்து இருக்கிறாயா? உன்னை பார்த்து இருக்கிறாயா? சூரியன் ,சந்திரன் ,நட்சத்திரம் ,மலை ,அருவி ,நதி பார்த்து இருக்கிறாயா? இப்படி கேள்விகளால் காயப் படுத்த , அமைதியாக இருந்து இளங்கோவிடம் பேசாம தற்கொலை செய்து சாகலாம் என்று எண்ணுகிறாயா ? என்றபோது அவனிடம் , "உனக்கு நன்றி சொல்கிறேன் .இதுக்கு முன்னாடி இரண்டு மூன்று தடவை தற்கொலை எண்ணம் வந்தது .ஆனா ,உன்னைப் பார்த்ததும் ,இந்த நிமிடத்தில் இருந்து அந்த எண்ணத்தை மாத்திக்கிட்டேன் .நான் வாழ்ந்து காட்டுகிறேன் .உன்னை மாதிரி மிருகங்களே வாழும் போது நான் ஏன் சாக வேண்டும் ." திட்டமிட்டே சிலர் அவமானப் படுத்துவார்கள் .அதற்காக நாம் உடைந்து விடக் கூடாது என்பதை நன்கு உணர்த்தி உள்ளார் . நூலில் உள்ளவற்றில் பதச் சோறாக இதைக் குறிப்பிட்டு உள்ளேன். நூல் முழுவதும் வாழ்தலின் அவசியத்தை சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை தரும் நல்ல நூல் . ஒவ்வொரு கட்டுரையின் முடிவுரை போல சில வரிகள் உள்ளன .சிந்துக்க வைக்கின்றன . " ஒரு காரியத்தை உங்களால் செய்ய முடியாது என்று யாராவது சொன்னால் ,சொன்னவர்கள் மீது கோபப்படாமல் ,அவர்கள் ஏன் அப்படிச் சொல்கிறார்கள் ? ஏன் நம்மால் முடியாது ? நம்மிடம் இருக்கும் பலவீனம் என்ன ? என்றெல்லாம் யோசித்து .. மைனசை பிளசாக மாற்றுவதற்கு முயற்சி செய்தால் வாழ்க்கையே சுவாரஸ்யமாகி விடும் ." இந்த நூல் படித்தபோது மதுரையில் புதூரில் அகவிழி பார்வையற்றோர் விடுதி நடத்தும் இனிய நண்பர் பார்வையற்ற மனிதநேய மாமணி எம் .பழனியப்பன் எம் .எ . அவர்கள் என் நினைவிற்கு வந்தார் . அவருக்கு பார்வை இருந்தது சிறு வயதில் காய்ச்சல் வந்து பார்வை பறிபோனது .பார்வை இழந்தோரின் துன்பம் உணர்ந்து துன்பம் போக்க விடுதி நடத்தி வருகிறார் .வருடா வருடம் ரத்த தானம் முகாம் நடத்தி வருகிறார் .கண் தான விழிப்புணர்வு முகாம் நடத்தி வருகிறார் .மருத்துவ முகாம் நடத்தி வருகிறார் .இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார் .பார்வையற்ற மாணவர்களுக்கு தொழில் பயிற்சியும் அளித்து வருகிறார் . உலகத்திலேயே மகிழ்ச்சியான மனிதன் நான் என்கிறார் நூல் ஆசிரியர் இளங்கோ .இந்த மன நிலையை ஒவ்வொரு மனிதனும் பெற வேண்டும் .பிறந்ததில் இருந்து பார்வை இல்லாத ஒருவர் போராடி படித்து, ஆங்கில மொழி சரளமாக பேசக் கற்று , பல கலைகள் கற்று ,பாடல்கள் பாடி ,விளம்பரத்திற்கு குரல் கொடுத்து, பிறருக்கு தன்னம்பிக்கை தரும் பயிற்சி நிறுவனம் நடத்தி சாதித்து வரும்போது இந்தக் குறையும் இல்லாத மனிதன் மனக் குறையோடு காலம் கழிப்பது முறையா ? இப்படி பல கேள்விகளை வாசகர் மனதில் எழுப்பி நூல் வெற்றி பெறுகின்றது .பிறந்தோம் வளர்ந்தோம் இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை .பிறந்தோம் சாதித்தோம் என்று உணர்த்தும் நூல் இது . சொல்வது யாராக இருந்தாலும் கேளுங்கள் சரி என்றால் எடுத்து கொள்ளுங்கள் .அது விடுத்து எல்லாம் நமக்கு தெரியும் என்ற எண்ணத்தில் இருக்காதீர்கள் என்று உணர்த்தும் நூல் .. சென்னை செல்லும்போது நூல் ஆசிரியர் இன்ஷ்பயரிங் இளங்கோ அவர்களை சந்திக்க வேண்டும் பாராட்ட வேண்டும் என்ற உணர்வு வந்தது .அதுதான் படைப்பாளியின் வெற்றி

கவிதை அல்ல விதை – நூல் விமர்சனம்
கவிதை அல்ல விதை நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் ***** புத்தகத்தைப் படித்தேன் மிகவும் அருமை. புவனத்தில் விடுபட்ட தலைவர்களை எல்லாம் புத்தகத்தில் நிரப்பி விட்டார் கவிஞர். இந்தக் கணினி யுகத்திலும் கூட "காந்தியைக் கூட காகித நோட்டுக்களில் வருபவராகத்தாகத் தான் பலர் கணித்து வைத்திருக்கிறார்கள்". வல்லிக் கண்ணன், நேதாஜி போன்றோரெல்லாம் பலரின் பார்வைக்கு தலைமறைவு! காமராஜர் முதல் கலாம் வரை அனைவரின் பெருமையையும் கவிஞர் கூறியிருப்பது இந்நூலின் சிறப்பு! அதிலும் நேதாஜியை நினைவு கூறுவது. "இந்தியாவில் நீ பிறக்கவில்லை என்றால் இந்தியாவிற்கு விடுதலை இல்லை" என்ற வரிகள் மாவீரன் நேதாஜிக்கு மிகை வரிகள் அல்ல! மிகச் சரியான வரிகள். "எரிமலை வெடிப்புகளிலும் ஏறி வர நினைப்பார்கள்" ஆனால் பித்த வெடிப்புகளுக்கே பொத்தென்று விழுவார்கள்! ஒருவரின் எண்ணம் செயல் வடிவம் பெறுவதற்குள் அதன் உறுதித்தன்மை இழந்து விடுவதே அதற்கான காரணம், ஆனால் நம் நேதாஜியோ உறுதியுடைய மாவீரன் என்பதை மிக எளிய வரிகளிலேய விளக்கிருப்பது அருமை! காமராஜர் பற்றி கவிஞர் : குறிப்பிட்டுள்ள வரிகளில் காமராஜர் காலம் தமிழகத்தின் பொற்காலம். காமராஜர் காலமானதால் காலமானது பொற்காலம். இந்த வரிகள் "படித்தவர்களுக்கெல்லாம் பசுமரத்தாணியாய்" மனதில் பதிந்திருக்கும். ஆனால் எனக்கோ, "பசுமரத்தில் சூரிய ஒளியாய்" பதிந்தது. சூரிய ஒளியை வைத்தே பச்சையம் தயாரிக்கும் இலைகளைப் போல இந்த வரிகளை வைத்தே இன்னும் சில வரிகளைத் தயாரிக்க எனக்கு உதவின. ஒரு கவிஞருக்கு வெற்றி எதுவென்றால் தன் எழுத்துக்களை வாசிக்கும் 'வாசகனும்' படைப்பாளியாக வளர்ச்சி பெறுவதே ஆகும்.! அதைக் கவிஞர் இரா. இரவி அவர்கள் இந்த இரண்டு வரிகளில் சாதித்து விட்டார். பெண் விடுதலை பற்றி கவிஞர் : எலிகளுக்கு விடுதலை பூனைகளால் கிடைக்காது. பெண்களுக்கு விடுதலை ஆண்களால் கிடைக்காது. என்று ஒரு ஆண் கவிஞரே கூறியிருப்பது, இந்தப்பாரத தேசத்தில் ஆண்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதை குற்றமாக குறிப்பிடாமல் "தெளிவடைய" தெரிவித்திருக்கிறார். திறமையாளர்கள் சாதித்து விடுவார்கள்! பண்பாளர்கள் தான் அதைப் பத்திரப்படுத்திக் கொள்வார்கள்! கவிஞர் இரா. இரவி பத்திரப்படுத்தியே பன்னிரண்டு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். விழித்தெழு பகுதியில் படித்த பெண்கள் எல்லாம் பலர் அடுப்பில் ஆசையையும் சேர்த்தே எரிக்கின்றார்கள்! என்ற வரிகளின் பொருள் பாமரனுக்கும் விளங்கிடும் வகையில் அமைந்து பெண்களின் வேதனையை எடுத்துரைக்கின்றது. ஊனமுற்றோரைப் பற்றிக் குறிப்பிடும் கவிஞர் பார்வையற்றவர்களின் உழைப்பைப் பாடமாகக் கொள்வோம். பார்வையற்றவர்களின் உயர்வுக்கு பாலமாக இருப்போம். என்ற வரிகளில் விழி இழந்தவர்களின் உழைப்பை நாம் பாடமாக கற்றுக் கொள்ள வேண்டும் எனவும், அவர்களை உயர்த்த நாமும் உறுதுணையாய் இருக்க வேண்டும் என்றும் மிகச் சரியான வரிகளில் தெரிவித்த விதம் அழகு! "சந்திக்க முடியாத நபர்களையும் தன்னை சிந்திக்க வைக்க முடியும் என்றால் அது கவிஞர் இரா.இரவியின் எழுத்துப்பணிக்கு கிடைக்கும் சிறப்பு" வளர்பிறையாகட்டும் கவிஞரின் எழுத்துப்பணி – அதில் விடுமுறை எடுக்கட்டும் களைப்பும் இனி! அட்சயப் பாத்திரத்திற்கும் - ஒரு பிடி அள்ளிக் கொடுக்கும் வாய்ப்பைப் பெற்ற வாசகி!

ஒரு நாளும் ஒவ்வொரு நாளும் ! – நூல் விமர்சனம்
ஒரு நாளும் ஒவ்வொரு நாளும் ! நூல் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் ! kavithaiuravu@gmail.com நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! சுதா பதிப்பகம் ,420இ . மலர்க் குடியிருப்பு ,அண்ணா நகர் மேற்கு, சென்னை .6000040. விலை ரூபாய் 70. . திருநெல்வேலி அருகே உள்ள ஏர்வாடி என்ற பிறந்த ஊருக்கு பெருமைகள் சேர்த்து வருபவர் நூல் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் அவர்கள் .பெயரோடு பிறந்த மண்ணை இணைத்துக் கொண்டவர் . இவரை இராதா கிருஷ்ணன் என்றால் சிலர் மட்டுமே அறிவர் .ஆனால் ஏர்வாடியார் என்றால் இலக்கிய உலகில் அனைவரும் அறிவர். கவிஞர், எழுத்தாளர் ,கட்டுரையாளர் ,கவிதை உறவு ஆசிரியர், பேச்சாளர் இவை எல்லாம் விட எல்லோருடனும் அன்பாகப் பழகிடும் பண்பாளர் .பன்முக ஆற்றல் மிக்கவர் .என்னைப் போன்ற தன்னை விட இளையவர்களையும் நீங்கள் என்று மரியாதையாக அழைக்கும் உயர்ந்த குணம் உடையவர் .மகாகவி பாரதி போல எழுத்துக்கும் செயலுக்கும் வேறுபாடு இல்லாதவர் . நூலின் தன்னுரையில் எழுதி உள்ளதைப் பார்க்கும் போது கவிஞன் என்பதையே விரும்புகிறார் . " நான் எழுத்தின் எல்லா வடிவங்களையும் முயற்சிக்கிறவன்.சிறுகதை ,நாடகம் ,கட்டுரை ,வானொலி உரைச்சித்திரம் ,நவீனம் என்றெல்லாம் எழுதி அவையெல்லாம் அறிந்தேற்கப் பட்டிருந்தாலும் ,நான் அதிகமாய் அறியப்பட்டிருப்பது கவிஞனாகத்தான் ." நூலின் அட்டைப்பட வடிவமைப்பு உள்அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன . இந்த நூலை அவரது நண்பர் கவிஞர் தியாரூ அவர்களுக்கு காணிக்கை ஆக்கி நட்புக்கும் கவிதைக்கும் மேன்மை செய்து உள்ளார் .அறிஞர் அண்ணா கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் கா .ஆபத்துக்காத்த பிள்ளை அவர்களின் அணிந்துரை மிக நன்று .நூலின் பின் அட்டையில் பிரசுரமாகி உள்ள திரைப்படப் பாடல் ஆசிரியர் கவிஞர் பழனி பாரதி வாழ்த்துரை நன்று இந்த நூலில் 38 தலைப்புகளில் உள்ளன ..மரபுக்கவிதைகளும் உள்ளன. புதுக்கவிதைகளும் உள்ளன .நூலின் முதல் கவிதையிலேயே கவிதை எப்படி எழுத வரும் என்று வளரும் கவிஞர்களுக்கு பயிற்று விக்கும் விதமாக கவிதை உள்ளது . எங்கிருந்து கவிதை ? அழகினிலே மயங்கிடுங்கள் கவிதை ஊறும் ஆத்திரமா .. கொதித்திடுங்கள் கவிதை பொங்கும் பழகிடுங்கள் பலருடனே கவிதை தோன்றும் பண்புகளால் ஈர்த்திடுங்கள் கவிதை பூக்கும் அழத்தோன்றும் போதழுங்கள் கவிதை சிந்தும் அன்பாலும் கவிதைவரும் அவ்வா றின்றி எழுகின்ற கவிதை நீங்கள் படைப்ப தில்லை இதயத்துள் இருந்துமையாள் செய்வ தாகும் ! கவிஞர் அனைவருக்கும் தமிழ்ப்பற்று உண்டு .தமிழ்ப்பற்று இருந்தால்தான் கவிஞர் .நூல் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் அவர்களுக்கும் தமிழ்ப்பற்று உண்டு. அதனால்தான் கவிதைகளை குற்றால அருவி போல கொட்டி வருகிறார் .அவரது தமிழ்ப் பற்றைப் பறை சாற்றும் கவிதை நன்று . தமிழைப் போல இனிமையில்லை ! உலகத்தின் மிகப்பெரிய மொழிகளுக்குள் உயர்தமிழே மிகச்சிறந்த மொழியென் பார்கள் உலகத்தின் இன்பங்கள் யாவி னுக்கும் உயர்த்தமிழே எப்போதும் உச்சமாகும் ! கலைமாமணி ஏர்வாடியாரின் வெற்றியின் ரகசியம் என்னவென்று யோசித்துப் பார்த்தால் எல்லோருடனும் அன்போடு பழகுவது .மிகப் பெரிய முக்கிய பிரமுகராக இருந்தாலும் , என் போன்ற வளரும் கவிஞராக இருந்தாலும் சமமாகவே அன்பு செலுத்துவார் .அவர் மதுரை வரும்போதெல்லாம் தமிழ்த் தேனீ இரா .மோகன் அய்யாவோடு சென்று வரவேற்று சந்தித்து உரையாடி மகிழ்வேன். உரையாடும் நிமிடங்களில் அன்பு மழை பொழிவார்கள் .பல அரிய செய்திகளும் பகிர்வார்கள் .மதுரை புகைப்படக் கலைஞர் திரு .முருகன் அவர்களை சகோதரர் போல நடத்துவார். எழுத்தாளர் கவிஞர் இதழ் ஆசிரியர் என்ற கர்வம் துளியும் இல்லாத இனிமை மனிதர் வாழ்க்கையில் கடைபிடித்து வரும் அன்பு பற்றிய கவிதை நன்று . அன்பின் வடிவம் ! அன்பான சொல் இனிக்கும் அது சுவைக்கும் அன்பே நம் செவிகளுக்கு விருந்து மாகும் அன்பான வாய்மணக்கும் எனவே அன்பாய் என்றைக்கும் இருப்பதுதான் இனிமை என்றேன் ! ஆம் அன்பால் உலகை ஆளலாம் .அதனால்தான் வள்ளுவர் அன்பை மிக உயர்வாக உணர்த்தினார் திருக்குறளில் . விதி என்று நொந்து சாகாதே. வீணாய் காலம் கழிக்காதே .முயற்சி திருவினையாக்கும் என்ற கருத்தை இறைவனால் அல்ல என்ற கவிதையில் உணர்த்தி உள்ளார் .இறைவா நீ வர வேண்டாம் என்ற கவிதையை எள்ளல் சுவையுடன் எழுதி உள்ளார் . இறைவா நீ வர வேண்டாம் ! இல்லையில்லை பக்தர்களைப் பார்க்க வேண்டும் என்றுனக்கு போதாத ஆசை வந்தால் சொல்லுகிறேன் ஒரு நாளில் இறங்கி வந்து தேர்தலில் தனியாக நின்று பார் நீ சில்லறையும் செல்வாக்கும் செல்லும் வண்ணம் செயும் வித்தை வெல்லும் நீ தோற்பாய் அன்று எல்லோருக்கும் அருள் சுரக்கும் இறைவா பக்தி எட்டத்தில் இருந்தால்தான் என்று ணர்வாய் ! அரசியல் அவலங்களை இறைவனுக்கு சொல்வது போல வாசகருக்கு சொல்லி உள்ளார் . இந்தக் கவிதைகள் கவிதை உறவு மாத இதழில் ஏர்வாடியாரின் ஏழாம் பக்கத்தில் படித்தவை .மொத்தமாக நூலாகப் படிக்கும் போது திரும்பத் திரும்ப வாசித்து மகிழ்ந்தேன் . இறைவா நீ வர வேண்டாம் ! என்று எச்சரிக்கை செய்தவர் மறு மாதம் கவிதை உறவில் இறைவா நீ வர வேண்டும் ! என்றும் எழுதினார். கவிஞரின் உள்ளத்தில் உருவாகும் கருப்பொருளுக்கு ஏற்றபடி கவிதை வரும் என்பதற்கு எடுத்துகாட்டு இவை . இறைவா நீ வர வேண்டும் ! நகரம்தான் நரக வாழ்க்கை எனினும் கொஞ்ச நாள்களேனும் எங்களோடு தங்க வேண்டும் ! வரப்போகும் நாள் தெரிந்தால் விழா யெடுக்க வசதியாக இருக்கும் ;ஒரு சேதி சொல் நீ ! அடுத்து கடவுளே பேசுவது போல ஒரு கவிதை இப்படிக்கு இறைவன் என்று ஒரு கவிதை .கடவுள் என்றைக்கு பேசினார் என்று பராசக்தி வசனத்தை கேட்டு விடாதீர்கள்.கடவுள் பேசுவது போல ஏர்வாடியார் பேசி உள்ளார் . இப்படிக்கு இறைவன் ! சின்ன இதழ் மலர்கின்ற சிரிப்பி லெல்லாம் சத்தியமாய் நானிருப்பே ன் இன்னும் மேலாய் ! அன்னையை நீ தெய்வமாக ஏற்றுக் கொண்டால் ஆலயமாய் அவள்பாத கமலம் காண்பாய் ! ஏழையின் சிரிப்பில் இறைவன் உள்ளான் .பெற்ற தாயே தெய்வம் என்றும் வலியுறுத்தும் விதமாக கவிதை எழுதி உள்ளார் ஏர்வாடியாருக்கு கடவுள் நம்பிக்கை உண்டு . மதுரை வரும்போதெல்லாம் மீனாட்சியம்மன் கோவில் சென்று வருவார் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை .இருந்தபோதும் கடவுள் பெயரிலான கவிதைகளை ரசித்துப் படித்தேன் .கவிதைகள் படி தேன். நூல் விமர்சனத்தில் அனைத்து கவிதைகளையும் எழுத முடியாது .எழுதக் கூடாது என்பதால் பதச் சோறாக சில மட்டும் எழுதி உள்ளேன் .நூல் ப்வாங்கி படித்துப் பாருங்கள் . இந்த நூல் சொற்களின் சுரங்கமாக உள்ளது .வளரும் கவிஞர்கள் அனைவரும் வாங்கி வாசிக்க வேண்டிய நூல் .படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் புரியும் விதமாக அனைத்து கவிதைகளும் உள்ளன. புரியாத புதிர்க்கவிதை ஒன்றும் இல்லை . கவிதைகள் எளிமையாகவும் , இனிமையாகவும் , புதுமையாகவும் ,அன்பை விதைக்கும் விதமாகவும் ,பண்பை வளர்க்கும் விதமாகவும், தன்னம்பிக்கை ஊட்டும் விதமாகவும் உள்ளன .நூல் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .உங்கள் இலக்கிய மகுடத்தில் பதித்த வைரக் கல்லாக மிளிர்கின்றது . .

‘மயிலிறகின் முத்தம்’ – நூல் விமர்சனம்
'மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி பூங்குயில் பதிப்பகம், 100, கோட்டைத் தெரு, வந்தவாசி - 604 408. விலை: ரூ. 40. வந்தவாசி என்ற ஊருக்கு ஹைக்கூ கவிதைகளால் புகழ் சேர்த்து வருபவர் இருவர். ஒருவர் கவிஞர் மு.முருகேஸ் மற்றொருவர் கவிஞர் ஆரிசன். பல்வேறு சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதி வரும் படைப்பாளி. இவரதுபெயர் போலவே இவரது ஹைக்கூ கவிதைகளும் மிக வித்தியாசமானவை. எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக எழுதி வருபவர், நல்ல சிந்தனையாளர் , சென்னையில் நடந்த ஹைக்கூ திருவிழாவில் சந்தித்த போது இந்த நூலைவழங்கினார். புள்ளிப்பூக்கள் என்ற ஹைக்கூ நூல் தந்து இன்றும் தொடர்ந்து எழுதி வரும் படைப்பாளி. மகிழுந்து விபத்தில்மகளையும், மருமகனையும் இழந்து தானும் தன் மனைவியும் காயமுற்று சோகத்தில் நிலைகுலையாத கவிஞர்அமுதபாரதி அவர்களுக்கு நூலை காணிக்கை ஆக்கியது சிறப்பு. கவிஞர் வைரமுத்துவின் ஆசிரியர் பேராசிரியர் முனைவர் இராம. குருனாதன் அவர்களின் ஆய்வுரை மிகநன்று. ஹைக்கூ கவிதைகளின் முன்னோடி பேராசிரியர் மித்ரா அவர்களின் அனிந்துரை அற்புதம். எழுதுங்கள்.எழுதுகிறேன்.எழுதுவோம் என்று எழுதிக்கொண்டே இருக்கும் எழுத்துத்தேனீ கவிஞர் பொன் குமார் அவர்களின்அணிந்துரை அழகுரை. இவரது ஹைக்கூ கவிதைகளை பிரசுரம் செய்து சிற்றிதழ்களுக்கு மறக்காமல் நன்றியைப் பதிவு செய்துள்ளார். பாராட்டுக்கள் . வித்தியாசமாக சிந்திக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த ஹைக்கூ. வற்றாத ஜீவ நதியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறது நாக்கு! இதற்கு முன் வேறு யாரும் இந்தக் கோணத்தில் சிந்திக்கவில்லை என்று உறுதி கூறலாம். தகவல் தொடர்பில் ஊழல் என்பது உலகம் அறிந்த ஒன்று. இந்தியாவிற்கு தலைகுனிவுத்தரும் ஒன்று. அதனை எள்ளல் சுவையுடன் சாடி உள்ளார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல பறவைகளைப் பாரட்டி ஊழல்அரசியல்வாதிகளுக்கு கண்டனத்தையும் காட்டும் ஹைக்கூ தகவல் தொடர்பு ஊழலின்றி செய்தது பறவையினம்! ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள் போல காட்சிப்படுத்தும் நுட்பமான ஹைக்கூ வடிவில் நிறைய ஹைக்கூ கவிதைகள் இருந்த போதும் பதச்சொராக ஒன்று . மீசை சுழற்றி மகிழ்ச்சி தெரிவித்தது கரப்ப்பான் பூச்சி ! இந்த ஹைக்கூ படிக்கும் வாசகர் மனதிற்கு கரப்பான் பூச்சி நினைவில் வந்து போகும் என்று உறுதி கூறமுடியும். இது தான் படைப்பாளியின் வெற்றி. ஹைக்கூவின் வெற்றி. குழந்தைகள் விளையாடும் போது பொம்மைகளை படாதபாடு படுத்தும். பொம்மைக்கு வாய் இருந்தால்அழுது விடும் என்பார்கள். இந்த நிகழ்வை உற்று நோக்கி வடித்த ஹைக்கூ. குழந்தைகள் விளையாட்டு சலிப்பின்றி ஒத்துழைக்கிறது பொம்மை ! குழந்தையின் உச்சரிப்பில் பிழை இருந்தாலும் கேட்க இனிமை. உலகப்பொதுமறை வடித்த திருவள்ளுவரின் திருக்குறளை வழி மொழிந்து குழந்தைகளின் மொழியைப் பாராட்டிய ஹைக்கூ. இளநீர் சுவை பருகிய உனர்வு மழலைப் பேச்சு ! தோல்விக்குத் துவளாமல் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்ற கருத்தை குழந்தையின் நடையோடு ஒப்பிட்டு படிக்கும் வாசகர் மனதில் தன்னம்பிக்கை விதைக்கும் விதமாக வடித்த ஹைக்கூ. எட்டி நடக்கிறது விழுந்து எழுகிறது ஊக்கத்தோடு ! புகழ்பெற்ற வரிகளில் சில மாற்றம் செய்து ஹைக்கூ வடிக்கும் போது அந்த ஹைக்கூ வாசகர் மனதில் எளிதாகப் பதிந்து விடும். நம்நாட்டில் ஆட்சி மாறுகின்றது . ஆனால் காட்சி மாறுவதே இல்லை அரசியல்வாதிகள் என்றும் திருந்துவதேஇல்லை. சுயநலத்தின் மொத்த உருவமாகவே வலம் வருகிறார்கள் என்பதை உனர்த்திடும் ஹைக்கூ. பாரத தேசம் பழம்பெரும் தேசம் ஊழல் பெருச்சாளிகள் ! தனியார் பள்ளிகளில் பகல் கொள்ளை நடக்கின்றது. தெரிந்தே சென்று பணம் கட்டி ஏமாந்து வருகின்றனர் . பெற்றோர்கள் அதனை உணர்த்தும் ஹைக்கூ. கட்டணம் இல்லை போராட்டமில்லை அரசு ஆரம்பக்கல்வி ! அறிவியல் மேதை மாமனிதர் அப்துல் கலாம் ஆரம்ப கல்வி அரசுப்பள்ளியில் தான் என்பதை உணர வேண்டும். கவிஞர் ஆரிசன் அவர்களுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதிட வாழ்த்துக்கள். . . .


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedbacksupport