புத்தக விமர்சனம்

‘புத்தகம் போற்றுதும்’ – நூல் விமர்சனம்
‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் :. மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தி. நகர் ,சென்னை .600017. தொலைபேசி 044-24342810. 044-24310769. மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com பக்கம் 224 விலை ரூபாய் 150 அருமை நண்பர் இரா. இரவியின் ‘புத்தகம் போற்றுதும்’ நூல், வாசிப்பவர்க்கு ஒரு இனிய அனுபவமாகும். ‘புத்தகம் போற்றுதும்’ என்பதும், ‘கடவுளை வணங்குங்கள்’ என்று சொல்வதும் என்வரையில் ஒன்றுக்கொன்று இணையானதாகும். கடவுளுக்கு நிகரான புத்தகங்களைப் போற்றுவதன் மூலம், நாத்திகர்கள் கூட மறைமுகமாக ஆத்திகர்களாகி விடுகிறார்கள் என்பதே என் அழுத்தமான கருத்து. நண்பர் ரவி, இந்த நூலில் ஐம்பது நூல்களுக்கான ஒரு முன்னோட்டத்தை அளித்திருக்கிறார். இந்த ஒரு நூலை வாசிப்பதன் மூலம் அந்த ஐம்பது நூல்களையும் ருசி பார்த்த ஒரு திருப்தி ஏற்படுகிறது. கூடுதலாக, ருசித்த உணவை மிகவே விரும்பி உண்பது போல, அந்த நூல்களை எல்லாம் தேடிப் பிடித்து வாசிக்க வேண்டும் என்றும் வேட்கை உருவாகிறது. இதற்காகவே ரவியை பாராட்ட வேண்டும். இலக்கிய உலகில் எவ்வளவோ நூல்கள், நாவல், கவிதை, சிறுகதை, திறனாய்வு, கட்டுரை என்று சுவைகளில் பல பிரிவுகள். இந்த ‘புத்தகம் போற்றுதும்’ நூல் இதில் எந்த பிரிவிலும் சேராமல் ஒரு தனிப்பிரிவாய் நிற்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. ஒரு நூலுக்குள் ஐம்பது நூலின் சாரம் அடங்கியிருப்பதை எப்படிச் சொல்வது? மலர்களில் பல மலர்களைத் தொகுத்தால் கதம்பம். அது போல் இதையும் கதம்ப நூல் எனலாமா? இக்கேள்விக்கான விடையை சான்றோர்களே கூறட்டும். நண்பர் இரவி அடிப்படையில் ஒரு கவிஞர். அதிலும் ஹைக்கூ கவிஞர். இதனால் சுருங்கச் சொல்லி விளங்க மற்றும் வியக்க வைப்பதில் பேர் எடுத்தவர். இந்த நூலைத் தந்ததன் மூலம் பெரிய நூல்களையும் ஹைக்கூ போல சிறு கட்டுரை வடிவில் புரிய வைத்து விட முடியும் என்று முனைந்திருக்கிறாரோ என்று எனக்குத் தோன்றுகிறது. ஹைக்கூ கவிதைகள் எப்படி மின்னல்வெட்டாய் தாக்குமோ அதே தாக்கம் இந்நூலில் எனக்கு ஏற்பட்டது. இந்த 50 நூல்களும் இவர் வியந்த நூல்கள். இதன் சிறப்பை மிக எளிய மொழி கொண்டு இவர் கூறியிருப்பதும், மயிற்பீலியால் வருடித்தருவது போல பாராட்டியிருப்பதும் ஒரு தனிச் சுகமாகத் தெரிகிறது. சில நூல் ஆசிரியர்கள் எதிலும் தங்களை முன்நிறுத்திக்கொள்வார்கள். தங்களுக்கு தெரிந்ததை எல்லாம் சொல்லி அதோடு வாசித்ததை ஒப்பிட்டு, அதோடு தங்களின் கருத்தைச் சேர்த்துக் கட்டி வாசிக்கையில் ஆயாசப்பட வைப்பார்கள். இரவி, முகத்துக்கு நேராக நின்று ஒரு சாமான்ய மனிதர் போன்ற பாவனையில் ஜிகினாக்கள் துளியும் இன்றி, ஆனால் தான் உணர்ந்ததை அப்படியே பேசுகிறார். இந்த எளிமை ஓர் அரிய விஷயமாக எனக்குப்படுகிறது. இந்நூலில் கவிஞர் புதுயுகனின் மதிப்புரையும், திரு. இரா. மோகன் அவர்களின் மதிப்புரையும் இடம் பெற்றுள்ளது. இரண்டுமே மதிப்புரை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பாடம் எழுதுவது போல் உள்ளன. புதுயுகன் உணர்வுக்கு முக்கியத்துவம் தந்தால் திரு. மோகன் உணர்வோடு வடிவத்துக்கும் முக்கியத்துவம் தருகிறார். திரு. மோகன் இலக்கிய மரபு வழி செல்பவர். தமிழ்க் கொண்டல் திரு. மு. வரதராசனாரின் அருமை மாணவர்களில் ஒருவர். பணி ஓய்வுக்குப் பின்பும் எழுத்துக்கு ஓய்வே கிடையாது என்று இயங்கி வருபவர். தான் வளர்வதோடு தன்னைச் சார்ந்தவர்கள் வளர பெரிதும் துணை நிற்பவர். திரு. இரவியும், திரு. மோகனின் இதமான அரவணைப்பில் வளர்பவர். அதே போல் பன்முகத்திறமைகள் கொண்ட முனைவர் இறையன்பு அவர்களின் நெறிகாட்டுதலும் உடையவர். மறந்தும் பிறரிடம் உள்ள பலவீனங்களைப் பாராதவர். உண்மையாக இருக்க வேண்டும் என்கிற நோக்கம் கொண்டவர். இப்படிப்பட்டவரின் இந்த நூலைப் போற்றுவதா, இல்லை இவரைப் போற்றுவதா என்கிற ஒரு சிறுதவிப்பு எனக்கு நேரிட்டது. இருவித போற்றுதலையும் கொள்வதே சிறப்பு எனப்படுகிறது. அவ்வகையில் இந்நூலையும் சரி, திரு. இரவியையும் சரி மனதார போற்றுகின்றேன். இந்நூல் வெளியீட்டின் போதே இதன் தொடர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதால் அடுத்த நூலை விரைவாக எதிர்பார்த்து அதற்கும் இப்போதே என் வாழ்த்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன். வாழ்க! வாழ்க! -- .

தி.க.சி. எனும் ஆளுமை ! – நூல் விமர்சனம்
தி.க.சி. எனும் ஆளுமை ! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் இரா. மோகன், புதுகை மு. தருமராசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை – 17. விலை : ரூ.200, பக்கம் 304, தொலைபேசி : 044 2432810. ***** ஒரு எழுத்தாளர் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்த எளிமையின் சின்னம், நல்லதை போற்றிய அன்னம் இலக்கிய ஞானி தி.க.சி. என்ற மாமனிதர் பற்றிய ஆவணமாக நூல் வந்துள்ளது. நூலாசிரியர்களான தமிழ்த்தேனீ இரா. மோகன், புதுகைத் தென்றல் இதழாசிரியர் புதுகை மு. தருமராசன் இருவரும் பாராட்டுக்குரியவர்கள். இருவரின் கடின உழைப்பை உணர முடிந்தது. தி.க.சி. பற்றி வந்தவற்றை எல்லாம் தொகுத்து, பகுத்து, வகுத்து நூலாக்கி உள்ளார்கள். பதிப்புலகில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் வானதி பதிப்பகத்திற்கும் பாராட்டுக்கள். மிக நேர்த்தியான அட்டை வடிவமைப்பு உள்அச்சு யாவும் திறம்பட பதிப்பித்து உள்ளனர். சிறந்த எழுத்தாளர் பொன்னீலன் தொடங்கி பேராசிரியர் தொ. பரமசிவன் வரை பல்வேறு எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேராசிரியர்கள் தி.க.சி. எனும் ஆளுமை பற்றி பகிர்ந்து கொண்ட மலரும் நினைவுகளின் தொகுப்பு. இன்றைய இளைய தலைமுறையினர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய மிகச் சிறந்த மனிதர் தி.க.சி. இந்த நூல் வாங்கிப் படித்துப் பயன் பெற வேண்டும். அஞ்சல் அட்டை கடிதங்கள் வழக்கொழிந்து வரும் காலம் இது. ஆனால் அஞ்சல் அட்டை மூலமே இலக்கியம் வளர்த்த இனியவர். தி.க.சி. தினமணி நாளிதழில் மிகச்சிறந்த கட்டுரைகள் எழுதுவதோடு நின்று விடாமல், பெரிய எழுத்தாளர் என்ற பிம்பம் பற்றி எல்லாம் கவலை எதுவும் கொள்ளாமல் அஞ்சல் அட்டை மூலம் வாசகர் கடிதமும் எழுதி வந்த எளிமையாளர், இனிமையாளர் தி.க.சி. இந்த நூல் முழுவதும் தி.க.சி., தி.க.சி., தி.க.சி. அது தவிர வேறு இல்லை என்று சொல்லுமளவிற்கு முழுவதும் தி.க.சி. பற்றியது. மிகச்சிறந்த மனிதர் தி.க.சி. அவர்களுக்கு தமிழ்த்தேனீ இரா. மோகன், புதுகை மு. தருமராசன், வானதி இராமனாதன் மூன்று பேரும் சேர்ந்து தொடுத்து வழங்கி உள்ள புகழ்மாலை. வரலாற்று ஆவணமாக உள்ள நூல். இனிவரும் தலைமுறையினரும் தி.க.சி. என்ற இவர் பற்றி அறிந்து கொள்ள உதவிடும் அற்புத நூல். தி.க.சி. பற்றி வந்தவற்றை எல்லாம் தொகுக்க வேண்டும் என்று பொறி தட்டி வந்தப் பொறி இன்று ஒளிவிளக்காக ஒளிர்ந்துள்ளது. பாராட்டுக்கள். தி.க.சி. பற்றி நூலில் ஏராளமாக தகவல் உள்ளன. தகவல் களஞ்சியமாக உள்ளது. இலக்கிய ஞானிகளான வல்லிக்கண்ணனும், தி.க.சி. என்ற இரண்டு இமயங்களும் நட்பிற்கு இலக்கணம் வகுத்தவர்கள். அவர்கள் இருவர் போல இனி யார் வாழ்வார் இங்கு என்று சொல்லுமளவிற்கு வாழ்ந்தவர்கள். இந்த நூலில் தி.க.சி. பற்றி எழுத வந்த பலரும் அவரது வழிகாட்டி நண்பர் வல்லிக்கண்ணன் பற்றியும் எழுதியது சிறப்பு. அனைத்தும் முக்கியமானவையாக உள்ளன. எதை எழுதுவது, எதை விடுப்பது என்ற முடிவுக்கு வர முடியாமல்பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு. “சாய்ந்து விட்ட ஆலமரம்!” – சி. மகேந்திரன் ! “வல்லிக்கண்ணன் தம்மை எழுத்துலகுக்குச் சுண்டு விரல் பிடித்து, அழைத்து வந்த விதம் பற்றி வியந்து தி.க.சி. விவரிக்கிறார். அப்பொழுது பிரசண்ட விகடன் என்னும் இதழ் மாதம் இருமுறை வெளிவந்து கொண்டிருந்தது. இதில் எனது முதல் படைப்பு வெளிவந்து, பெரும் அதிர்ச்சியை எனக்குக் கொடுத்தது. இந்த படைப்பைப் பிரசண்ட விகடனுக்கு நான் அனுப்பவில்லை. யார் அனுப்பியிருப்பார்கள்? குழம்பிப் போனேன். வல்லிக்கண்ணன் எனக்குத் தெரியாமலேயே அனுப்பியிருக்கிறார். பத்திரிகைகளில் மட்டுமல்ல என்னுடைய படைப்புகள் அனைத்தும் நூல் வடிவம் பெறுவதற்கு ஆணிவேராக விளங்கியவரும் அவரே. சொல்லப் போனால் தன் நூல் வெளிவருவதைக் காட்டிலும், எனது நூல் வெளிவருவதைக்கண்டு பெருமகிழ்வு கொள்பவர் வல்லிக்கண்ணன்” என்று நெஞ்சு உருகக் குறிப்பிட்டுள்ளார் தி.க.சி. இதுபோன்ற பிறர் நலம் பேணும் மனிதர்கள் இன்றைக்கு இருக்கிறார்களா? ஆம் இருக்கிறார்கள். எனது “புத்தகம் போற்றுதும்” நூல் வெளிவர முழுமுதல் காரணமாக இருந்தவர் இந்த நூலாசிரியர் தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்கள் தான். நூல் வெளியீட்டு விழாவில் இந்த நூல் குறித்து நீதியரசர் ஆர். மகாதேவன் அவர்களும், பேராசிரியர் இராஜா கோவிந்தசாமி அவர்களும் பாராட்டிய போது என்னை விட கூடுதலாக மனமகிழ்ச்சி அடைந்தவரும் அவரே. இந்த நூல் படிக்கும் போது மலரும் நினைவுகளாக இந்த நிகழ்வுகளும் நினைவிற்கு வர நெகிழ்ந்து போனேன். கனிந்த மானுடன் ! விக்கிரமாதித்தன், ‘தாமரை’ நூறு இதழ்கள் தி.க.சி.யின் ஆக்கத்தில் தான் வந்தன. அவருடைய ஆகப் பெரிய கொடையும் சாதனையும் இது தான். “நிறைவாழ்வு தான். இந்தக்காலத்தில் பாயில் படுக்காமல் நோயில் விழாமல் மரணம் அடைவதும் பாக்கியம் தான்”. தி.க.சி. பாக்கியவான், கனிந்த பழம் உதிர்ந்து விட்டது. இப்படி பலரும் அவர் பற்றிய மலரும் நினைவுகளை நூல் முழுவதும் பகிர்ந்து உள்ளனர். தி.க.சி. என்றொரு ஆலமரம் ! வண்ணநிலவன் ! தி.க.சி. என்ன எழுதினாலும் அதில் துடிப்பும் ஜீவனுமிருக்கும் கடிதங்களில் கூட இதைக் காணலாம். ‘திறனாய்வுத் தென்றல் தி.க.சி.! திருப்பூர் கிருஷ்ணன் ! ‘தனி ஒருவராக இருந்து ஓர் இயக்கம் போல் பணியாற்றிய இன்னொருவரைத் தமிழ் இலக்கிய உலகம் இனி என்று காணப் போகிறது’. இந்த நூலில் கட்டுரை எழுதிய எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்களே மதுரைக்கு வந்து இந்த நூல் வெளியீட்டு விழா சிறப்புரையாற்றியது சிறப்பு. தி.க.சி.-யின் நாட்குறிப்புகள் – பேராசிரியர் தொ.பரமசிவன் ! தி.க.சி. எழுதிய டைரி அவரைப் பற்றியோ அவர் குடும்பத்தைப் பற்றியோ இல்லை. நண்பர்களைப் பற்றியும் அவர் படித்த நூல்களைப் பற்றியும் மட்டுமே உள்ளது. நாட்குறிப்புகள் உணர்த்தும் தி.க.சி.-யின் ஆளுமைப்பண்புகள் ! பேராசிரியர் இரா. மோகன். ”தி.க.சி.-யைப் பொறுத்த வரையில் வாசிப்பு என்பது ஒரு பழக்கம்-வழக்கம்-வாடிக்கை என்பவற்றிற்கு எல்லாம் மேலாக வாழ்க்கை” புதுகை மு. தருமராசன் அவர்கள் மதுரைக்கு வரும் போதெல்லாம் தி.க.சி.யை சென்று பார்த்து வருவார்கள். தந்தை மகன் போல பாசமாகப் பழகியவர். இன்று இரு நண்பர்கள் இணைந்தால் மதுக்கடை செல்லும் காலம் இது. இன்று இரண்டு நண்பர்கள் இணைந்து ஒரு நூலை வழங்கி இருப்பதற்கு பாராட்டுக்கள். நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி www.eraeravi.com www.kavimalar.com http://www.eraeravi.blogspot.in/ . http://www.tamilthottam.in/f16-forum http://eluthu.com/user/index.php?user=eraeravi http://www.noolulagam.com/product/?pid=6802#response* இறந்த பின்னும் இயற்கையை ரசிக்க கண் தானம் !

பச்சைத் தேவதைகள் ! – நூல் விமர்சனம்
பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா அலைபேசி : 92821 11071 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. எண் : 9, சிந்தாமணி தெரு, ஐயப்பன் கணபதி அடுக்ககம், செந்தில் நகர், திருமுல்லைவாயில், சென்னை 600 062. விலை : ரூ. 45 ***** நூல் ஆசிரியர் கவிஞர் மரிய தெரசா அவர்கள் காரைக்காலில் பிறந்தவர். தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் பட்டம் பயின்றவர். முனைவர். ஆசிரியர் பணிபுரிந்து வருபவர். ஓய்வின்றி படைத்து வரும் படைப்பாளி. ஏழு லிமரைக்கூ வடிவ கவிதை நூல் எழுதியுள்ள ஒரே கவிஞர் என்ற புகழுக்கு உரியவர். “பச்சைத் தேவதைகள்” நூலின் தலைப்புக்கு ஏற்றபடி மரம், செடி, கொடி பசுமையின் அவசியத்தை உணர்த்தும் வண்ணம் நூல் முழுவதும் லிமரைக்கூ வடிவில் கவிதை வடித்துள்ளார்கள். மரங்களின் முக்கியத்துவத்தையும் மழையின் தேவையையும் நன்கு உணர்த்தி உள்ளார். ஒரே மைய தலைப்பில் ஆழ்ந்து சிந்தித்து மிக நுட்பமாக எழுதி உள்ளார்கள். நூல் ஆசிரியர் முனைவர் மரிய தெரசா அவர்கள் ஆசிரியர் என்பதால் சொல் விளையாட்டு விளையாடி உள்ளார்கள். பாராட்டுக்கள். இந்த நூலை “புன்னகை அரசி, புதுக்கவிதை படைப்பாளி, புவிமேல் பற்றுடை பூங்கோதை புதுமல் வைகைச் செல்வி அவர்களுக்கு” என்று எழுதி காணிக்கை ஆக்கி உள்ளார்கள். தொடர்ந்து பல நூல்கள் எழுதி வருவதால் ஒவ்வொரு நூலையும் ஒருவருக்கு சக படைப்பாளிகளுக்கு காணிக்கையாக்கி மகிழ்கிறார்கள். எனக்கும் ஒரு நூல் காணிக்கையாக்கி இருந்தார்கள். நூலின் முதல் லிமரைக்கூ முத்தாய்ப்பாக உள்ளது. எந்த செயலையும் தள்ளிப்போடாமல் உடன் முடி என்று அறிவுறுத்தும் விதமாக உள்ளது. இன்றே மரம் நடு பசுமைக்கு இதுவே சிறந்த வழி இதற்கு ஏன் கெடு? அறிவியல் கருத்துக்களையும் கவிதையில் விதைத்து விழிப்புணர்வு ஊட்டுகிறார். ஓசோனில் ஏற்படுகிறது ஓட்டை அறிந்தும் இதன் உபயோகம் ஏன் நிறுத்துவோம் நம் சேட்டை! பொன் விளையும் பூமி என்பார்கள். பூமியை நன்றாகப் பேணி காத்தால் வளங்கள் கொழிக்கும், பசுமை செழிக்கும் என்பது உண்மை. நமக்கு உதவும் மண் அதன் பயன் அறிந்து பேணிட வாழ்வு ஆகும் பொன்! சாலை போடுகிறோம் என்ற பெயரில் மரங்களை வெட்டி சாய்க்கின்றனர். ஆனால் வெட்டி வீழ்த்தும் அளவிற்கு மரங்களை நட வேண்டும் என்ற எண்ணம் வருவதில்லை. மழை வேண்டி அலைகிறாய் மரங்கள் நட நீ மறுக்கிறாய் வீணான கவலையில் திளைக்கிறாய்! வருங்கால சந்ததிகள் வளமாக வாழ நாம் பூமியின் வளத்தைப் பேணுவது நலம். பூமி என்பது தங்க முட்டை போடும் வாத்து போன்றது. அளவோடு பயன்படுத்தினால் தந்து கொண்டே இருக்கும். தங்க முட்டைக்கு ஆசைப்பட்டு வாத்தை அறுத்த கதை போல பூமியை சிதைப்பதை நிறுத்த வேண்டும். நாளைய நம் சமுதாயம் வறட்சியில் வாடி மடிவதா சொல் உன் கரங்களில் சமுதாயம்! மழைநீர் சேகரிப்பு என்பது அவசர அவசியம் இன்று. இன்னும் பலர் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் உணராமல் உள்ளனர். அவர்களுக்கான லிமரைக்கூ ஒன்று. நீரின்றி வாடுபவர் பலர் அறியாது இதன் அருமை வீணாக்கிபவர் புவியில் பலர் உளர்! பசுமை அழிந்து வருகின்றது. மழை பொய்த்து வருகின்றது. வறட்சி வாட்டி வருகின்றது. இதற்கு காரணம் நாம் தான். பசுமை பசுமை எங்கே இதற்கு காரணம் நாம் தான் மீண்டும் உருவாக்குவோம் இங்கே பல வருடங்களுக்கு முன்பு பாலித்தீன் என்றால் என்னவென்றே அறியாது இருந்தது சமுதாயம். ஆனால் இன்று எங்கும் எதிலும் பாலித்தீன் பரவி, விரவி விட்டது. இதனை முழுவதும் ஒழிக்க முடியாவிட்டாலும் குறைத்திடவாவது நாம் முன் வர வேண்டும். பழையபடி மஞ்சப்பை தூக்கி செல்வோம் கடைகளுக்கு. இதில் இழுக்கு ஒன்றுமில்லை என்பதை உணர்வோம். வாழ்க்கை அல்ல வேடிக்கை பாலித்தீன் உபயோகம் ஏற்படுத்தும் தீமை மாற்று உனது வாடிக்கை! அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்றார்கள். எனவே எதையும் அளவோடு பயன்படுத்தினால் பாதிப்பு இல்லை. எதிலும் அளவு மீறும் போது ஆபத்து நிகழும் என்பதை உணர்ந்திடல் வேண்டும். பூமி ஒரு கேணி வசந்தத்தை அள்ளி அள்ளி வழங்கும் காத்திடுவோம் அதனைப் பேணி! பசுமை செழிக்க வறட்சி அழிய ஒரே வழி மரம் நடுவதே என்பதை தொடர்ந்து நூல் முழுவதும் லிமரைக்கூ கவிதைகளால் வடித்து சமுதாயத்திற்கு விழிப்புணர்வு விதைத்து உள்ளார்கள். வறட்சியால் மீளா தொல்லை மரங்களை நட்டு மழையை மீட்போம் தட்டாதீர் என் சொல்லை. சமுதாயத்தை சீர்படுத்தும் விதமாக பயனுள்ள பல தகவல்களை, கருத்துக்களை லிமரைக்கூ வடிவில் வடித்து நூலாக்கி வழங்கி வரும் உண்மையான படைப்பாளி முனைவர் மரிய தெரசா அவர்களுக்கு பாராட்டுக்கள். இன்னும் தொடர்ந்து எழுதி சாதனைகள் நிகழ்த்திட வாழ்த்துக்கள். -- .

கள்ளிப்பால் ! – நூல் விமர்சனம்
கள்ளிப்பால் ! நூல் ஆசிரியர் : கவிஞர் ஞா. தவப்பிரியா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. போதி பதிப்பகம், 8, காமராசர் தெரு, முத்தரையர் பதிப்பகம், புதுச்சேரி-9. விலை : ரூ. 100 ***** ஈழத்தமிழர்களுக்கு அடுத்தபடியாக தமிழ் உணர்வோடு வாழ்பவர்கள் புதுவைத் தமிழர்கள். ஹைக்கூ இலக்கியத்திற்கு புதுவைத் தமிழ் நெஞ்சன் தொடங்கி பெரிய கூட்டமே புதுவையில் இருக்கிறார்கள். ஹைக்கூ படைக்கிறார்கள். அந்த வரிசையில் கவிஞர் ஞா. தவப்பிரியா படைத்துள்ள ஹைக்கூ கவிதை நூல் கள்ளிப்பால். கள்ளிப்பால் என்ற வாசித்தவுடனேயே நம் மனக்கண்ணிற்கு பெண் சிசுக் கொலை வந்து விடுகின்றது. இந்த நூலை ‘செஞ்சோலைச் செல்வங்களுக்கு’ என்று காணிக்கை ஆக்கி உள்ளார். தன் உடலுக்கு தீயிட்டு உயிரை பலி தந்து முத்துக்குமார் வைத்த கோரிக்கையை நிறைவேற்றி இருந்தால் இலட்சக்கணக்கான தமிழர்கள் உயிரை காப்பாற்றி இருக்கலாம். ஆனால் அன்றைய மைய அரசு செய்யத் தவறியதால் தமிழினத்தை இழந்தோம். இப்படி பல்வேறு சிந்தனைகளை மலர்விக்கும் ஹைக்கூ. பற்றியது தமிழினத் தீ முத்துக்குமார் தமிழ்நாட்டில் தொலைக்காட்சித் தொடர் போதை என்பது மது போதையை மிஞ்சும் அளவிற்கு வளர்ந்து கொண்டிருக்கிறது. அதனை உணர்த்தும் ஹைக்கூ. தெளியாத போதை தமிழ்நாடு தொடர்கள். ஜல்லிக்கட்டு வேண்டும் என்று சொல்லும் தலைவர்கள் இறங்கி மாடு பிடிப்பார்களா? அவர்கள் உயிர் மட்டும் தங்கம். ஜல்லிக்கட்டு என்ற பெயரில் வருடா வருடம் சிலர் சாவதும், பலர் காயமுறுவதும் காளைகள் வதைபடுவதும் நடைபெற்று வருகின்றன. அவற்றை உணர்த்தும் ஹைக்கூ. அய்ந்தாகிறது ஆறறிவு மஞ்சுவிரட்டு. அரசியல் தலைவர் என்ன பேசுகிறார் என்பதை புரிந்து கொள்ளாமலே எது பேசினாலும் கை தட்டும் ஏமாளித் தொண்டர்கள் பற்றி எள்ளல் சுவையுடன் வடித்த ஹைக்கூ நன்று. எனதருமை ஆட்டு மந்தைகளே கைதட்டல்கள். உலகமயம், தாராளமயம், புதிய பொருளாதாரம் என்ற பெயரில் விவசாயத்தை நசித்து வருகின்றனர். இதனால் மனம் வெறுத்து விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். அதனை உணர்த்திடும் ஹைக்கூ நன்று. நீளும் தற்கொலை இந்திய உழவன் பசுமைப் புரட்சி. நாம் தூங்கும் போது உள்மனம் துங்குவது இல்லை. அந்த உணர்வை உணர்த்திடும் ஹைக்கூ. இயங்குகிறது உறங்கும் போதும் உள்மனம். இயற்கை பற்றி ஹைக்கூ வடிப்பதில் ஜப்பானியக் கவிஞர்களையும் வென்று விடுகிறார்கள் தமிழ் ஹைக்கூ கவிஞர்கள். விடியாதே பொழுதே பனித்துளி! சில இல்லங்களில் நாய்கள் ஜாக்கிரதை என்று கவனம் ஈர்க்கும் வண்ணம் எழுதி வைத்து இருப்பார்கள். படித்து இருக்கிறோம். அதனையும் எள்ளல் சுவையுடன் உணர்த்தி உள்ளார். நாய்கள் சாக்கிரதை உள்ளே நரிகள்! உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்கிறார்கள். உலகில் தமிழர்கள் இல்லாத நாடே இல்லை. ஆனால் அந்த தமிழருக்காக இலங்கையில் தனி நாடு அமைவது தள்ளிக்கொண்டே போகிறது. ஈழத்தமிழர் வாழ்வில் விடியல் வரவில்லை. ஏதிலி என்றால் தமிழன் அகராதி. நூலில் தலைப்பில் உள்ள ஹைக்கூ சிந்திக்க வைக்கின்றது. நவீன உலகில் பெண்கள் பல துறையிலும் அளப்பரிய சாதனைகள் நிகழ்த்தி வருகிறார்கள். ஆண்களை விட பெண்கள் ஒரு படி மேலே சென்று வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர். ஆனால் இன்றும் சிசுக்கொலை நடந்து வருவது வெட்கக்கேடு. மதுரையில் குப்பைத் தொட்டியில், பிறந்த சில மணி நேரம் ஆன குழந்தையை ரத்தம் கூட கழுவாமல் போட்டு விட்ட செய்தி படித்து அதிர்ந்து போனேன். ஆணாதிக்க சமுதாயம் இன்னும் திருந்தவில்லை. தாய்ப்பால் புட்டிப்பால் கள்ளிப்பால்! நிலையாமை என்ற வாழ்வியல் தத்துவத்தையும் சொற்சிக்கனத்துடன் உணர்த்திடும் ஹைக்கூ நன்று. மீண்டும் கூட்டுக்கு(ள்) மயானம்! மூடநம்பிக்கைகளைச் சாடும் விதமாகவும் ஹைக்கூ கவிதைகள் உள்ளன. அவற்றில் ஒன்று. விழுங்குகிறது பஞ்சாங்கப் பாம்பு தமிழனின் பண்பாடு. ஆராய்ச்சி மணி அடித்த பசுவிற்கு நீதி வழங்கிய மனுநீதிச்சோழன் வரலாறு படித்து இருக்கிறோம். இன்றைய அரசியல்வாதிகளோடு ஒப்பிட்டு வடித்திட்ட ஹைக்கூ. தலையில் விழுந்தது ஆராய்ச்சி மணி பணநாயகம்! நூலாசிரியர் கவிஞர் ஞா. தவப்பிரியா அவர்கள் மாணவர் தொண்டியக்கத்திலும், பூந்தோட்டம் சிறார் சிந்தனைச் சிறகத்திலும், தம் அறிவாற்றலை வெளிப்படுத்தியவர். கள்ளிப்பால் என்ற இந்த நூலின் மூலம் அறிவார்ந்த துணிச்சில் மிக்க ஹைக்கூ கவிதைகள் வடித்து வாசகர்களை சிந்திக்க வைத்துள்ளார். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

மரப்பாச்சி பொம்மைகள் ! – நூல் விமர்சனம்
மரப்பாச்சி பொம்மைகள் ! நூலாசிரியர் : கவிஞர் தியாக இரமேஷ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வாசகன் பதிப்பகம், 11/96, சங்கிலி ஆசாரி நகர், சன்னியாசிகுண்டு, சேலம்-636 015. விலை : ரூ. 75 ramesh.vdm@gmail.com ***** நூலின் அட்டைப்பட வடிவமைப்பு உள் அச்சு யாவும் நேர்த்தியாக உள்ளன. வாசகன் பதிப்பகம் வெளியீடாக வந்துள்ளது. பாராட்டுக்கள். நூலாசிரியர் கவிஞர் தியாக. இரமேஷ் அவர்களின் மூன்றாவது நூல் இது. முதல் நூல் - அப்படியே இருந்திருக்கலாம். இரண்டாவது நூல் - நினைவுப் படுக்கைகள். சிங்கப்பூரின் கவிமாலை அமைப்பின் துணைச்செயலர். பல்வேறு இதழ்களில் எழுதிய கவிதையை நூலாக்கி உள்ளார். நூலின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றது. மரப்பாச்சிப் பொம்மைகள் - தமிழக குழந்தைகளின் வாழ்வில், நினைவில், கலந்து விட்டவை, மறக்க முடியாதவை. முகநூல், வலைப்பூ என நவீன ஊடகங்களிலும் தடம் பதித்து வருபவர். தமிழருக்குப் பெருமைகள் சேர்த்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, சிறந்த கவிஞர் அறிவுமதி உள்ளிட்ட பலரின் அணிந்துரை நூலிற்கு அழகு சேர்க்கின்றன. ஞாயிறு என்றால் தூங்கி வழியும் பலருக்கு சுறுசுறுப்பு விதைக்கும் விதமான புதுக்கவிதை நன்று. ஞாயிறு தூங்கட்டும்! நமக்கு பல காத்திருக்கு தோழா! நாளும் கிழமையும் நமக்கேது ஞாயிறு தூங்கட்டும் நீ எழுவாய் தோழா! நீ எழுவாய்! உலகப் பொதுமறையான ஒப்பற்ற திருக்குறள் பற்றி வடித்த கவிதை மிக நன்று. அறம் பொருள் இன்பம் மூன்றிலும் சரம் சரமாய் கருத்துமாலைகளைத் தொங்கவிட்டு மனித வாழ்வின் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு தளமாய் நின்று உண்மையுரைத்த உலகம் போற்றும் உத்தமக் குறளே தேசிய நூல் .... மனித உயர்வுக்கு பலகுரல் தேவையில்லை ஒரு குறள் போதும். நூலின் தலைப்பில் அமைந்த கவிதை வித்தியாசமாக உள்ளது. மரப்பாச்சிப் பொம்மைகள். மரப்பாச்சிப் பொம்மைகள் மௌனம் கலைக்கின்றன தெள்ளத் தெளிவாய் தேர்தல் காலத்தில் அப்போது விளையாடியவர்கள் வீழ்கிறார்கள் வீழ்ந்தவர்கள் வெற்றி பெறுகிறார்கள் அய்ந்தாண்டுக்க்கு ஒரு முறை விடாமல் தொடரும் விளையாட்டில் மரப்பாச்சிப் பொம்மைகள் மறக்காமல் உண்(மை) பேசுகின்றன இது மரப்பாச்சி பொம்மைகளின் மை விளையாட்டு. சிலர் புதுக்கவிதை என்ற பெயரில் புரியாத புதிராக எழுதுவதும் உண்டு. அவர் எழுதிய கவிதைக்கு அவர் தெளிவுரை எழுதினால் மட்டுமே மற்றவருக்குப் புரியும் என்ற நிலையில் பூடகமாக நவீன கவிதை எழுதுவது உண்டு. ஆனால் நூலாசிரியர் கவிஞர் தியாக. இரமேஷ் அவர்கள் எழுதியுள்ள புதுக்கவிதைகள், படிக்கும் அனைவருக்கும் எளிதில் புரியும் விதத்தில் இருப்பது சிறப்பு. மூடிய கதவுகள் மூடிய கதவை மோதியும் திறக்கலாம், மௌனித்தும் திறக்கலாம், சில சமயம் மூடி இருப்பதால் கடந்து செல்வதும் நிகழ்கிறது வீழ்ந்து கிடந்தாலும் மூடிக் கிடப்பதால் விதையும் விருட்சமாகிறது ஈழத்தில் நடந்த தமிழினப் படுகொலைகள் பற்றி எழுதாத படைப்பாளி, படைப்பாளியே அன்று. மனசாட்சியும் மனிதாபிமானமும் உள்ள ஒவ்வொரு படைப்பாளியின் தலையாய கடமை ஈழம் பற்றி எழுதுவது. நூலாசிரியர் கவிஞர் தியாக. இரமேஷ் ஈழம் பற்றி எழுதி உள்ளார். முள்ளிவாய்க்கால் வேலிகளுக்குள்ளும் வேதனைகளுக்குள்ளும் சிக்கித் தவிக்கும் உறவுகளை எப்படிக் காப்போம் ஓட்டுக்காக மட்டுமே மழைத்தவளையாய் குரலெழுப்பி உங்களை உயர்த்திப் பிடிக்கும் ஒட்டுண்ணி அரசியல்வாதிகளால் தமிழீழம் எழாது கருப்பண்ண சாமியே! காக்க வா! காவல் காக்க வா! ஈழத்தமிழர்கள் வணங்காத சாமியே இல்லை. அனைத்து சாமியையும் கோவில் கட்டி வணங்குபவர்கள். எந்த சாமியும் வரவில்லை. காக்கவில்லை. எனவே கருப்பண்ணசாமியும் வரப் போவதில்லை. உலகத் தமிழர்களின் ஒரே நம்பிக்கை அய் நா மன்றம். அவர்கள் தான் காக்க வேண்டும் நம்மவர்களை, தமிழர்களை. புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் சிங்கப்பூர் பற்றி வடித்த கவிதை நன்று. உலகின் முதல் மொழியாம் தமிழை ஆட்சிமொழியாக வைத்து இருக்கும் நன்றிக்குரிய நாடு. வாழிய சிங்கப்பூர் உலகப் பெரும்புள்ளிகள் உற்றுநோக்கும் வைரப்புள்ளி உள்ளம் நினைத்தாலே குதூகலமாய் குதித்தாகும் துள்ளி காசு பணம் காணுமிடமெல்லாம் பொங்கு தமிழ் தமிழ்த்தாயின் மங்களம் காப்பதில் குங்குமச் சிமிழ் பல பொருள்களில் கவிதை பாடினாலும் காதல் பற்றி பாடுவது என்பது தனிச்சுவை. தனி ரகம். அந்த வகையில் பாடிய காதல் கவிதை. கண்ணால் காதல் மொழி பேசி! கண்ணால் காதல் மொழி பேசி! கடந்து சென்ற போதெல்லாம் கை கட்டி மனம் மூடி கிடந்து விட்டு நீ இல்லாத நேரத்தில் தொடர்ந்து தேடுகிறது உன்னிருப்பை பேதமையாய் மனம். மற்றொறு காதல் கவிதை தமிழ்ப் பண்பாடு காதலிலும் காக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாக உள்ளது. உனக்காக வருந்துகிறேன்! சகியே! உடல் மொழியால் காதல் வளர்க்காமல் வாய்மொழி மௌன மொழியால் வளர்த்த காதல் நம் காதல்! மறைந்து மறையாத மாமனிதர், எளியவர், இனியவர் காந்தியடிகள் பற்றிய கவிதை மிக நன்று. அண்ணல் காந்தி நள்ளிரவில் சுதந்திரத்தை நாடே கொண்டாட நாற்காலியைத் தேடியலையாமல் நவகாளியில் கலவரத்தைத் தடுக்க இதயம் துடிதுடிக்கத் தாயாய் இங்கும் அங்கும் அலைந்த இனியவன். பிரதமர் பதவியே தேடி வந்த போதும் அதனை ஏற்காமல் மனிதாபிமானத்தோடு மதக்கலவரம் தடுக்கச் சென்ற மாமனிதர் காந்தியடிகளிடமிருந்து இன்றைய அரசியல்வாதிகள், தன்னலமற்ற பொது நலத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். நூலாசிரியர் கவிஞர் தியாக. இரமேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள். இந்த நூலை எனக்கு அனுப்பி வைத்த இனிய நண்பர் கவிஞர் ஏகலைவனுக்கு நன்றி! . நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி www.eraeravi.com www.kavimalar.com http://www.eraeravi.blogspot.in/ . http://www.tamilthottam.in/f16-forum http://eluthu.com/user/index.php?user=eraeravi http://www.noolulagam.com/product/?pid=6802#response* இறந்த பின்னும் இயற்கையை ரசிக்க கண் தானம் !

மஞ்சப்பை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! – நூல் விமர்சனம்
மஞ்சப்பை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! இயக்கம் : திரு. N.இராகவன் ! தயாரிப்பு; திரு. N.லிங்குசாமி ! நடிப்பு : விமல், ராஜ்கிரண், லட்சுமிமேனன் ! ***** குடும்பத்துடன் பார்க்க வேண்டிய மிக நல்ல படம். மஞ்சப்பை கொண்டு செல்வது வழக்கொழிந்து நெகிழிப்பையில் வாங்கி வரும் காலம் இது. அது போல அரிய பொக்கிசங்களான தாத்தாக்களை மதிக்காத காலம் இது. இந்தப்படம் பார்த்தால் தாத்தாக்களின் மீதான மதிப்பு கூடும் என்று அறுதியிட்டு கூறலாம். இந்தப்படத்தின் மையக்கரு, முதியோரை மதிக்க வேண்டும் என்பதே. கிராமத்து மனிதர்கள் வெள்ளந்தியாக இருக்கிறார்கள். ஆனால் நகரத்து மனிதர்கள் இயந்திரமாகி விட்டார்கள். குறிப்பாக அடுக்காக வீடுகளில் வீடுகள் அருகே அருகே இருந்தாலும் மனிதர்களின் மனது தூரமாகி விட்டது. யாரும் யாருடனும் பேசுவது இல்லை . தாத்தாவாக வரும் (இராஜ்கிரண்) இந்த படத்தில் நடிக்கவே இல்லை. தாத்தாவாகவே வாழ்ந்து உள்ளார். இந்த படத்தின் வெற்றிக்கு பல காரணம். அதில் ஒரு முதற்காரணம் திரு. ராஜ்கிரண். வேறு பிரபல நடிகர் நடித்து இருந்தால் அதிக நடிப்பு காட்டி சொதப்பி இருப்பார்கள். ஆனால் ராஜ்கிரண் மிக இயல்பாக அதிகம் பேசாமல் நடித்து உள்ளார். இந்தப் படத்திற்கு தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகள் கிடைக்கும் என்பது உறுதி. படத்தின் இயக்குனர் திரு. இராகவன் அவர்களும், படத்தின் தொகுப்பாளர் திரு. தேவா அவர்களும் மதுரையில் உள்ள மதுரை கோட்ஸ் தொழிலாளர் நல பள்ளியில் பயின்ற மாணவர்கள். இவர்களுக்கு பாராட்டு விழாவை இவர்களது ஆசிரியர் பொன். சந்திரசேகரன் அவர்கள் முன்னின்று நடத்தினார். விழாவிற்கு சென்று இருந்தேன். இயக்குனர் திரு. இராகவன் அவர்கள் ஏற்புரையில் பேசும் போது என் வெற்றி தனிமனித வெற்றி அல்ல. கூட்டு வெற்றி. மானசீக குரு இயக்குனர் சற்குணம் மற்றும் தயாரித்த இயக்குனர் திரு. லிங்கசாமி, திரு. ராஜ்கிரண் என அனைவருக்கும் நன்றி சொல்லி விட்டு, என்னை உருவாக்கிய ஆசிரியர்கள், நண்பர்கள் குறிப்பாக என் தம்பி என் அண்ணன் போல வழிநடத்தியவர் என்றார். கடைசியாக எட்டு வருடங்கள் எனக்கு பொறுமையாக சோறு போட்ட மனைவிக்கு நன்றி என்ற போது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.பாராட்டு விழாவில் பொன்னாடைப் போர்த்தி பாராட்டி வந்தேன் தாத்தா பேரன் உறவு பற்றி இவ்வளவு விரிவாக விளக்கிய படம் மஞ்சப்பை மட்டும் தான். இந்தப்படம் பார்த்த ஒவ்வொருவருக்கும் அவரவர் தாத்தா நினைவு வரும் என்று உறுதி கூறலாம். எனக்கு என்னை உருவாக்கிய செதுக்கிய என்னுடைய தாய்வழி தாத்தா திரு. செல்லையா நினைவிற்கு வந்தார்கள். அவர் ஒரு விடுதலை போராட்ட வீரர். எனக்கு இன்றுவரை எந்தவித கெட்டப்பழக்கமும் இல்லை. நான் ஒழுக்கமாக வாழக் காரணம் அவர் வளர்த்த வளர்ப்பு .என்னுடைய தாத்தா என்னை நெறிப்படுத்தி வளர்த்தவர். அவரைப்பற்றிய மலரும் நினைவுகளை மலர்வித்தது இந்தப்படம். இது தான் இயக்குனரின் வெற்றி. திரு. ராஜ்கிரணின் வெற்றி. கதாநாயகன் விமல் நன்றாக நடித்து உள்ளார். காதலி தாத்தாவை ஊருக்கு அனுப்பி விடு என்று சொன்னால் இன்றைய இளைஞர்கள் உடன் ஊருக்கு அனுப்பி விடுவார்கள். ஆனால் இவரோ காதலி சொன்ன போதும் தாத்தாவை ஊருக்கு அனுப்ப மறுக்கிறார். காதலை விட பாசத்தை பெரிதாக மதிக்கிறார். தாத்தா மனிதநேயத்தோடு வாழ்கிறார். கடற்கரையில் அயல்நாட்டு பெண்ணிடம் வம்பு செய்யும் ரவுடிகளை தாக்குகிறார். அந்தப்பெண்ணின் கணவர் தான் அமெரிக்காவிற்கு சென்று வர உரிமை வழங்கும் அதிகாரி. அவர் பின்பு தாத்தாவின் பேரனுக்கு உதவுகிறார். உதவி செய்து வாழ் வேண்டும் என்று உணர்த்துகிறார். காதலித்து திருமணம் செய்ததால் இருதரப்பு பெற்றோர்களாலும் புறக்கணிக்கப்பட்ட, தனிமையில் அடுக்ககத்தில் வாழும் இணையர் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படுத்துகிறார் தாத்தா. கர்ப்பிணியாகிவிட்ட பெண்ணிற்கு வளைகாப்பு நடத்துகிறார். ஆதரவற்றோர் விடுதி மாணவ மாணவியரை வரவழைத்து கோலாகலமாக வளைகாப்பு நடத்தும் போது அந்த இணையர் மட்டுமன்றி படம் பார்க்கும் நம் கண்களிலும் கண்ணீர் வருவதை தவிர்க்க முடியவில்லை. இது தான் இயக்குனரின் வெற்றி. பெண்கள் ஆபாசமாக உடை அணிய வேண்டாம். நமது தமிழ்ப்பண்பாடு காக்கப்பட வேண்டும் என்பதையும் படத்தில் வலியுறுத்துகிறார். மதுரையிலிருந்து திரைஉலகம் சென்று வெற்றிக்கொடி நாட்டிய பிரபலங்களின் வரிசையில் மதுரை மண்ணின் மைந்தர்கள் இயக்குனர் இராகவன் அவர்களும், தொகுப்பாளர் திரு. தேவா அவர்களும் இடம்பிடித்து விட்டார்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். .

ஞாபக நடவுகள் – நூல் விமர்சனம்
ஞாபக நடவுகள் நூலாசிரியர் : கவிஞர் கூ.ரா. அம்மாசையப்பன் 97900 01558 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ஓவியா பதிப்பகம், 17-16-5A, கே.கே. நகர், வத்தலக்குண்டு, விலை : ரூ. 70 amsakiruba@gmail.com, vathilaipraba@gmail.com ***** அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிக நன்று. ஓவியா பதிப்பகத்தின் தரமான பதிப்பகத்தின் தரமாக பதிப்பாக வந்துள்ளது. இனிய நண்பர் வதிலைபிரபா அவர்களின் பதிப்புரை நன்று. முனைவர் வல்லவன் அவர்கள் வாழ்த்துரையை புதுக்கவிதையாகவே வழங்கி உள்ளார் திரு. சு. சண்முகம் தலைமையாசிரியர் அணிந்துரை மிக நன்று. கவிதை என்பது படிக்கும் வாசகர்களுக்கும் எழுதிய கவிஞர் உணர்ந்த உணர்வை உணர்த்துவதாக இருக்க வேண்டும். நூலாசிரியர் கூ.ரா. அம்மாசையப்பன் அவர்கள் சமுதாயத்தை கூர்ந்து நோக்கி உணர்ந்தவற்றை உள்ளத்தில் உள்ளது கவிதை என்று மனதில் பட்டதை கவிதையாக வடித்து நூலாக்கி உள்ளார்கள். பாராட்டுக்கள். நூலை காணிக்கையாக்கிய விதத்திலேயே வித்தியாசப்படுகிறார். “சிதறிக்கிடந்த சிந்தனைகளை சேகரிக்கத் தூண்டிய மனைவிக்கும், சேமிக்க உதவிய சிறு இடைவெளிக்கும்” என்று காணிக்கையாக்கி உள்ளார். கண்மாய், ஏரி, குளம் அனைத்தையும் ஆக்கிரமிப்பு செய்து விட்டு இன்று குடிநீருக்கு அல்லல்பட்டு வருகிறோம். அதனை உணர்த்திடும் கவிதை நன்று. ஆக்கிரமிப்பு அன்று / ஊருக்குள் ஏரி / செழித்தது நீரால் இன்று / ஏரிக்குள் ஊர் / மிதிக்குது நீரால் வரைமுறை இன்றி / வளைத்துப் போட்டதால் தலைமுறை தாண்டியும் / தண்டிக்கப்படுகிறார்கள் மக்கள் / தண்ணீராலும் / தண்ணீருக்காகவும்... நதிநீர் இணைப்பு என்பது நல்ல திட்டம். மாமனிதர் அப்துல் கலாம் அவர்கள் அடிக்கடி வலியுறுத்தி வருகிறார்கள். புதிதாக ஆட்சிப்பொறுப்புக்கு வந்துள்ளவர்கள். நிறைவேற்ற முன் வர வேண்டும். நிறைவேற்றினால் நாடு செழிக்கும். இணையட்டும் இந்தியா! இருப்பு பாதைகளால் / இந்தியாவை இணைத்தோம் தேசிய சாலைகளால் / தேசத்தை இணைத்தோம் தண்ணீரால் இணைத்து / எங்கள் கண்ணீர் துடைக்க மட்டும் காலதாமதம் ஆவது ஏன்? கண்ணீரோடு காத்திருக்கிறான் / தண்ணீரின்றி துடிக்கும் தமிழன். காதல் கவிதை எழுதித் தான் முதலில் கவிஞன் தன் பாதையை தொடங்குகின்றான். நூலாசிரியர் கவிஞர் அம்மாசையப்பன் அவர்களும் காதல் கவிதைகள் எழுதி உள்ளார். மனசு நீ கடந்து போகும் / ஒவ்வொரு முறையும் உடைந்து போகிறது / என் மனது / கண்ணடியாய். பெண் குழந்தை பாசம் மிக்கது நேசம் மிக்கது. பெண் பெற்று வளர்த்த பெற்றோர்கள் அனைவரும் உணர்ந்த ஒன்று. ஆனாலும் சிலர் கருவிலேயே கண்டுபிடித்து பெண் என்றால் கதை முடிக்கும் அவலத்தை அரங்கேற்றி வருகின்றனர். அவர்களுக்கான கவிதை. ஸ்கேன் உள்ளே இருப்பதை / ஊடுருவிப் பார்க்கவா...! உயிரைப் பறிக்கவா....? காந்தியடிகள் படத்தை பணத்தில் அச்சிட்டு மரியாதை செய்தனர். ஆனால் மதுவை ஒழிக்கச்சொன்ன காந்தியடிகள் படம் அச்சிட்ட பணம் கொடுத்து மது வாங்குகின்றனர். அஞ்சல்தலையிலும் காந்தியடிகள் படம் உள்ளது. எள்ளல் சுவையுடன் கவிதை வடித்துள்ளார். மகாத்மா! அன்றாடம் / அடிபடுகிறார் / அண்ணல் காந்தி அன்று / ஆங்கிலேயரிடம் / இன்று – அஞ்சல்காரரிடம். தினசரி செய்தித்தாளில் விபத்து என்று செய்தி வந்து கொண்டே இருக்கின்றன. கவனமின்மையும் மது அருந்தி வாகனம் ஓட்டுதலும் போட்டி மனப்பான்மையும் காரணமாகின்றன. சாலைகள் பயணத்துக்கு / மட்டுமே / பந்தயத்துக்கு அல்ல ஆள்வோர்கள் சரியாகத் திட்டமிடாத காரணத்தால் உலக வங்கியிடம் வட்டிக்கு கடன் வாங்கி கடன் சுமையை நாளுக்கு நாள் ஏற்றி வருகின்றனர். அதனை உணர்த்திடும் கவிதை ஒன்று. இந்தியா அன்று / மூன்று பக்கமும் / கடலால் சூழப்பட்டநாடு இன்று / நான்கு பக்கமும் / கடனால். மனிதாபிமானமுள்ள மனிதர்கள் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத கொடூரம் இலங்கையில் நடந்தது. லட்சக்கணக்கான மக்களை படுகொலை செய்த பின்னும் சுதந்திரமாக உலகை வலம் வருகின்றான். ஈழக் கொடுமைக்காக குரல் கொடுத்தவர்கள் தான் உண்மையான படைப்பாளிகள். அந்த வகையில் குரல் கொடுத்துள்ளார் நூலாசிரியர். எங்கே அனுமன்? அன்று / ஒற்றைச் சீதையை / சிறை மீட்க அசோகவனத்தையே / அக்னிக்கு இரையாக்கி அழித்த அனுமனே இன்று / நித்தம் நித்தம் / கொத்துக் கொத்தாய் செத்து மடியும் / ஈழத்து சோதரிகளின் அபயக்குரல் உன் / செவிகளில் விழவில்லையா? ஆன்மிகவாதிகளையும் சிந்திக்க வைக்கும் கவிதையாக உள்ளது. முத்தாய்ப்பாக தன்னம்பிக்கை விதைக்கும் விதமான கவிதை மிக நன்று. பாராடடுக்கள். முயற்சி! கவலையை மற! காற்றென பற! நிலமென பொறு / நெருப்பாய் எரி / நீராய் தெளி தடைகளை உடை / தாகம் தவிர் / சிறகை விரி சீக்கிரம் விழி / வியர்வை பொழி / வெற்றியே வழி நூலாசிரியர் கவிஞர் கூ.ரா. அம்மாசையப்பன் அவர்களுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள். -

பாரம் சுமக்கும் குருவிகள் – நூல் விமர்சனம்
பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் : கவிஞர் முனைவர் மரியாதெரசா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி 9, சிந்தாமணி தெரு, ஐயப்பன் சாலை, அடுக்ககம், செந்தில் நகர், திருமுல்லைவாயில், சென்னை-600 062. விலை:ரூ. 45. ***** இல்லற விழிப்புணர்வு கவிதைகளை லிமரைக்கூ வடிவில் வடித்துள்ளார்கள். நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரிய தெரசா அவர்கள் ஜப்பானிய மொழியில் மிக பிரபலமான ஹைக்கூ வடிவத்தை மட்டுமின்றி லிமரைக்கூ சென்ரியூ வடிவத்தையும் செம்மொழி தமிழ் உள்வாங்கி நிற்பது தமிழின் சிறப்பு. நூலாசிரியரின் புனைவு மிக நன்று. இந்த நூலை நல்ல பல கவிதைகள் எழுதி வரும் கவிஞருக்கு காணிக்கை ஆக்கி உள்ளார்கள். “இந்நூல் பாவெழுதி புகழ் கொய்த பூவை பாவைக்கு பாதை சொல்லும் கோதை ஆண்டாள் பிரியதர்ஷிணி அவர்களுக்கு” ஹைக்கூ லிமரைக்கூ சென்ரியூ தொடர்பாக யார் அணிந்துரை கேட்டாலும் இன்முகத்துடன் தந்து உதவிடும் இனிய நண்பர் மு. முருகேஷ் அவர்களின் அணிந்துரை நூலிற்கு சிறப்பு சேர்ப்பதாக உள்ளது. பாராட்டுக்கள். முனைவர் ப.ச. ஏசுநாதன் அவர்களின் அணிந்துரையும் மிக நன்று. இனிய நண்பர் கவிஞர் வசீகரன் பதிப்புரையும் நன்று. “பாரம் சுமக்கும் குருவிகள்” நூலின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றது. குடும்பத்திற்காக உழைப்பவர்களை குறீயீடாக குறிப்பிட்டு உள்ளார்கள். குடும்பம் பற்றிய புரிதல் இல்லாமல், விரைவாக காதல், விரைவாக திருமணம், விரைவாக மணவிலக்கு என்று, எல்லாம் விரைவாக நடைபெற்று விடுகின்றன. இந்த நூலில் உள்ள லிமரைக்கூ கவிதைகளை கடைபிடித்து நடந்தால், குடும்பத்தில் சண்டை சச்சரவு வராது. குடும்பம் ஒரு பல்கலைக்கழகமாகும். விட்டுக் கொடுத்தல் இன்பம் இதை புரியாது ஒருவருக்கு ஒருவர் தேடிக் கொள்கிறீர்கள் துன்பம் இணையர்கள் இணைபுரிவதன் காரணமாக அவர்கள் குழந்தைகளின் வாழ்க்கையும் பாதிக்கின்றது என்பதை உணர வேண்டும். உங்கள் கோபத்திற்கு பலி நீங்கள் பெற்ற பிள்ளைகள் இது நெஞ்சுக்கு தீராத வலி! காதல் திருமணம் புரிந்தோர் கடைசி வரை வெற்றிகரமாக வாழ்ந்து காட்ட வேண்டும். காதல் திருமணம் புரிந்தோர் பிரிவதால் காதலையே இகழ்கின்றனர் சிலர். எனவே கவனமாக பிரியாமல் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். வாழ்ந்து காட்ட வேண்டும் காதல் திருமணம் முறிவதா? நீ யோசித்து முடிவெடு மீண்டும்? மணவிலக்கு என்பது மிகவும் கொடியது. வாழ்நாள் முழுவதும் வடுவாக இருந்து வலி தரும். கூடிய மட்டும் பிரியாமல் கூடி வாழ்வதே நன்று. வேண்டாம் மணமுறிவு பணிவுடன் கரம் கூப்பி கேட்கிறேன் மேவட்டும் உந்தன் அறிவு குடும்பத்தலைவன் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும். அவசரம் கூடாது. கோபம் கூடாது என்பதை வலியுறுத்தும் லிமரைக்கூ . குடும்பத் தலைவன் நீ உன் கூட்டில் நீயே ஏன் வைத்து கொள்கிறாய் தீ பொறுமையின்றி பிரிய நினைக்கும் இணையர்களுக்கு புத்தி புகட்டும் விதமாக நூல் முழுவதும் நல்ல நெறி போதிக்கும் விதமாக வாழ்வியல் அறிவுரை கூறும் விதமாக கவிதைகள் வடித்துள்ளார். நன்றாக யோசித்துப் பார் குடும்பத்தை பிரிப்பது தவறு தவறு வாழ்க்கை அழகுத் தேர்! மணவிலக்கு வேண்டி விண்ணப்பித்த வழக்குகளின் எண்ணிக்கை மிகுதி. அவர்கள் இந்த நூல் படித்தால் இணைவது உறுதி!. ஏறாதே நீதிமன்ற படி குடும்ப சண்டை தெருவுக்கு ஏன் சமாதானமாய் பேசி முடி. ஆண் பெண் பேதமின்றி இருபாலருக்கும் நல்ல கருத்துக்களை வலியுறுத்தும் விதமாக படைத்து உள்ளார். உனதன்பு கணவன் தானே விட்டுக் கொடுக்க கற்றுக்கொள் வாழ்வை ஆக்காதே வீணே! ஆணாதிக்க சிந்தனையை அகற்றும் விதமாக படைத்துள்ளார் சென்ரியூ. மனைவி அடிமை அல்ல சமத்துவத்தால் முயன்றிடு நீ தம்பி மனைவி மனத்தை வெல்ல. சூழ்நிலை காரணமாக சினம் காரணமாக பிரிந்தவர்கள் இணையவும் ஆலோசனை வழங்கி உள்ளார். வாழ்க்கை என்பது கரும்பு புரிந்து பிரிவை துறந்து மீண்டும் குடும்ப வாழ்வுக்கு திரும்பு! பெற்ற பெற்றோரைப் பிரிந்து, கணவருடன் வாழ்ந்து வருபவர் பெண். அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டியது கணவனின் கடமை. தாய் தந்தையரை விட்டு உன்னோடு வாழ வந்தவள் மனைவி சொல் மனம் தொட்டு. இந்த நூலை திருமணத்தின் போது பரிசாக வழங்கலாம். இந்த நூல் படித்தால் இணையர்கள் பிரிய மாட்டார்கள். பிரிந்தவர்கள் இணைவார்கள். நூலாசிரியருக்கு பாராட்டுக்கள். .

சேது காப்பியம் (தலைமுறைக் காண்டம்) – நூல் விமர்சனம்
சேது காப்பியம் (தலைமுறைக் காண்டம்) நூலாசிரியர் : பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி கவியரசன் பதிப்பகம், 31(12) சாயி நகர் இணைப்பு, சின்மயா நகர், சென்னை-92. விலை : ரூ. 300 தொலைபேசி : 044 2479 8375 va_mu_sethuraman@yahoo.com ***** தமிழ்ப்பணி என்ற இதழின் சிறப்பாசிரியர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் பெரிய மீசைக்காரர் மட்டுமல்ல, பெரிய கவிதைக்காரர். இலட்சக்கணக்கில் பாடல்களை எழுதிக் குவித்திடும் கவிதைக் குற்றாலம். மரபுக்கவிதைகள் எழுதுவதில் முடிசூடா மன்னராக வலம் வருபவர். மரபுக்கவிதையில் சேதுகாப்பியம் வடித்துள்ளார். முன்னுரையில் தன் வாழ்க்கைச் சுருக்கத்தை மிக உருக்கமாகப் பதிவு செய்துள்ளார். பேராசிரியர் முனைவர் சோ.ந. கந்தசாமி அவர்களின் அணிந்துரை மிக நன்று. சிறப்புப் பாயிரம் எழுதியுள்ளார் புலவர் செந்தமிழ்ச்செழியன். கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் பதிப்புப் பா எழுதியுள்ளார். ஆதிமுதல் மனிதன் இந்தத் தமிழ் நிலத்தில் தான் தோன்றினான். ஆதிமுதல்மொழி தமிழே என்பதை மெய்ப்பிக்கும் விதமாக ஆதி-பரம்பரைப் படலம் என்று தொடங்கி ஒருங்கிணைப்புப்படலம் வரை 50 தலைப்புகளில் சேது காப்பியம் தலைமுறைக் காண்டம் உள்ளது. மரபுக்கவிதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக தமிழ்ச்செல்வனின் களஞ்சியமாக நூல் உள்ளது. பாராட்டுக்கள். என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில், ஏன் கையை ஏந்த வேண்டும் பிறமொழியில் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக பிறமொழிச் சொற்கள் எதுவுமின்றி அழகு தமிழில் அன்னைத் தமிழுக்கு அணி சூட்டி உள்ளார். தலைமுறைக் காண்டம் கதை வடிவம் படித்தவுடன் கவிதையைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் பிறக்கின்றது. முதன்மொழி தமிழ் இனம்மனிதம் சேது நாட்டில் ஏற்புடைத் தோற்றம் என்றால் மனஉணர்வு முதன்மொ ழிப்பேர் வாயுதிர்த்த தமிழே வைய நாவசை மொழிமூப் பாகும் அனல்குளிந்தே உயிர்கள் தோன்றி ஆள்மனிதன் தமிழே மூச்சாம்! உலகின் முதல் மனிதன் தமிழன். அவன் பேசிய முதல் மொழி தமிழ் என்பதை பாவாணர் ஆய்வு செய்து நிரூபித்தார்கள். அதனை கவிதை வடிவில் நிலைநாட்டி உள்ளார் பெருங்கவிக்கோ. ஆய்வு கருத்துக்களையும் அறிவியல் கருத்துக்களையும் மரபுக் கவிதையால் மாண்புடன் வடித்துள்ளார். நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம் உழவின் உன்னதம் உயர்த்தும் கவிதை நயம் மிக நன்று. உழத்தியர் ஓசை உழவர்கள் உழத்தி யர்கள் உழைக்கும் பாட்டாளி மக்கள் பழத்தோட்டம் கண்ட ஆவல் பறவைகள் துடிப்பாய்ச் சேர்த்தார் சுழல்கொஞ்சும் தண்டை ஓசை கலகலக் கும்பெண் கள்தாம் தொழவானம் பூமித் தாயைத் தொட்டிட்டே முத்த மிட்டாள்! எதுகை, மோனை, இயைபு என போட்டி போடுகின்றன. காப்பியம் முழுவதும் சொல் விளையாட்டு படிக்க இன்பம் தருகின்றன. இதுபோன்ற இன்பம் தமிழ்மொழி போல வேறு எந்த மொழியிலும் கிடைக்காது என்பது உண்மை. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக சேதுகாப்பியம் வடித்த நூலாசிரியர் பெருங்கவிக்கோ அவர்களுக்கு பாராட்டுக்கள். ஒருமைப்பாடு இந்து மக்கள் ஒருபு ரத்தில் இசுலாம் மக்கள் மறுபு ரத்தில் சொந்த பந்தம் சாதி மதம்சேர் துணை களோடு அமைந்தஅவ் மந்தை மக்கள் வாழும் நகரம் மாறு பாட்டில் ஒற்றுமை விந்தையான ஏற்றத் தாழ்வின் வேண்டும் ஒருமைப் பாடதோ! மதத்தை விட மனிதம் சிறந்தது என்பதை வலியுறுத்தும் விதமாக பாடல்கள் உள்ளன. மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகளை சாடி உள்ளார். ஆடிப்பாடி மகிழ்ந்து வாழ்ந்த வரலாறும் கவிதையில் உள்ளது. படிக்கும் போதே காட்சியாக மனக்கண்ணில் விரிகின்றது. நூலாசிரியரின் பெருங்கவிக்கோ அவர்களின் எழுத்தாற்றல் கவியாற்றல் வியப்பைத் தருகின்றது. முதியோர் நடனம் ஓரெட்டும் ஈரெட்டும் ஐயா ரெட்டும் ஓடோடி கற்றுதிண்ணை வளைய வந்தே பாரெட்டும் படிகுலவைக் கூத்தும் ஆடிப் பதினெட்டுத் தெம்மாங்கு வகைப்பா டல்கள் நீரெட்டிச் சுழல்கின்ற சுழற்சி போல நேர்நிமிர்ந்தே முன்பின்னும் மங்கை யர்கள் நாரெட்டி பூத்தொடுத்த மாலை கள்போல நாடிமுதி யர்தமும் நடனம் செய்வர்! கடல் போல உள்ள கவிதை நூலில் சிறு துளிகள் மட்டும் எழுதி உள்ளேன். இன்றைய நவீன உலகில் இளைய தலைமுறையினர் தமிழ் படிக்கவே யோசிக்கும் காலம் இது. இந்த நூல் படித்தால் தமிழ்மொழி அறிவு வளரும். தமிழின் வளம் புரியும். சங்க இலக்கியம் போல இந்த கவிதைக்கு மகாகவி பாரதியாரின் கவிதை வரிகள் படிக்கும் அனைவருக்கும் எளிதில் விளங்கும் வண்ணம் கவி வடித்த பெருங்கவிக்கோ பாராட்டுக்கள். **** -- . நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி www.eraeravi.com www.kavimalar.com http://www.eraeravi.blogspot.in/ . http://www.tamilthottam.in/f16-forum http://eluthu.com/user/index.php?user=eraeravi http://www.noolulagam.com/product/?pid=6802#response* இறந்த பின்னும் இயற்கையை ரசிக்க கண் தானம் !

கவிதைத் தேன் – நூல் விமர்சனம்
கவிதைத் தேன் நூலாசிரியர் : முனைவர் அ. கோவிந்தராஜுagrphd52@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி வானதி பதிப்பகம், 23, தீனதயாளன் தெரு, தி.நகர், சென்னை-17. விலை : ரூ. 120 ***** நூலாசிரியர் முனைவர் அ. கோவிந்தராஜ் அவர்கள் அப்துல்கலாம் அவர்களின் கரங்களால் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர். உடலால் மட்டுமன்றி உள்ளத்தாலும் உயர்ந்தவர், பண்பாளர், படைப்பாளர். “கவிதைத்தேன்” என்பது நூலின் பெயர் மட்டுமல்ல காரணப் பெயர் என்றே சொல்லலாம். தேன் போன்றகவிதைகளை திகட்டாமல் வழங்கி உள்ளார்கள். பாராட்டுக்கள். வானதி பதிப்பகத்தின் பெருமைமிகு பதிப்பாக வந்துள்ளது. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் மு.பொன்னவைக்கோ, தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் இருவரின் அணிந்துரையும் நூல் என்ற மகுடத்தில் பதித்திட்ட வைரகற்களாக ஒளிர்கின்றன. பள்ளியில் முதல்வராகப் பணிபுரிந்து வருகிறார். 40 ஆண்டுகள் ஆசிரியப் பணி அனுபவம் இருப்பதால் கல்வி பற்றியும் மாணவர்கள் பற்றியும் ஆழ்ந்து சிந்தித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் பிடிக்கும் விதமாக மிக எளிமையாகவும், இனிமையாகவும், வலிமையாகவும் கவிதைகள் வடித்து உள்ளார்கள். பாராட்டுக்கள். தன்னிடம் பயின்ற மாணவர்களுக்கு நூலை காணிக்கை ஆக்கி இருப்பது நூலாசிரியரின் உயர்குணத்திற்கு சான்றாகும். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கவிதையை நினைவூட்டும் விதமான கவிதை மிக நன்று. நூலைப்படி அறியாமை உனக்குள்ளே நூறுபடி அதைப் போக்க அன்றாடம் நூலைப்படி! தொடங்கையில் தோன்றுமது வருந்தும்படி தொடர்ந்துபடி இனிக்கும்படி ஊன்றிப்படி! கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது உண்மை. கல்வி என்பது மிகப்பெரிய சொத்து. பிறரால் களவாட முடியாத, அசையாத, குறையாத சொத்து. கல்வியின் மேன்மையை மென்மையாக உணர்த்தும் கவிதைகள் நன்று. உலகம் உனது காலடியில் அறுதி இட்டுச் சொல்லிடுவேன் அதனை மனத்தில் பதிவுசெய் உறுதி படிப்பில் இருந்திட்டால் உலகம் உனது காலடியில்! தமிழ்ப்பாட்டி அவ்வை ஆத்திச்சூடி எழுதினார். மகாகவி பாரதியாரும் ஆத்திச்சூடி எழுதினார். நூலாசிரியர் இனியன் அவர்களும் இனிமையாக ஆத்திச்சூடி எழுதி உள்ளார். ஆத்திச்சூடி சுற்றுச் சுழல் அடர்காடு பெருக்கு ஆறுகுளம் பேண் இயற்கையை நேசி ஈ கொசு எதிரி உரமிடல் தீது ஊருணி போற்று எருவிடல் நன்று ஏரியை காத்தல் செய் ஐந்திணை அறிக ஒருவுக நெகிழி ஓம்புக ஓசோன் ஔடதம் நன்னீர். மரபுக் கவிதைகள் அதிகம், புதுக்கவிதைகள் கொஞ்சம். இரண்டும் கலந்த கலவை தான் கவிதைத்தேன். தேன் உடலுக்கு நன்மை தரும். நோய் நீக்கும். இந்த கவிதைத்தேன் நூல் படித்தால் மனதிற்கு நன்மை தரும். மன இரும் அகற்றும். பதச்சோறாக புதுக்கவிதை ஒன்று. போதி மரம் ஓ .... யூகலிப்டஸ் மரமே வல்லவனுக்கு வானம் கைக்கெட்டும் தூரந்தான் என்னும் ஞானோதயம் என்னுள் பிறந்த்து உன்னால் தான் எனவே நீ எனக்குப் போதி மரம். ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்ப் பண்பாட்டை உணர்த்த வந்த உன்னத நோய் எய்ட்சு (ஏமக்குறை நோய்) இன்னும் முழுவதும் குணமாக்கும் மருந்தில்லாத நோய் பற்றி குறள் வெண்பா நடையிலான கவிதை மிக நன்று. ஏமக்குறை நோய் (AIDS) முப்பாலை நன்றாக முப்போதும் கற்றவர்க்(கு) எப்போதும் ஏதுமிலை காண். ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக உணர்த்திட்ட உலகப்பொதுமறை வழி நடந்தால் ஏமக்குறை நோய் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்பதை கவிதையில் நன்கு உணர்த்தி உள்ளார். காந்தியடிகளின் கொள்கை விளக்கமாக அமைந்த “மூன்று குரங்குப் பொம்மைகள்” தலைப்பிட்டு வடித்த கவிதை இன்றைய நவீன யுகத்தில் கடைபிடிக்க வேண்டிய கவிதை. மூன்று குரங்குப் பொம்மைகள் நல்லதை மட்டும் பார்ப்பதற்கு நமக்கு இரண்டு கண்ணுண்டு நல்லதை மட்டும் கேட்பதற்கு நமக்கு இரண்டு காதுண்டு நல்லதை மட்டும் பேசுவதற்கு நமக்கு நல்ல நாவுண்டு நல்லவராக வாழ்வதற்கு நல்வழி காட்டும் பொம்மையவை. கெட்டதை பார்க்காதே, கேட்காதே, பேசாதே என்பதை, நேர்மறையாக சிந்தித்து நல்லதை மட்டும் பார், கேள், பேசு என்று கவிதை வடித்தது மிக நன்று. வள்ளலார், வேண்டும், வேண்டும் என்று பாடிய நிகழ்வை நினைவூட்டியது. பள்ளி குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கியது மட்டுமன்றி இலவச மதிய உணவு வழங்கி பசியாற்றிய வள்ளலார் கர்மவீர்ர் காமராசர். மதிய உணவில் சாப்பிட்டு படித்து பல உயர் பதவிகள் அடைந்தவர் பலர். காமராசர் பற்றிய கவிதை மிக நன்று. படிக்காத மேதை! படிக்காத மேதை பழம்பெரும் தலைவரைப் பச்சைக் குழந்தையும் அறியும்! – பசும் புல்லுக்கும் நன்கு தெரியும்! சில கவிதைகளில் குட்டிக்கதைகள் சொல்லி நெகிழ வைத்துள்ளார் நூலாசிரியர் கவிஞர் இனியன். தொடர்ந்து எழுத வேண்டும். --


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedbacksupport