புத்தக விமர்சனம்

முறிமருந்து – எஸ்.செந்தில்குமார்
பதிப்பகம்: தோழமை வெளியீடு, 5டி, , பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர், சென்னை-78. பக்கம்: 384 விலை: ரூ.250 கிராமங்கள் என்றாலே வெள்ளந்தி மனிதர்கள், ஓடோடி வந்து உதவுபவர்கள், அன்பான எளிய மக்கள் என்பதாக பல பத்தாண்டுகளாக உருவாகி நிலைபெற்றிருக்கும் கருத்தை மாற்றிக்கொள்ளுங்கள் என்கிறது 'முறிமருந்து' நாவல். நவீன வாழ்க்கையில் நகரம், கிராமம் இரண்டின் மனித மனங்களும் குரோதமும், வன்மமும் நிறைந்ததாய் மாற்றப்பட்டிருக்கிறது. குறிப்பாய் சுயநலத்தின் திரண்ட வடிவமாக மாறிவிட்ட இன்றைய உறவுக்கூடு எப்படி சிதைந்து கிடக்கிறது என்பதையும், உறவுகளுக்கு இடையே ஏற்படும் வன்மம் வாழவிடாமல் ஊரைவிட்டே துரத்தி அடிப்பதையும் அழுத்திச் சொல்கிற கதை. கிராமத்தின் காதல், காமம் பற்றிய வர்ணனைகளும், உரையாடல்களும் வெளிப்படையும், ரசனையுமானவை. நான்கு பாகங்களாக விரியும் நாவலில் வாசிப்பு சுவாரஸ்யம் கொஞ்சம் குறைவு என்பதைத் தாண்டி பேசுபொருள் முக்கியமானது!

நன்றி : ஆனந்த விகடன்


முத்துக்குமார்: நெருப்பாய் வாழ்ந்தவன் – ஆ.கலைச்செல்வன்
வெளியீடு: தமிழ்தேசம், 87/31,காமராஜர் நகர் 3-வது தெரு, சென்னை-94. பக்கம் 160 விலை ரூ.60 இனம் காக்கத் தன்னை எரித்துக்கொண்ட தியாகி முத்துக்குமாருக்குச் சொந்த ஊரில் 'ஜெமினி பேரன்' என்று பெயர். முத்துக்குமாரின் தாத்தா பார்க்க ஜெமினிகணேசன் போலவே இருப்பாராம். 10-ம் வகுப்பில் முத்துக்குமார் எடுத்த மதிப்பெண் 466. தனித் தமிழ்ப் பேச்சால் 'புலவர்' என நண்பர்கள் கிண்டல் செய்ய, ஆசிரியரும் அதையே செய்ய... பாதியில் முடிந்தது படிப்பு. தமிழில் பிழைகள் முத்துக்குமாருக்குப் பிடிக்கவே பிடிக்காது. அவர் படித்த அத்தனை புத்தகங்களிலும் எழுத்துப் பிழைகள் அடிக்கோடிடப்பட்டு இருக்கும். வறுமையில் உழன்றாலும் உலகத் திரைப்படங்கள் அனைத்தையும் பார்த்துவிடுவார். 'பனைமரம்' என அவர் எழுதிய குறும்படத் திரைக்கதை இறுதி வரை எடுக்கப்படவில்லை. முத்துக்குமார் வாழ்வின் அறியப்படாத பக்கங்களை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் ஆ.கலைச்செல்வன்!

நன்றி : ஆனந்த விகடன்


ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (இரண்டு தொகுதிகள் ) – பாவை சந்திரன்
வெளியீடு: கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், 4, முத்துக்கிருஷ்ணன் தெரு, பாண்டி பஜார், சென்னை-17. பக்கம்: 908 விலை ரூ.700 ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு நிறைவுடன் வந்திருக்கிறது. அவர்களின் போராட்டத்தை அன்று முதல் இன்று வரை கவனித்து எழுதியிருக்கிறார் பாவை சந்திரன். இலங்கையில் நடைபெற்ற இன மோதல்கள், பிற குழுக்களின் வெளிப்பாடு, விடுதலைப் புலிகளின் வருகைக்குப் பின்னால் நடந்த விவரங்கள் என அனைத்தும் தொகுக்கப்பட்டு இருக்கின்றன. 'யூதர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும், செர்பியர்களுக்கும்கூட நாடு கிடைத்துவிட்டது. ஈழம் மட்டும் கிடைக்காமல் போனது எப்படி?' என ஆரம்பக் கேள்வியில் இருந்து உள்ளம் தொடும் படைப்பு!

நன்றி : ஆனந்த விகடன்


நாட்டுப்புறத் தெய்வங்கள் களஞ்சியம் – பேரா.சு.சண்முகசுந்தரம்
வெளியீடு: காவ்யா, 16 - இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், சென்னை-24. பக்கம்: 750 விலை ரூ.500 நாட்டுப்புறத் தெய்வங்களே நம் விருப்பத்துக்கு உரிய தெய்வங்களாக ஆதிகாலம் தொட்டு இருந்து வந்திருக்கின்றன. இவற்றுக்கு நாட்டார் சாமி, கிராமத் தேவதைகள், சிறு தெய்வங்கள் எனப் பல பெயர்கள் இருந்தாலும், நம் பண்பாட்டின் வேர்களாக, மக்களின் அடையாளமாக இருந்து வருவது உண்மை. ஏறத்தாழ 699 நாட்டுப்புறத் தெய்வகளின் உறைவிடம், சிறப்பு, அவற்றின் ஆளுமை, அவற்றைச் சாந்தப்படுத்தும்விதங்களை அற்புதமாகத் தொகுத்திருக்கிறார் பேராசிரியர் சண்முகசுந்த ரம். ஹைகோர்ட் மகாராஜா, வாழுமுனி, வல்லடிக்காரர், மூதேவி, மேல்மலை கருப்பு, மாங்குடி வேப்பிலைக்காரி என விசித்திரப் பெயர்களில் சில்லிடவைக்கும் பக்தித் தகவல்கள். உங்களின் சிறு தெய்வங் களை இதில் கண்டுபிடிக்க வாய்ப்பு இருக்கிறது!

நன்றி : ஆனந்த விகடன்


எண்ணெய் அரசியல்! கேர்ரி லீச்
தமிழில்: நா.தர்மராஜன் வெளியீடு: அடையாளம், 1205/1, கருப்பூர்ச் சாலை, புத்தாநத்தம்- 621 310. பக்கம்: 192 விலை ரூ.170 21-ம் நூற்றாண்டின் தொடக்கம் முதலே இயற்கை வளங்களை, குறிப்பாக எண்ணெய் வயல்களைக் கைப்பற்ற உக்கிரமான சண்டைகள் நடக்கின்றன. அமெரிக்கா எண்ணெய் வளம் மிக்க நாடுகளுடன் போரிடுவதைத் தொழிலாகக்கொண்டு இருக்கிறது. எண்ணெய் வளம் நிறைந்த பிரதேசங்களில் அமெரிக்க அரசின் கொள்கைகள் இதில் ஆராயப்படுகின்றன. படித்துக்கொண்டு இருக்கும்போதே அமெரிக்கா உலகின் எரிசக்தி உற்பத்தியில் 25 சதவிகிதம் நுகர்வு செய்யும் தகவல் நம்மைத் தாக்குகிறது. உலகின் எதிர்காலத்தைப் புரிந்துகொள்ள உதவும் நல்ல புத்தகம்!

நன்றி : ஆனந்த விகடன்


நினைவின் தாழ்வாரங்கள் – கலாப்ரியா
வெளியீடு: சந்தியா பதிப்பகம், ப.எண்: 57, 53--வது தெரு, 9-வது அவென்யூ, அசோக் நகர், சென்னை-83. பக்கம்: 384 விலை ரூ.225. தமிழ்க் கவிதை உலகில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் கலாப்ரியாவின் முதல் உரைநடை நூல் இது. சினிமாவும் திராவிட அரசியலும் சேர்ந்து, தமிழகக் கலாசார வரலாற்றை மாற்றி எழுதத் தொடங்கிய காலகட்டத்தில், அந்த மாற்றத்தில் பங்குகொள்ளும் ஓர் இளைஞனின் அகமும் புறமுமான கட்டுரைகள் நிரம்பிய நூல். ஒன்றாகச் சேர்ந்து படிக்கும்போது, ஒரு நாவல் உள்ளுக்குள் கலைத்துப் போடப்பட்டுக்கிடப்பதைக் காண முடியும். பெரும்பாலான கட்டுரைகளில் இடம்பெறுகிற அவரைக் கவர்ந்த சினிமா பாடல்கள் நமக்கும் நினைவுகளைத் திறக்கலாம்!

நன்றி : ஆனந்த விகடன்


கார்டூனாயணம்
பதிப்பாசிரியர்கள்: எம்.எஸ்.எஸ்.பாண்டியன்,வீ.எம்.எஸ்.சுபகுணராஜன், டிராட்ஸ்கி மருது.வெளியீடு: கயல்கவின் புக்ஸ், 16/25, இரண்டாம் கடல் போக்குச்சாலை, வால்மீகி நகர், திருவான்மியூர், சென்னை-41. பக்கம்: 272 விலை: ரூ.500 பேரறிஞர் அண்ணாவைப் பற்றிய கேலிச் சித்திரங்களும், சித்திரத் தொகுப்புக்களும் புத்தகமாகி வந்திருக்கின்றன. அரசியல் எழுச்சியில் கேலிச் சித்திரங்களின் பங்கு அதிகம். அரசின் செயல்பாடுகள், போக்கு, எல்லாவற்றையும் மக்கள் இந்த கேலிச் சித்திரங்களின் ஊடாகக் கவனித்தார்கள். முரசொலி, சுதேசமித்திரன், தி மெயில், நவசக்தி, போன்ற பத்திரிகைகளின் சித்திரங்கள் அண்ணாவே கேலிச் சித்திரங்களின் ரசிகர். அவரின் கார்டூனாயணம் கட்டுரை பொருத்தமாக இணைக்கப்பட்டு இருக்கிறது. திராவிட அரசியல் உருவாகி வந்த விதத்தைப் படிக்க, பார்க்க இதுதான் புத்தகம்!

நன்றி : ஆனந்த விகடன்


என் பெயர் சிவப்பு — ஓரான் பாமுக்
தமிழில்: ஜி.குப்புசாமி வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில்-1. பக்கம்: 664 = விலை ரூ.350 நோபல் பரிசு பெற்ற ஓரான் பாமுக்கின் புகழ்பெற்ற 'My Name is Red' நாவலின் தமிழாக்கம். நாவலின் இரு புள்ளிகளாக காதலும் குற்றமும் இடம் பெறுகின்றன. ஒரு புதிய கலையின் பக்கம் கலைஞர்கள் வசீகரிக்கப்படும்போது அவர்களுக்கு ஏற்படுகிற வளர்ச்சி,வீழ்ச்சிகள்பற்றிப் பதிவு செய்கிறது இந்த நூல். ஜி.குப்புசாமியின் தமிழ் மொழிபெயர்ப்பு கச்சிதம்!

நன்றி : ஆனந்த விகடன்


தலித் அரசியல் – அ.மார்க்ஸ்
வெளியீடு: எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி-2. பக்கம்: 344, விலை ரூ 200 தலித் அரசியல் குறித்து கூர்ந்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. தலித்தியம் எதிர்கொள்ளும் சம காலச் சவால்கள் முன்வைக்கப்படுகின்றன. தலித் அரசியல்: நேற்று இன்று நாளை என்ற கட்டுரையில், அவர்களின் நிலை கனிவுடன் பரிசீலிக்கப்பட்டு இருக்கிறது. அனைவரும் ஒன்றிணைந்து சமூகப் பிழைகளைக் களைய வேண்டிய அவசியத்தை முன்வைக்கிறார் அ.மார்க்ஸ்!

நன்றி : ஆனந்த விகடன்


இது வேறு மழை – பார்வதி
வெளியீடு: தணல் பதிப்பகம், 39/13, ஷேக் தாவூத் தெரு, ராயப்பேட்டை, சென்னை-14. பக்கம்: 64  விலை ரூ.45 பார்வதியின் சிறு கவிதைகள் தொகுக்கப்பட்ட நூல். நல்ல கவிதைகள் எழுதுவது ஒரு கலை. அதைத் தேடிக் கண்டுபிடிப்பது அனுபவம் என்பார்கள். அந்த அனுபவத்துக்கு கொஞ்சம் இடம் தருகிற மாதிரியான கவிதைகள் நிரம்பிய புத்தகம். சிறுசிறு உணர்வுகள், கோபம், ரசனை, துக்கம், பயம் எல்லாமே கவிதைகளாகி இருக்கின்றன. இன்னும் அனுபவ செறிவை அடைய அவர் முயற்சிக்க வேண்டிய இடங்கள் இதில் தெரிகிறது. 'மல்லிகையை முழம் போடுவதாலும் சில நேரங்களில் விரல்கள் மரத்துப் போகக் கூடும்! ' ரசனையான வேலையையும் தொழிலாகச் செய்தால் எவ்வளவு சலிப்பு பாருங்கள்!

நன்றி : ஆனந்த விகடன்Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedbacksupport