புத்தக விமர்சனம்

வீட்டுக் கணக்கு
விலைரூ.85 ஆசிரியர் : சோம. வள்ளியப்பன் வெளியீடு: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் வீட்டு பட்ஜெட்டை சமாளிக்கும் வழிகளை, பொருளாதார மேலாண்மை வல்லுனரான, சோம வள்ளியப்பன் எளிய நடையில் விவரித்துள்ளார். ‘குமுதம் சினேகிதி’யில், தொடராக வெளிவந்து, இல்லத்தரசிகளின் பாராட்டுகளை பெற்ற கட்டுரைகள், நூல் வடிவம் பெற்றிருக்கின்றன. வாசகரோடு பேசும் உத்தியில் எழுதப்பட்ட கட்டுரைகள், ‘அட’  போட வைக்கின்றன. வாழ்க்கை விளையாட்டில் வெற்றி என்ற கட்டுரை முதல், செலவு என்ன, பயன் எவ்வளவு என்பது வரை, மொத்தம், 20 கட்டுரைகள் உள்ளன.வீட்டு செலவுகளை எப்படி பிரித்து எழுத வேண்டும். தேவையில்லாதவற்றை வாங்குவதை நிறுத்துங்கள், நோஷனல் பர்சேஸ், பொருளுக்கு தான் விலை கொடுக்க வேண்டுமே தவிர, அதன் ‘பிராண்டு’க்கு இல்லை போன்ற, ‘டிப்ஸ்’ கள் இந்த நூல் முழுக்க நிறைந்திருக்கிறது. நம் வீட்டில் எதற்கெல்லாம், அனாவசியமாக செலவு செய்கிறோம் என்பதை, நம்முடன் இருப்பவர் கூறுவது போல அமைந்திருக்கிறது. கடன் வாங்காமல் வாழ விரும்புவோர், இந்த நூலை படித்து பின்பற்றலாம்! சி.கலாதம்பி

நான் ஏன் தலித்தும் அல்ல?

விலைரூ.275 ஆசிரியர் : டி.தருமராஜ் வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பறவையொன்றின் ஒரு சிறகு, ஒரு பக்கம் பறக்கச் சொல்கிறது. வேறொரு சிறகு, எதிர்ப்பக்கத்தில் பறக்கச் சொல்கிறது. இப்படி இரு சிறகுகளும், இரு வேறு திசைகளில் பறக்கச் சொல்லும் பறவையின் தவிப்பே, இந்தப் புத்தகத்தின் அனைத்துப் பக்கங்களிலும்.

‘தலித்’ என்ற அடையாளத்துடன் தன்னை இணைத்துக் கொள்வதை, ஆசிரியரின் ஒரு மனம் மறுக்கிறது. அதேநேரம் தலித்துகளின் மீது வன்முறையும் அவமானப்படுத்தல்களும் இன்னபிற ஒடுக்குமுறைகளும் பிரயோகிக்கப்படும் போது, பாதிக்கப்படுபவர்களின் துயரத்தில், சக உயிராகப் பங்கெடுக்கவும், அந்தப் போரில் தன்னையும் ஈடுபடுத்திக் கொள்ளவும் விரும்பி, தன்னை தலித் என்று உரக்க முன்வைக்க அவருடைய இன்னொரு மனம் உந்துகிறது. இந்த இரண்டு நிலைகளுக்கு இடையேயான ஊசலாட்டமே, நூலாசிரியரின் சுயம் சார்ந்த பிரச்னையாகவும், அவையே அவருடைய எழுத்துகளின் ஆதார அம்சமாகவும் விளங்குகின்றன.

சாதி ஆணவக்கொலை, மாட்டுக்கறி அரசியல் தொடங்கி ‘மெட்ராஸ்’ திரைப்பட அலசல், பூமணியின் ‘அஞ்ஞாடி’ தொகுப்பின் விமர்சனம், ‘மாதொருபாகன்’ விவகாரம் என பல்வேறு விஷயங்கள் பற்றி, நூலாசிரியர் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். ஒவ்வொரு கட்டுரையும் நன்கு தெரிந்த பிரச்னையை, முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் ஆய்வுக்கு உட்படுத்துகிறது.

சாதி ஆணவக் கொலைகளில் சாதி வீட்டுப் பெண்கள் (மேல்சாதிப் பெண்களை அப்படிக் குறிப்பிடுகிறார்) தலித் ஆண்களை விரும்புவதை, இறுக்கமான ஆணாதிக்க சாதியத் தளைகளில் இருந்து விடுதலை பெற எடுக்கும் முயற்சியாகச் சொல்கிறார். சாதி வீட்டுக்காரர்கள் அனைவரும், தமது வீட்டுப் பெண்களை மாமனுக்குக் கட்டிக் கொடுக்கத் தேவைப்படும் பிராய்லர் கோழிகளாக வளர்ப்பதாகவும் எல்லை தாண்டிச் சொல்கிறார். ராஜ் கவுதமன், நேர் பேச்சிலோ கட்டுரையிலோ, கொஞ்சம் மேல் நிலை அடையும் தலித் ஆண்கள், தலித் பெண்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதில்லை என்று சொன்னதாக ஞாபகம்.

எல்லா தலித் ஆண்களுக்குமே அவர்களைவிட மேல்சாதிப் பெண்கள் மேல் ஏற்படும் ஈர்ப்பிற்கு, சொந்த சாதிப் பெண்கள் மீதான தாழ்வான மனப்பான்மைதான் காரணமா என்ற கேள்வி இந்தக் கட்டுரையைப் படித்தபோது ஏற்பட்டது.

நிஜத்தில், காதலர்கள் எந்தவித அரசியல் சிந்தனைகளும் இல்லாமல் காதலுக்காகவே காதலிப்பவர்களாகத் தான் இருக்கிறார்கள். அரசியல் செய்பவர்கள் தான், சாதி கடந்த காதல்களை சாதிப் போரின் ஓர் அங்கமாகப் பார்க்கிறார்கள். ஆதிக்கம் செலுத்த விரும்பும் தரப்பே அப்படிப் பார்க்கும்போது, அடங்க மறுக்கும் தரப்பும், அப்படிப் பார்ப்பதில் தவறில்லை தான். ஆனால், இருதரப்பு அரசியல் சக்திகளும் களத்தில் இறங்காத இடங்களில், இந்த சாதி கடந்த திருமணங்கள், சம்பந்தப்பட்டவர்களால் ஓரளவுக்கு சுமுகமாக உள்வாங்கிக் கொள்ளப்பட்டிருப்பதையும் சமூக ஆய்வாளர்கள் கணக்கில் கொண்டாக வேண்டும். ஏனெனில் அதுவே நடைமுறையில் அதிகம். நூலாசிரியரின் தாத்தா – பாட்டி கூட அப்படியான சாதி கடந்த திருமணம் செய்து கொண்டவர்கள் தான்!

மாட்டுக்கறி பற்றிய கட்டுரையில் ஜே.என்.யு.,வில் நடத்திய கருத்தரங்கங்களில், மாட்டுக்கறியை ரகசியமாகச் சாப்பிட்டது பற்றிய குறிப்புகளைப் பார்க்கும்போது, இடதுசாரிக் கோட்டைகளில்கூட நீக்கமற நிறைந்திருக்கும் ஆதிக்க சாதி மதிப்பீடுகள், கொஞ்சம் நம்மை அதிர வைக்கின்றன.

அந்தக் கட்டுரையின் முடிவில், நூலாசிரியர் சொல்லியிருக்கும் விஷயமும் எழுப்பியிருக்கும் கேள்வியும் மிகவும் முக்கியமானது: (பெரும்பான்மையினரின்) சமையலறைகளில் தயாரிக்கப்படாத உணவுக்கு சமூக அங்கீகாரம் கிடையாது. கோவில்களில் பேசப்படாத பேச்சுகள் எவ்வளவு நாத்திக, பகுத்தறிவு மிகுந்ததாக இருந்தாலும் சமூகம் அதை வெறும் விடலைத்தனமாகச் சகித்து கொண்டு புறமொதுக்கி விடும்.

உயர் சாதி சார்ந்த மற்றும் பக்தி சார்ந்த மதிப்பீடுகளை அந்தக் குடும்பப் பெண்களிடம் கொடுத்திருப்பதே அந்த அமைப்பின் வெற்றிக்கு முக்கிய காரணம். இதைப் புரிந்துகொள்ளாத பொதுவுடைமை சித்தாந்தங்கள், பகுத்தறிவுக் கொள்கைகள், தீவிர கலை  இலக்கிய நடவடிக்கைகள் அனைத்தும் விடலைத்தனங்களாகவே நின்றுவிட்டனவா என்ற கேள்வி மிகவும் ஆழமானது. தீவிர மறுபரிசீலனையைத் தூண்டக்கூடியது.

‘எலைட்’ தலித்தின் குரலாக உருவாகி வந்திருக்கும் இந்தக் கட்டுரைகள், புதிய சிந்தனைகளையும் விவாதங்களையும் முன்னெடுத்துச் செல்பவையாக இருக்கின்றன. தொடர்புக்கு: writer.mahadevan@gmail.com – பி.ஆர்.மகாதேவன்


பறந்து மறையும் கடல்நாகம் – சீனக் கலாசார கட்டுரைகள்

விலைரூ.1000 ஆசிரியர் : ஜெயந்தி சங்கர் வெளியீடு: காவ்யா பதிப்பகம்

சீனாவின் பண்பாடு, பெண்களின் நிலை, உணவு முறைகள், அதிகார கட்டமைப்பு பற்றிய ஆழ்ந்த புரிதலை வெளிப்படுத்தும் நூல் இது.

கன்பூஷியஸ் வகுத்தளித்த கோட்பாட்டின் கீழ், மூதாதையர் வழிபாடு, ஆண் வாரிசை உருவாக்குதல், பெற்றோரை மதித்து பேணிக்காத்தல் ஆகிய மூன்று முக்கிய பண்பாட்டு அலகுகளைச் சுற்றி உருவாக்கப்பட்டதே சீனக் கலாசாரம்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின், சீனாவில் நிலவிய பிரச்னைகளை களைய, விவசாய துறையில் நவீன தொழில்நுட்பத்தை புகுத்தியது; இந்தியாவில் உருவான தியான முறை சீனாவில் வளர்ந்து, நிலைபெற்றது; வட்டார கதையாடல்கள் மூலம் உருவான மரபுவழித்தடங்களை இன்று வரை பின்தொடர்வது என, சீனா குறித்த அத்தனை தகவல்களையும் சுவாரசியமாகவும், நுணுக்கமாகவும், எளிய நடையில் தந்திருக்கிறார் நூலாசிரியர்.

மேலும், ‘அடங்கு, உன்னை கடைசியில் வை, கீழ்படி’ என்பன போன்ற மதக் கோட்பாடுகள், எப்படி சீனப் பெண்களை அடக்கி ஒடுக்கின என்பதை, ‘மரணித்த பாதங்கள், பெண்மொழி, நவீன சீனத்தில் பெண்ணின் நிலை’ ஆகிய கட்டுரைகளில் ஆழமாக குறிப்பிட்டுள்ளார்.

உதாரணமாக, சித்திர எழுத்தில் கூட பெண்கள் தங்களின் ஆற்றாமையையும், மன வேதனைகளையும் சக பெண்களிடம் பகிர்ந்து கொள்ள, ஆண்களுக்கு புரியாதபடி, பெண்களுக்கென தனித்த மொழியான, ‘நுஷூ’ மொழியை உருவாக்கியிருப்பது, அவர்கள்அடைந்த பெருத்த வலிகளை உணர வைக்கிறது.

கடுமையான சட்டங்கள் மற்றும் விதிகளால், அனுமதிக்கப்பட்ட ஊருக்குள்ளே வாழுதல்; மீறினால் கடும் தண்டனை. இடப்பெயர்வுகளையும் அதனால் அதிகரிக்கும் குற்றச் செயல்களையும், சமாளிப்பதே, ‘ஹூகோவ்’ முறையின் இன்றைய சவால்கள். ‘தி லாஸ்ட் டிரெயின்’ திரைப்படம், நகரத்தை நோக்கிய நகர்வில் சிக்குண்டிருக்கும் சீனர்களின் யதார்த்தத்தை அப்படியே பிரதிபலிக்கும். அதில், இளவயது பெண் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தான், நவீன சீன முகம். பண்பாட்டு கூறுகளின் அடிப்படையில் நடக்கும் வரலாற்று சிறப்புமிக்க சீனப் புத்தாண்டுடன், மூதாதையர் வழிபாட்டையும் சிறப்பாக காட்டியிருக்கிறார் நூலாசிரியர். ‘ஒன்று கூடல்’ விருந்துக்கு ஏன் சீனர்கள் முக்கியத்துவம் தருகின்றனர் என்பது தான், கலாசார வேரின் பிடியில் இருக்கும் சீன முகம். அதில் அசைந்தாடுகிறது நறுமண பூக்களின் ஒளி. கண்மணி


மனசுக்கு ஒரு செக்போஸ்ட்
விலைரூ.70 ஆசிரியர் : க.கார்த்திகேயன் வெளியீடு: நர்மதா பதிப்பகம் லட்சியம், உழைப்பு, அதற்கு தேர்ந்த முறை, அவை அழைத்துச் செல்லும் வாழ்விற்கு இந்த செக்போஸ்ட் தடையல்ல வழிகாட்டி.

கூவம் அடையாறு பக்கிங்ஹாம்

சென்னைக்கு தனித்த அடையாளங்கள், பல இருந்தாலும், காலத்தால் அழியாத அடையாளங்களாக இருப்பவை, கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் ஆகிய நதிகள் ஆகும். பயணிகளையும், உப்பு, மிளகு, மீன், விறகு ஆகியவற்றை படகில் சுமந்து ஓடிய, இந்த நீர்வழிப் பாதையில், இன்று சென்னையின் மொத்த கழிவுநீரும் ஓடுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் கலங்களிலிருந்து, கூவம்  ஆரம்பிக்கிறது என்ற இயற்கை சான்றையும், பல்லவர் மற்றும் சோழர் காலங்களில், கூவம் ஆற்றிற்கு தரப்பட்ட முக்கியத்துவம் குறித்த வரலாற்றையும் இந்நூல் விவரிக்கிறது. கூவம் பயணம் செய்யும் 72 கி.மீ., நீளத்தில், எந்த பகுதியில் இருந்து, நதி  சாக்கடையாகிறது என்பது குறித்தும், விவரிக்கப்படுகிறது. கடந்த, 1950ல், 49 வகை மீன்கள் வாழ்ந்த கூவம், இன்று, நான்கு மணி நேரம் கூட, மீன்கள் வாழ  தகுதியற்றதாக மாறிவிட்டது என, பல அதிர்ச்சிகரமான தகவல்களைத் தருகிறார் ஆசிரியர்.

‘தேம்ஸ் நதி’ போல், கூவம் மணக்குமா என்ற கேள்விகளுக்கான பதில், இந்த புத்தகத்தில் உள்ளது. அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் நதியின் வரலாறு, அந்த நதிகள் சாக்கடை போல்  மாறியதற்கான காரணங்கள், அவை, மீண்டும் உயிரோட்டமுள்ள நதியாக மாற என்ன செய்ய வேண்டும் உள்ளிட்ட, முக்கிய தகவல்கள் இந்த புத்தகத்தில் இடம்  பெற்றுள்ளன. சென்னையில் உள்ள ஆறுகள், அதன் பிறப்பிடம், தற்போதைய நிலை, அந்த ஆறுகளை உயிர்ப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள நினைக்கும் ஆய்வாளர்கள், மாணவர்கள், சூழலியலாளர்கள் மற்றும் சென்னை மீது தீராத காதல் உடைய சமூக ஆர்வலருக்கும், உதவும் ஆய்வு நூல். மு.அருண்குமார்


தவிக்குதே… தவிக்குதே…

தண்ணீருக்காக அக்கம் பக்க வீடுகளுக்கு இடையிலும் அண்டை மாநிலங்களுக்கு இடையிலும் தகராறு நடந்து கொண்டுதான் இருக்கிறது. நாடுகளுக்கிடையே தண்ணீருக்காக மூன்றாம் உலகப்போர் மூளும் என்று அறிஞர்கள் ஆருடம் சொல்கிறார்கள். குளங்கள் எல்லாவற்றையும் ஆக்கிரமிப்பு செய்தாகிவிட்டது; அடுக்குமாடி வீடுகளாகிவிட்டன. மழை நீரைத் தேக்கி வைக்க வழி செய்யப்படாததால் அது வீணாகக் கடலில்தான் கலக்கிறது. அரசாங்கம் தீட்டும் திட்டங்களை மட்டும் எதிர்பார்க்காமல், ஒவ்வொருவரும் மழை நீரைச் சேகரிக்கவும் அது வீணாவதைத் தடுக்கவும் முயற்சி செய்ய வேண்டும். தண்ணீரை விலை கொடுத்து வாங்கினாலும் அந்தத் தண்ணீர் சுத்தமானதா என்றால்... அது கேள்விக்குறிதான். ஜூனியர் விகடனில் வெளிவந்தபோதே வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ‘தவிக்குதே... தவிக்குதே...’ தொடர் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில்... ‘மகாராஷ்டிரா மாநில ஜல்னா மாவட்டத்தில் மட்டும் ஓர் ஆண்டுக்கு சுமார் 50 ஆயிரம் தண்ணீர் டேங்கர் லாரிகள் தயாரிக்கப்படுகின்றன’ என்னும் தகவல் நமக்குக் கவலையை ஏற்படுத்துகிறது. ‘ஒவ்வொரு முறை அரசு வளர்ச்சித் திட்டத்தை அறிவிக்கும்போதும் தமிழ்நாட்டில் ஓர் ஏரி பலிகொடுக்கத் தயார் செய்யப்படுகிறது என்பதே பொருள்’ என்று கூறுவதிலிருந்தே, நாளை நடக்கப் போகும் அபாயத்தை நம் கண்முன் நிறுத்துகிறார் நூல் ஆசிரியர் பாரதி தம்பி. தண்ணீர் மாசுபடுவதைப்பற்றி கவலைப்படும் நூல் ஆசிரியர் அரசியல்வாதிகளின் தில்லுமுல்லு வேலைகளையும் ஆங்காங்கே சுட்டிக்காட்டியிருப்பது கூடுதல் சிறப்பு. தண்ணீரை சேமிப்போம்! பூமியைப் பாதுகாப்போம்!


மயக்கம் என்ன

‘‘நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்... இன்னிக்கு ராத்திரிக்குத் தூங்க வேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்!’’ - குடிவாழ்வின் உண்மைச் சாட்சியமாக கண்ணதாசன் எழுதிவைத்த வரிகள் இவை. குடிப் பிரச்னையில் இருந்து மீள்வது பல நேரங்களில் சாத்தியமற்றதாகத்தான் இருக்கிறது. ‘இன்றையில் இருந்து குடிக்க மாட்டேன்; வருடப் பிறப்பிலிருந்து குடியை நிறுத்திவிட்டு புது வாழ்க்கை வாழப்போறேன்; பிறந்த நாள் பார்ட்டியோடு இந்த கட்டிங்குக்கு கட்டிங்க்; திருமணத்துக்குப் பிறகு குவார்ட்டருக்கு குட்பை’ என்கிற சபதங்களுக்குக் குறைவே இல்லை. ஆனால், ‘விடு மச்சி... சரக்கு அடிக்காட்டி சர்டிபிகேட்டா கொடுக்குறாய்ங்க?’ என யாரோ ஒரு நண்பனின் உசுப்பேற்றலில் மறுபடியும் மட்டையாகுபவர்கள் அதிகம். போதைப்பழக்கம் எத்தனைக் கொடுமையானது என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால், ‘இவ்வளவு கொடூரமானதா?’ என ஒவ்வொருவரையும் திகைக்க வைத்தது ‘மயக்கம் என்ன?’ தொடர். ஜூனியர் விகடனில் வாரம் இருமுறை இந்தத் தொடர் வந்தபோதுதான் குடியின் அவலமும் கொடூரமும் பொளேரெனப் புரிந்தது. ‘இன்றைய சமூகத்துக்குத் தேவையான மிக அவசியமான பணியை விகடன் கையில் எடுத்திருக்கிறது!’ என நெஞ்சில் கைவைத்துச் சொன்னவர்கள் நிறைய பேர். மதுவின் தீமையை, அதன் மிக மோசமான பாதிப்புகளை, குடும்பங்களின் சீரழிவை, சகிக்க முடியாத நோய்களை அறிவுலக நியாயங்களுடன் அழுத்தமாக விளக்கும் இந்தப் புத்தகம், குடியின் பிடியில் இருந்து இந்தச் சமூகத்தையே காப்பாற்றும் சாலச் சிறந்த கருவி!


புலித் தடம் தேடி

உலகத்தின் ஜனநாயக மிதியடியாகக் கிடக்கிறது இலங்கை. இனவெறித் தாண்டவங்களால் லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து, புத்தனின் தேசத்தையே ரத்த வாடைக்குள் தள்ளியிருக்கிறது சிங்கள வெறி. நடந்த கொடூரத்தின் வேதனையை நேர்நின்றுப் பார்க்கிற தைரியத்தில் அக்கிரம தேசத்துக்கே சென்று பட்ட ரணத்தை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறார் தம்பி தமிழ்ப் பிரபாகரன். போர் தொடங்கிய போதும், படிப்படியாக வெறி பெருகி பன்னாட்டுச் சர்வாதிகாரங்களுடன் சிங்கள அரசு தனது கொடூரப் போரைத் தீவிரமாக்கியபோதும், சுருட்டி வீசப்பட்ட கோரைப்பாயாக ஈழக்கனவு சிதைக்கப்பட்டபோதும், இன்று இழவு தேசமாக இலங்கை மாறிவிட்டபோதும்... இனப் பிள்ளைகளாக நாம் செய்தது வேடிக்கை பார்த்தது மட்டுமே! உலகத்தின் கொடூரச் சுடுகாடாக மாறி இருக்கும் இலங்கைக்கு எதிராக இப்போதுதான் சர்வதேச ஜனநாயக சக்திகள் வாய் திறக்கத் தொடங்கி இருக்கின்றன. இலங்கையின் இனவெறிக் கொடூரத்துக்கு எதிராகத் தொடங்கி இருக்கும் ஒருமித்த போரின் எழுச்சி நெருப்பாக இந்த நூல் நிச்சயம் விளங்கும். இலங்கை வாழ் தமிழர்கள் வாழ்ந்த இடங்கள், பட்ட துயரங்கள், கடந்துவந்த பாதைகள், எதிர்கொண்ட சூழ்ச்சிகள், புலிகளின் நினைவிடங்கள், வாழ்வாதாரத் தடயங்கள், மலையகத்துக்குத் தமிழகத் தமிழர்கள் வந்த பின்னணி, திலீபனின் கடைசித் தருணங்கள், சிங்களர் என்பதற்கான வரலாற்றுப் பின்னணி என இலங்கையில் ஒவ்வொரு நாளும் நடந்தேறிய நிகழ்வுகளை காட்சியாகவும் சாட்சியாகவும் ‘ஜூனியர் விகடனி’ல் தொடராக எழுதினார் தம்பி தமிழ்ப் பிரபாகரன். அந்த அக்னித் தொடரே இப்போது புத்தக வடிவில்! இடிந்தகரை மண்ணில் இன்றும் போராடிவரும் சுப.உதயகுமாரனின் அணிந்துரையும், கவிஞர் காசி ஆனந்தனின் கருத்தும் இந்த நூலின் வன்மைக்கு சாட்சியானவை. கண்ணீராக - கடுந்தீயாக உணர்வெழுச்சி கொள்ளத்தூண்டும் இந்த நூல் உலகத்தின் மனசாட்சியை உலுக்கும் பேராயுதம்!


சொல்வனம்

பத்திரிக்கை உலகில் யாரும் அசைத்துப் பார்க்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது ஆனந்த விகடன் என்றால், அதற்கு முழுமுதல் காரணம் வாசகர்கள்தான். ஆனந்த விகடனின் இதயத் துடிப்பான வாசகர்களுக்கு எனப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பகுதிதான் ‘சொல்வனம்’. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாசகர்களின் தரமான கவிதைகளை வெளியிட்டு வருகிறோம். தற்போது அந்தப் பகுதியில் இடம்பெற்ற அனைத்து கவிதைகளையும் தொகுத்து புத்தகமாக வடிவமைத்திருக்கிறோம். இதில் வெறும் கவிதைகள் மட்டுமல்ல, கலைநயமிக்க ஓவியங்களும், உணர்ச்சிமிகு புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. இவை கவிதை தரும் வாசிப்பு இன்பத்துக்கு நிகரான காட்சிப் பரவசத்தையும் தரும். ஆனந்த விகடனில் ‘சொல்வனம்’ பகுதியில் பிரசுரிக்கப்பட்ட ஒவ்வொரு கவிதைக்குப் பின்னாலும் வாசகனுடைய வலி, வேதனை, சந்தோஷம், துக்கம் என ஏதேனும் ஓர் உணர்வு வசீகரிப்பதே இந்தக் கவிதைகளின் சிறப்பு. எல்லா வாசகர்களும் கவிஞர்களாக இருக்க முடியாது. ஆனாலும், அவர்களுடைய கவித்துவத்தை வெளிக்கொணர்ந்து, அங்கீகரித்து கவிஞர்களாகத் தூக்கிப்பிடிப்பதில் பெருமைகொள்கிறது விகடன். இலக்கிய மரபுகளை உடைத்து, யதார்த்த மனிதர்களின் கவிதைகள் அடங்கிய தொகுப்புதான் தற்போது உங்கள் கைகளில் கவி வனமாக விரிந்து கிடக்கிறது. கவித்துவத்தின் மகத்துவத்தை உணர வாசிக்க வேண்டிய புத்தகம் இது. ஏனெனில், இவை கற்பனைக் கவிதைகள் அல்ல; சாமானிய மக்களின் ஆழமான உணர்ச்சிகளின் உயிரோட்டம்!


தோட்டக்காட்டீ (இலங்கையின் இன்னொரு முகம்)

‘‘பாப்லோ நெருடாவின் ‘காண்டே ஜெனரல்’ போல ஒரு வரலாற்றுக் காவியமாக வடிவம் கொள்ள வேண்டிய ஓர் ஆலவித்து இதன் கரு.. இரா.வினோத் என்ற இளம்படைப்பாளியின் மானுட நேயம் ஒரு கவிதை கோலம் கொள்கிற நிகழ்வை நீங்கள் படித்தால் உணர்ந்து கொள்வீர்கள்!’’ - கவிஞர் இன்குலாப், ஊரப்பாக்கம் ‘‘தோட்டக்காட்டீ’யை வாசிக்கும் ஒருவர் இலங்கை மலையக மக்களின் வரலாற்றினையும், இன்றைய யதார்த்ததினையும் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும். மலையகத் தமிழர் குறித்துக் கவிதை வடிவில் வெளிவந்திருக்கும் முதல் வரலாற்று ஆவணம் என்றும் குறிப்பிடலாம். இந்நூல் சிறுசிறு கவிதைகளைக் கொண்டிருந்தாலும் இலங்கை மலையக மக்களின் வரலாற்றினை உள்ளடக்கிய சிறுகாவியமாகத் திகழ்கின்றது!’’ -எழுத்தாளர் பொ.முத்துலிங்கம், இலங்கை “மலையகத் தமிழர்கள் பற்றிய அலட்சிய மனப்பான்மை மட்டுமின்றி அவர்களை இழிசனங்களாகப் பார்க்கும் தமிழ் தேசியவாதிகள் பலரிடையேயும், வடகிழக்கு மாகாணத தமிழர்களிடையேயும் பரவலாக இருந்ததை எடுத்துரைக்கின்றன, எனினும், ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனக் கொலைகளையும் கவிஞர் கருத்தில் கொள்ளாமல் இல்லை. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் போல இந்தக் கவிதைகளை ‘லயத்துப்பால்’ என வகைப்படுத்துவது மிகச் சரியானதே!’’ - எழுத்தாளர் எஸ்.வி. ராஜதுரை, கோத்தகிரிJeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedbacksupport